Translate

Saturday, 18 June 2016

ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சிநாதன் தேசத் தியாகியா ?




பாரதியார் புதுவை சென்ற சில நாட்கள் கழித்து எஸ்.என்.திருமலாச்சாரியும் அங்கு சென்றார். மீண்டும் புதுவையில் இந்தியா இதழை அச்சடிக்கத் தொடங்கினர். தமிழக அரசினர் 1910 இல் ‘இந்தியா இதழை தமிழக எல்லைக்குள் வரவிடாமல் செய்யவே, அது நின்று போயிற்று. இந்தக் காலகட்டத்தில் 1910 ஏப்ரல் 4 ஆம் தேதி அரவிந்தர் புகலிடம் தேடிப் புதுவை வந்து சேர்ந்தார். அதே ஆண்டு அக்டோபரில் வ.வே.சு. அய்யரும் புதுவை வந்து சேர்ந்தார். இவர்களை பாரதி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சந்தித்து உரையாடி வந்தார். இவர்கள் வேதம், உபநிடதம் இவற்றின் பொருட்களைப் புரிந்து கொள்வது குறித்து விவாதம் செய்து வந்ததாக செல்லம்மாள் கூறுகிறார்.

புதுவையில் இவர்கள் மீது போலீஸ் கண்காணிப்பு இருந்து வந்தது. 1911ல் வாஞ்சிநாதன் புதுவை சென்றார். ஆஷ்துரையைக் கொல்வதற்கு வ.வே.சு. அய்யர் வாஞ்சிநாதனுக்கு அங்கு ஒரு மாதம் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்தார். தினந்தோறும் விடியற்காலை 4 மணிக்குக் கரடிக்குப்பம் ஓடையில் நேராக குறிபார்த்துச் சுடுவதற்கு வ.வே.சு.அய்யர் வாஞ்சிக்குப் பயிற்சி கொடுத்துள்ளார்.

வாஞ்சிநாதன் ஆஷ்துரையைக் கொலை செய்ய முயன்றது பாரதிக்குத் தெரியும் என்பதைப் பலர் கூறியுள்ளனர். “புதுச்சேரி கிருஷ்ணப்பிள்ளை தோட்டம். நாற்பது பாரத மாதா சங்க வீரர்கள் ஒரு மரத்தடியிலே கூடியிருக்கின்றனர். 14.6.1911 அன்று காளி பூஜை நடக்கிறது. பாரதியின் காளிப்பாட்டு முழங்குகிறது. உள்ளே ஒற்றர் புகாமல் மாடசாமி தோட்டத்தைக் காத்து நிற்கிறான். பாரதியார் ஆவேசத்துடன் பாடுகிறார்...” என்று சுத்தானந்த பாரதி கூறியுள்ளதை பாரதி ஆய்வாளர் தொ.மு.சி.ரகுநாதன் சுட்டிக் காட்டியுள்ளார்.

வாஞ்சிநாதன் ஆஷைக் கொலை செய்வது என்று துணிந்து விட்டதை நீலகண்டர் ஏற்கவில்லை. “இதனால் புதுவையில் நீலகண்டருக்கும் வாஞ்சிக்கும் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன. கவி பாரதியாரும் வாஞ்சியின் பக்கம் தான் ஆதரவைத் தெரிவித்தார்” என்று நீலகண்டரின் தம்பி லட்சுமி நாராயண சாஸ்திரி கூறியுள்ளார்.

7.6.1911 அன்று ஆஷ் துரையைக் கொலை செய்து விட்டுத் தன்னையே சுட்டுக்கொண்டு இறந்த வாஞ்சிநாதனின் சட்டைப்பையில் பாரதியின் மறவன் பாட்டும், ஒரு கடிதமும் இருந்தன. எனவே இக்கொலைக்கு பாரதியாரும் உடந்தை என அரசு குற்றம் சாட்டியது.பாரதியைப் பிடித்துக் கொடுப்பவருக்கு ரூ.1000 பரிசு என அரசு அறிவித்தது.

ஆஷ் துரையை வாஞ்சிநாதன் ஏன் சுட்டுக் கொன்றான் என்பதை அவன் சட்டைப் பையில் இருந்த கடிதம் மூலம் அறிய முடிகிறது. அக்கடிதத்தில் பின் வருமாறு கூறப்பட்டிருந்தது:

“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜூனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை.

இப்படிக்கு

R. வாஞ்சி அய்யர்”

என்ற கடிதம் அவனது சட்டைப்பையில் இருந்தது.

ஆஷ் துரையைக் கொன்றதனால் வாஞ்சிநாதனைப் பெரிய தியாகி என்று பலர் கூறுகின்றனர். விடுதலைப் போராட்ட வீரன் வாஞ்சி என்றும் கூறுகின்றனர். ஆனால் வாஞ்சி எழுதியுள்ள கடிதத்தின் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இந்து தர்மம் ஆங்கிலேயர்களால் அழிகிறதே என்ற எண்ணத்தினால் ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிகிறதே தவிர உண்மையான தேச விடுதலையின் பொருட்டன்று என்பதேயாகும்.

- வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் இரண்டாம் அத்தியாயம் பக்கம் -13-29

நன்றி : "கீற்று" இணையதளம்


[][][]

3 comments:

  1. இதுதான் வீரர் வாஞ்சிநாதன் சட்டைப்பையில் இருந்து எடுக்கப்பட்ட கடிதம். திராவிட கழகத்தால் சோடிக்கபட்ட இட்டுக்கட்டபட்ட கதைக்கு இந்த கடிதம் பதில் சொல்லும்:
    -------------------------------------------------------------------------------------
    ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை (George V) முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும்பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை.

    இப்படிக்கு,

    R. வாஞ்சி அய்யர்

    R. Vanchi Aiyar of Shencotta

    திராவிடக்கழகம் இட்டுக்கட்டிய ஆதாரம் இல்லாக் கதை:
    -----------------------------------------------------------------------------------
    தென்காசி அருகே உள்ள கடையம் அக்கிரஹாரத்தில் ஆஷ் துரை குதிரையில் செல்லும்போது ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் பிரசவ வலியால் துடிப்பதைக் காண்கிறார். அவளை உடனடியாக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல அவர் முயன்றபோது அக்ரஹாரம் வழியாகச் செல்லக்கூடாது என பிராமணர்கள் தடுக்கிறார்கள். துப்பாக்கியைக் காட்டி மிரட்டி வழி எடுத்து ஆஷ் துரை வளை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். இந்த அடாத செயலுக்கு பழிவாங்கவே வாஞ்சி ஆஷ் துரையை சுட்டுக்கொன்றார் என்ற துண்டுப் பிரச்சூரத்த்கை மக்களிடையே விநியோகித்தது அன்றைய திராவிடக் கழகம்.
    ------------------------------------------------------------------------------------
    இந்நாட்டிற்கும் இந்நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்தே பழகிப்போன திராவிட ஈனார்களுக்கு இதை செய்ய கொஞ்சமும் கூசியிருக்காது. ஆனால் இவ்வாறு ஆதாரம் இல்லாத அபாண்ட பிரச்சாரத்தை வெளியிட்ட ஈனர்களை ஆதாரம் கேட்காமல் அப்படியே நம்பிய தற்குறிக் கூட்டத்தை என்னவென்று சொல்வது?

    ReplyDelete
  2. You stupid, trying to justify caste discrimination against a dalit pregnant women. You do not have heart?

    ReplyDelete