பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை பிரித்தாள்வதற்கும், பொத்தாம்பொதுவான இந்து மக்கள் மத்தியில் இந்துத்துவ விஷத்தை கலந்துவிட்டு,
தங்கள் அரசியல் ஆதாயங்களை அடைவதற்கும் பார்ப்பன சங்பரிவாரக் கும்பல் மிகுந்த
பிரயத்தனம் செய்து வருகிறது. சமீப காலமாக இது தொடர்பாக நாடு முழுவதும்
வன்முறைகளும் கடுமையான சர்ச்சைகளும், கண்டனங்களும் கிளம்பி
வரும் சூழலில் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.
பசுவின் மாமிசம் உண்ணும் பழக்கம் இந்துக்களுக்கு
இருந்ததா, இல்லையா.? அதை இசுலாமியர்கள் தான் இந்தியாவில்
அறிமுகப் படுத்தினார்களா.? பார்ப்பனர்கள் மாட்டுக் கறி உண்ட
வரலாறு என்ன.? என்பன போன்ற கேள்விகளுக்கும், உயர்சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயலும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளின்
பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்கும் விதத்திலும் வெளிவந்த மிக முக்கியமான ஒரு ஆய்வு
நூல் "The Myth of the Holy Cow.” இதனை
தில்லி பல்கலைகழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராக பணியாற்றி வந்த டி.என்.ஜா
என்று சுருக்கமாக அழைக்கப்படுகிற துவிஜேந்திர நாராயண ஜா, பல எதிர்ப்புகளுக்கிடையே எழுதி வெளியிட்டுள்ளார். அதனை ‘பசுவின் புனிதம்:
மறுக்கும் ஆதாரங்கள்’ எனும் தலைப்பில் வெ.கோவிந்தசாமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
அந்த நூலிலிருந்து மேற்கோள்கள் பல இங்கே எடுத்தாளப்பட்டுள்ளது.
தங்களது அரசியல் லாபத்திற்காக வரலாற்றைத் திரிப்பது, தலைகீழாய்ப் புரட்டுவது, உண்மைகளை மூடி மறைப்பது
போன்ற பித்தலாட்டங்களில் இந்துத்துவ பாசிச சக்திகள் முழுமூச்சாக ஈடுபட்டு
வருகின்றன. வரலாற்றுத் துறை மட்டுமல்ல, கல்வி, வேளாண்மை,
அரசியல் வளர்ச்சி போன்ற துறைகளை இச்சக்திகள் தங்கள் விஷ
கொடுக்குகளால் நச்சுப்படுத்தி வருகின்றன. வேதகாலங்களில் புனிதப்படுத்தும்
சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட ‘பஞ்சக்கவ்யம்’ (பசுவின் சாணம், மூத்திரம், பால்,
தயிர், நெய் ஆகியவற்றின் கலவை) இன்று இரசாயன
உரத்திற்கு மாற்றாக கூட பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. சனாதனமான வேத சடங்குகளை
விஞ்ஞான வழிமுறைகளாக மாற்ற இந்துத்துவச் சக்திகள் முயற்சிப்பதை எல்லா துறைகளிலும் பார்க்க
முடிகிறது.
மதகலவரங்களைத் தூண்டுவதற்கும், இந்து வாக்காளர்களை கவர்வதற்கும் இந்துத்துவ அமைப்புகள் இதுவரையில்
முழக்கமாகப் பயன்படுத்தி வந்த பசுவதைத் தடை சட்டம் என்ற ஆயுதம், நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தக்கூடிய அபாயகரமான சூழல் இன்று
ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பசுவின் ‘புனிதம்,’ பசுவதை, பால் சைவ உணவு போன்ற கருத்தாக்கங்கள்
குறித்த உண்மைகளை மக்களுக்கு இனங்காட்ட வேண்டியது அவசியமாகிறது.
சிந்து நதியைக் கடந்து இந்தியாவிற்குள் வந்த ஆரியர்களின்
வம்சாவழியினரான இந்து சனாதனவாதிகள், மாட்டிறைச்சியே
முக்கிய உணவாக உட்கொள்ளப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட வேதங்களையே, பசுவின் புனிதத்திற்கு ஆதாரமாகவும், மாட்டு
இறைச்சிக்கு எதிராகவும் மேற்கோள் காட்டுவது நகைப்பிற்குரியது. மேலும்
பன்முகத்தன்மை கொண்ட சமூகமான இந்தியாவில் பசுவை மட்டும் உயரிய விலங்காக உயர்த்திப்
பிடித்து, அனைத்து மக்கள் மீதும் அக்கருத்தை திணிக்க
முயல்வது சனநாயக விரோதப் போக்காகும்.
இன்றைக்கு நாட்டின் பலதளங்களில் மாட்டிறைச்சி சர்ச்சைப்
பொருளாக மாறிவிட்டிருக்கிறது. முஸ்லிம்கள், கிறித்துவர்கள்
மட்டுமின்றி பெரும்பான்மை இந்து மக்களும் மாட்டிறைச்சி உண்பதால் பசுவதை தடை
சட்டத்தை கடுமையாக அனைவரும் எதிர்க்கின்றனர்.
“நான் ஒரு ப்ராஹ்மின். மாட்டுக்கறியை
விரும்பி உண்கிறேன். நாகலாந்து, மிசோரத்திற்கு வந்து
பாருங்கள், பிறகு நடப்பது தெரியும்” என்று
பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ப்ராஹ்மணர்
மார்கண்டேய கட்ஜூ சவால் விடுத்தார்.
அதற்கு கடந்த 2015மே மாதம் 27ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக தலைவர் அமித் ஷா, “குஜராத்திற்கு வந்து மாட்டுக்கறி சாப்பிடுங்கள். அங்கு அது தடை
செய்யப்பட்டுள்ளது. அங்கு மார்கண்டேய கட்ஜூ சாப்பிட்டால், அப்புறம்
என்ன நடக்கும் என்று அவருக்கு தெரியும்” என்று பதிலுக்கு
குரைத்தது.
இதற்கு பதிலளித்த மார்கண்டேய கட்ஜூ, ”அமித் ஷா மாட்டிறைச்சி தடை செய்யப்பட வேண்டும் என்று நாகாலாந்து அல்லது
மிசோரம் சென்று அங்கு ஒரு பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாக சொல்ல முடியுமா.?
அப்புறம் என்ன நடக்கும் என்று தெரியும். அமித் ஷா ஒரு தைரியமான
மனிதன் என்றால், எனக்கு மிரட்டல் கொடுப்பதற்கு பதிலாக,
அவரை இந்த பரிசோதனை முயற்சியை செய்யட்டும்” என்று
பதில் சவால் விடுத்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர் முஸ்லிம் பெயர்தாங்கி, முக்தார் அப்பாஸ் நக்வி ’மாட்டு இறைச்சி இல்லாமல் வாழ முடியாதவர்கள், பாகிஸ்தான்
செல்லலாம்’ என்று கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு
பதிலளித்திருந்த மார்கண்டேய கட்ஜு, “நான் ஒரு இந்து
ப்ராஹ்மின். ஆனாலும், நான் மாட்டுக்கறி சாப்பிடுகிறேன்.
இனிமேலும் சாப்பிடுவேன். மாட்டுக்கறி சாப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது.?
உலகத்தில் 90% பேர் மாட்டு இறைச்சி
சாப்பிடுகின்றனர். அவர்கள் எல்லோரும் பாவம் செய்தவர்களா? மாடு
புனிதமானதாகவோ, நமது தாயாகவோ இருக்க முடியும் என்பதை நான்
மறுக்கிறேன். ஒரு விலங்கு எப்படி மனிதர்களுக்கு தாயாக இருக்க முடியும்? இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், மத்திய அமைச்சர்
முக்தார் அப்பாஸ் நக்வி உட்பட, 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள்
தான்..!” பொட்டில் அறைந்தாற்போல என்று கூறியிருந்தது
குறிப்பிடத்தக்கது.
காஞ்சி சங்கராச்சாரியார்..!
பசுவதை குறித்த இந்து மதத்தின் உண்மையான கருத்து தான் என்ன..? என்பதற்கு நமக்கு மிகவும் பரிட்யமான, மறைந்து விட்ட 'மகாப்பெரியவர்' என்று அக்கிரஹாரம் போற்றும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன சொல்கிறார்.? மற்றவர்கள் சொன்னால் அது சாதாரண குரல், இந்த பெரியவாளே சொன்னால், அது தெய்வத்தின் குரல் அல்லவா..? அந்தக் குரல் என்ன சொல்லுகிறது?
"தர்மத்துக்காகச் செய்ய வேண்டியது
எப்படியிருந்தாலும் பண்ண வேண்டும்; ஹிம்சை என்றும்
பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ருவதம் பண்ணுவதை சஹல ராஜ நீதிப் புத்தகங்களும்
ஒப்புக் கொள்ளவில்லையா.? அப்படி பசுஹோமம் பண்ணுவதிலே தப்பே
இல்லை. பிராமணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான வாஜபேயத்துக்கும் 23 பசுக்களே கொல்லப் படுகின்றன. சக்கரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அசுவ
மேதத்துக்குக்கூட100 பசுக்கள் தான் சொல்லியிருக்கிறது."
(தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி - யக்ஞம் எனும் தலைப்பில் விரிவாகக்
கூறப்பட்டுள்ளது)
பசு புனிதம் என்பதால்தான் சாப்பிட வேண்டும் என்கிறது
இந்துமத வேதங்கள். கூடவேகூடாது என்கிறார்கள் சங்பரிவார பயங்கரவாதிகள். ஒரு
நாளைக்கு ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல், வறுமை கோட்டுக்கும்
கீழே அதலபாதாளத்தில் கிடக்கும் ஏழைகள் நிறைந்த நாட்டில், அவர்களது
வயிற்றுப்பாட்டுக்கு வழியை சொல்லாமல், ‘இதை சாப்பிடாதே..’ ’அதை
சாப்பிடாதே..’ என்று சொல்ல என்ன அருகதை இவர்களுக்கு இருக்கிறது..? மீறி சாப்பிட்டால், மாட்டுக்காக மனிதனின் உயிரை
குடிக்கும் இந்தக் கயவர்களை எந்த இனத்தில் சேர்ப்பது..?
அம்பேத்கர்..!
சமஸ்கிருத மொழியில் பாண்டித்தியம் பெற்று, இந்து மதத்தை குறித்து விரிவாக ஆய்வு செய்த அம்பேத்கர் அவர்கள் கூட இது
பற்றி கருத்து சொல்லியிருக்கிறார். "வேத காலத்தில் பசு புனிதமானதாகவே
கருதப்பட்டு வந்தது. பசுவின் இந்தப் புனிதத் தன்மை காரணமாகவே அதன் இறைச்சியைச்
சாப்பிட வேண்டும் என்று வாஜசனேயி-சம்ஹிதையில் வலியுறுத்தப்பட்டுள்ளது." (நூல்: தீண்டப் படாதார் என்பவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்? பக்கம்
மகாராட்டிர அரசு வெளியீடு, 1948.)
இஸ்லாமியர் பசுவதை செய்பவர்களல்லவா.? மாட்டிறைச்சி
தின்பது இழிவல்லவா..? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு
பேராசிரியர், எழுத்தாளர் ஆ.மார்க்ஸ்
அவர்கள் ஒரு நூலில் பதிலளித்துள்ளார்.
"ஆட்டிறைச்சி சாப்பிடும் போது மாட்டிறைச்சி சாப்பிடுவது தவறானது
என்பதற்கு அறிவியல் ஆதாரம் எதுவுமில்லை. சொல்லப்போனால் ஆட்டிறைச்சியைக் காட்டிலும்
மாட்டிறைச்சியில் புரோட்டீன் முதலிய சத்துகள் அதிகம். பசு மாமிசத்தை இசுலாமியர்
மட்டுமல்ல, இந்து மதத்திலேயே பல பிரிவினர், ஆங்கிலோ இந்தியர், தாழ்த்தப்பட்டவர் எனப் பலரும்
சாப்பிடுகின்றனர். வெளிநாட்டவர் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவது
மாட்டிறைச்சியைத்தான். வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் முழுவதும் ‘பீப் பிரியாணி கிடைக்கும்..!’ என்கிற அறிவிப்பைப்
பலகைகளைப் பார்க்க முடியும்.
வரலாற்றில் மேய்ச்சல் மற்றும் வேட்டை வாழ்க்கையை மேற்கொள்ளும்
சமூகங்கள் கால்நடை இறைச்சி உண்பது வழக்கம். வேதக் காலத்தில் குதிரை, மாடு
முதலியவற்றைப் பலியிட்டுத் தின்றுள்ளனர். “உங்கள் பிள்ளைகள்
அறிவுடையோராகவும், வேதமறிந்தவராகவும், நீண்ட
ஆயுளைப் பெற்றவராகவும் இருக்க வேண்டுமானால் நெய் சேர்த்த மாட்டுக்கறி சாப்பிடுங்கள்..!”
என்று பிருகதாரண்ய உபநிடதம் (6-4-18) குறிப்பிடுகிறது.
இதற்கு ஆதி சங்கராச்சாரி உரையும் எழுதியுள்ளார். விவசாயச் சமூகங்களில்
கால்நடைகளின் தேவை இருந்ததால் மாட்டிறைச்சி சாப்பிடுவது இழிவானது என்கிற
மதிப்பீடுகள் தோன்றின. இந்தியாவில் வேத மதத்திற்கு எதிராக தோன்றிய புத்த-சமண
சமயங்கள் இதனை வலியுறுத்தின. எனவே பின்னாளைய பார்ப்பன மதமும் மாட்டிறைச்சி
சாப்பிடுவதை இழிவாக்கியது. இன்று விவசாயத் தொழில் நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்து
விட்டன. விவசாயத்தில் கால்நடைகளின் பங்கு குறைந்து விட்டது. எனவே உலகெங்கிலும் பல முன்னேறிய
சமூகங்களில் மாட்டிறைச்சி உண்ணப்படுகிறது..!” (ஆ.மார்க்ஸ் எழுதிய ‘இஸ்லாமியருக்கு
எதிரான கட்டுக்கதைகள்..!’ வெளியீடு: மக்கள் கல்வி இயக்கம்.
புதுவை.1994. பக்கம் 23.)
விவேகானந்தர்..!
சங்பரிவாரங்கள் போற்றும் இந்துமதத் துறவி விவேகானந்தர், மாட்டிறைச்சிப் பற்றிய தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். ‘இராமன்-சீதை’ மாட்டிறைச்சியை விரும்பி உண்டனர் என்று கூறும் விவேகானந்தர், மாட்டிறைச்சி உணவை நிறுத்தியதால் தான், இந்த நாடு
ஆண்மை இழந்து போனது என்றும் கூறுகிறார். “நான் சொல்வதைக்
கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால
பழக்கவழக்கத்தின் படி மாட்டுக்கறியை சாப்பிடாதவன் நல்ல இந்து அல்ல..!” (He is not a good Hindu who does not eat beef) (தொகுதி-3.
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர்
கிளப்பில்’ 1900ஆண்டு பிப்.2 அன்று
ஆற்றிய உரை.)
அமெரிக்காவில், ‘உலக மதங்களின்
நாடாளுமன்றம்’ என்ற அமைப்பு செயல்பட்டது (1893). அந்த அமைப்பில், விவேகானந்தர் ஆற்றிய உரையைத்தான்
சங்பரிவாரங்கள் இப்பொழுதும் சிலாகித்துப் பெருமை பேசுகின்றன. அந்த நாடாளுமன்றத்தின் அன்றைய தலைவராக இருந்தவர் டாக்டர் ஜான்
ஹென்றி பாரோஸ் எனும் பாதிரியார். அவர் எழுதிய ‘ஆசியாவில் கிறித்துவர்களின் ஆக்கிரமிப்பு’ என்ற நூலில், கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“மதங்களுக்கான நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு
முடிந்த பிறகு, நான் விவேகானந்தருடன் உணவு விடுதிக்கு
சாப்பிடச் சென்றேன்; அந்த உணவு விடுதி, நிகழ்ச்சி நடந்த ‘ஆர்ட் இன்ஸ்டிடியூட்’ என்ற நிறுவனத்தின் தரைதளத்தில் இருந்தது. ‘என்ன
சாப்பிடுகிறீர்கள்.? என்று அவரிடம் கேட்டேன். 'எனக்கு மாட்டிறைச்சி கொடுங்கள்..!’ என்று
விவேகானந்தர் கேட்டார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
19ஆம் நூற்றாண்டு இறுதியில் வடமாநிலங்களில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு,
பஞ்சத்தில் மனிதர்கள், கால்நடைகள் ஏராளமாகப்
பலியானபோது பார்ப்பனர்கள் பசு மாட்டைக் காப்பாற்ற ‘கோ ரக்ஷன்
சமிதி’ என்ற அமைப்பை உருவாக்கி, விவேகானந்தரிடம்
உதவி கேட்க வந்தனர். ‘மனிதர்களைக் காப்பாற்றாமல் மாடுகளைக் காப்பாற்ற
வந்துவிட்டீர்களா.?’ என்று கடுமையாகப் பேசி அவர்களை
விரட்டினார், விவேகானந்தர்.
விவேகானந்தரே மாட்டுக்கறி சாப்பிடுவதை எதிர்க்கவில்லை.
“என் ஆசான் ஸ்ரீ ராமகிருஷ்ன பரமஹம்சர்
காய்கறிகளையே உண்பவர். ஆயினும், அம்பிகைக்கு
நிவேதித்த மாமிசத்தையும் உண்டு வந்தார். ஒரு உயிரை கொல்லுவது பாவந்தான். ஆனால், ரசாயன முறைப்படி
மனிதனுக்கு மரக்கறி உணவு மட்டும் போதாது..!"
“உடலை வருத்தி உழைக்கும் மக்கள் மாட்டுக்
கறியை சாப்பிட அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் பக்தர்களாக வாழ விரும்புவோர்
மாட்டுக்கறி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்” (விவேகானந்தர்
உரை தொகுப்பு-தொகுதி 4.)
“ஒரு காலத்தில் ‘பிராமணர்கள்’
மாட்டுக்கறி சாப்பிட்டார்கள். ‘சூத்திரர்’களை திருமணம் செய்து கொண்டார்கள். ‘பிராமணர்’களுக்கு சூத்திரர்கள் மாட்டுக்கறி உணவை சமைத்தார்கள்” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 9.)
சேரன்மாதேவி குருகுலத்தில், ‘பிராமணர்’களுக்கு மட்டும் தனி இடத்தில் சாப்பாடு
போட்டு, பெரியாரின் எதிர்ப்பைச் சந்தித்த வ.வே.சு. அய்யர், இலண்டனுக்கு படிக்கச் சென்றபோது, பொருளாதார சிக்கனம்
கருதி, ‘மாட்டிறைச்சி’யை சாப்பிட்டதாக
ஒப்புக் கொண்டிருக்கிறார்.
வைதீகத்தில் ஊறித் திளைத்தப் பார்ப்பனர்கள் கூட, தங்களின் நலன் என்று வரும்போது எந்த சாஸ்திர மீறலுக்கும் தயாராகவே
இருக்கிறார்கள். 19ம் நூற்றாண்டில் சுவாமி விவேகானந்தர்
அமெரிக்காவில் தங்கியிருந்த போது மாட்டிறைச்சி சாப்பிட்ட சம்பவத்தை முன்பே
கண்டோம். இதேபோல், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் “உடல் நிலை சரியில்லாத போது மருத்துவர் மாட்டிறைச்சி சூப்பை
பரிந்துரைத்தால் அதை சாப்பிடுவதற்கு தயங்கவோ, அதைப் பற்றி கேள்வி எழுப்பவோ செய்யாத
‘ஆச்சார இந்துக்களின்’ இரட்டை நிலைப்பாட்டை கண்டித்து மகாத்மா காந்தி கூட
பேசியிருக்கிறார்.
பசுவை குறித்து இந்துமத வேதங்கள்-புராணங்கள் என்ன தான் சொல்கிறது..?
‘(குதிரை வேள்விகளில்) அவர் (Adhvaryu) பசுவை (அதாவது பசுக்களை) பிடித்துக்
கொள்கிறார். பசுதான் படையல் பொருள். (இதன் பயனாக) அவர் (வேள்வி நடத்துபவர்) படையல்
பொருளை அடைந்து விட்டார். நிச்சயமாக பசு உணவுப் பொருள் தான். (இறுதியாக) இவர்
இவ்விதமாகப் பெறுவது உணவுப் பொருளே.!” (‘’.gam alabhate; yajno vai gauh;
yajnam eva labhate; atho annam vai gaub; annam evavarundhe..’’ (Taittiriya
Brahmana, III,9.8.2-3 (Anandasrama – Sanskritgranthavalih 37, vol.III,3rd edu.,
Poona.1979) English translation by Paul-Emile Dumont.,
Proceedings of the American Philosophical Society, 92.6 (December 1948),
p.485.)
1832 இல் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக சம்ஸ்கிருத பீடத்தின்
முதல் தலைவராக பொறுப்பேற்றவரும், மற்ற ஏகாதிபத்திய
அறிஞர்களைப் போலல்லாமல் இந்திய சிந்தனை மரபை மதித்தவருமான ஹெஜ். ஹெஜ். வில்சன்,
“கோமேதம் அல்லது அஸ்வமேதம்- அதாவது பசுக்களையும், குதிரைகளையும் உயிர்பலி தருவது- தொடக்கக்கால இந்து சடங்குகளில் பொதுவான
நடைமுறையாக இருந்திருக்கிறது..!” என்று பத்தொன்பதாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதியுள்ளார்.
வங்களா மறுமலர்ச்சியால் உருவானவரும், ரவீந்தரநாத்
தாகூரின் மூத்த சகோதரர் ஜோதீந்திரநாத் தாகூரின் நெருங்கிய நண்பருமான ராஜேந்திரலால்
மித்ரா, இந்திய அறிவுத்துறைக்கு முக்கிய பங்காற்றியவர். ‘வாழ்ந்து வரும் இந்தியவியல் அறிஞர்களில் மிகச் சிறந்தவர்..!’ என்று மாக்ஸ் முல்லராலும், ’அன்புக்குரியவர்,
கவிதையின் குழந்தை’ என்று ரவீந்தரநாத்
தாகூராலும் பாராட்டப்பட்ட அவர், “பசுக்களை உயிர்ப்பலி
தருவதும், அதன் இறைச்சியை உண்ணும் நடைமுறையும்
இந்தோ-ஆரியர்கள் மத்தியில் நிலவி வந்திருக்கிறது..!” என்ற
கருத்தை ‘ஜேர்னல் ஆப் ஆசியாடிக் சொசைட்டி ஆப் பெங்கால்’
என்ற இதழில் மறுக்க முடியாத சான்றுகளுடன் பதிவு செய்திருக்கிறார்.
வில்லியம் குருக் என்ற ஆங்கில அரசு ஊழியராக இருந்த புகழ்பெற்ற காலனிய
இனவரைவியல் அறிஞர் 1894 ஆம் ஆண்டு வெகு மக்களின் சமய நம்பிக்கைகள்,
நடைமுறைகளோடு தொடர்புகொண்ட இனவரைவியல் தகவல்களைச் சிறப்பாக
தொகுத்திருந்தார். அதில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் பழங்காலந்தொட்டே
நடைமுறையில் இருந்ததையும், தான் வாழும் காலத்திலும்கூட அது
தொடர்ந்து இருந்து வருவதையும் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். (‘இந்தியாவில் பசுவிற்கு அளிக்கப்படும் மரியாதை’ டபிள்யு.குருக்.
போல்க்லோர், XXIII, (1912) பக்கம் 275-306.)
மகாமகோபாத்யாயா பி.வி. கானே
எனும் பாரதரத்னா பட்டம் பெற்ற ஒரே சமஸ்கிருத அறிஞர், வைதீக
மராட்டிய பார்ப்பனர். அவர் 1940களில் ‘தர்மசாஸ்திரங்களின்
வரலாறு’ என்ற அழியாப்புகழ் கொண்ட ஐந்து தொகுப்புகளை
வெளியிட்டார். அதில் பசு வதை குறித்தும், மாட்டிறைச்சி
பரவலாக உண்டு வந்தது குறித்தும் வேதம் மற்றும் தர்மசாஸ்திர நூல்களிலிருந்து
ஆதாரங்களை அடுக்கியிருந்தார். (‘பசுவின் புனிதம்: மறுக்கும்
ஆதாரங்கள்.’ பக்கம் 22.)
இந்திய தொல்லியல் ஆய்வுப்பணிகளை ஆழ்ந்த சம்ஸ்கிருத புலமையோடு
ஒன்றிணைத்த ஹெச். டி. சங்காலியா, பண்டைய இந்தியாவில் மாட்டிறைச்சி
உண்ணப்பட்டு வந்ததற்கு இலக்கிய, தொல்லியல் ஆதாரங்களை
எடுத்துக்காட்டியிருக்கிறார். (‘வரலாற்றில் பசு’ ஹெச். டி. சங்காலியா, செமினார், 93 (1967).)
சமஸ்கிருதப் புலமையில் நிகற்றவரான லட்சுமன் சாஸ்திரி ஜோஷி, தொடக்ககால
இந்தியாவில் மாட்டிறைச்சி உள்பட இறைச்சி உண்ணும் பழக்கம் நடைமுறையில் இருந்து
வந்ததாக மிகத் தெளிவான ஆதாரங்களை தர்மசாஸ்திர நூல்களிலிருந்து எடுத்துக்
காட்டியிருக்கிறார்.
‘பண்டைய இந்தியாவில் பசு கொல்லப்பட்டதா.?’ என்ற நூலின் முன்னுரை. கொஸ்ட்75, (1972) பக்கம் 83-87.
கீதா பிரஸ்ஸால் (கோரக்பூர், தேதி
குறிப்பிடப்படவில்லை)
ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியிலிருந்து வந்த இந்தோ-ஆரியர்கள் அல்லது
வேதகால ஆரியர்கள் ஏறத்தாழ மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள்
குடிபெயர்ந்தார்கள் என்ற பொதுக்கருத்து நிலவுகிறது. மேய்ச்சல் நில நாடோடி வாழ்க்கை, புராதன
விவசாயம், விலங்குகளையும்,
கால்நடைகளையும் உயிர்ப்பலி தரும் நடைமுறை உள்ளிட்ட சமய நம்பிக்கைகள், சடங்குகள் என இந்தோ-ஐரோப்பியர்களது பல்வேறு பண்புகளை அவர்கள் தங்களுடன்
கொண்டு வந்தார்கள். இவையனைத்தும் தான் இந்தியாவில் அவர்கள் உணவுப் பழக்க
வழக்கங்களின் மீது தாக்கம் செலுத்தின. (‘பசுவின் புனிதம்:
மறுக்கும் ஆதாரங்கள்.’ பக்கம் 25.)
ஐரோப்பிய முன்னோர்களிடமிருந்து மரபுரிமையாக பெற்ற மேய்ச்சல் நில
பொருளாதார வாழ்க்கை முறையையே அடிப்படையாக கொண்டுள்ள வந்தேறிகளான இந்திய ஆரியர்கள், அந்தக்
கலாச்சார-பண்பாட்டு அம்சங்களை அவர்களது சமய சடங்குகளிலும், விலங்குகளை
உயிர்பலி தரும் சடங்குகளிலும், உணவு பழக்க வழக்கங்களிலும்
பிரதானமாக காண முடியும். கால்நடைகளை உயிர்பலி தரும் ‘பசுபந்தா’
(PASUBANDHA) என்ற வேத காலச் சடங்கின் மூலக்கூறுகளை மொழியியல்
மற்றும் தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில் கிழக்கு ஐரோப்பாவின் தொடக்கக்கால ‘ஸ்டெப்பி’ புல்வெளிக் கலாச்சாரங்களில் காணலாம்.
நமக்கு பக்கத்திலுள்ள ஈரானில் (இந்த வழியாகத் தான் இந்தோ-ஐரோப்பியர்களின்
கிழக்குப் பிரிவினர் இந்தியாவிற்குள் நுழைந்தனர்..!) பண்டைய காலத்தில் விலங்குகள்
உயிர்ப்பலி தரப்பட்டதற்கு ‘அவெஸ்தாவில்’ தெளிவான ஆதாரங்களைப் பார்க்கலாம். (வரலாற்று காலத்திற்கு முற்பட்ட
காலத்தில் கி.முவில் தோன்றிய ஜோராஸ்டர் என்ற சமய ஞானியின் போதனைகள் அடங்கிய
தொகுப்பு நூல் தான் அவெஸ்தா)
வேதகால சொல்லான யக்ஞம் (வேள்வி) அவெஸ்தாவில்
யஸ்னம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கால்நடைகள், குதிரைகள்,
ஆடுகள், பன்றிகள் ஆகியன உயிர்ப்பலி தரப்பட்ட
செய்திகளை வேத இலக்கியங்கள் அடிக்கடி குறிப்பிடுவது போலவே அவெஸ்தாவும் 100 எருதுகள், 1000 கன்றுகள், 100 குதிரைகள், 10,000 ஆடுகள், 1000 ஒட்டகங்கள் பலிதரப்பட்ட செய்திகளை கூறுகிறது. (‘ஜென்ட்
அவெஸ்தா, செக்கர்ட் புக்ஸ் ஆப் ஈஸ்ட், XXIII.
Pt.2 பக்கம் 62-3, 79; அதே இதழ், IV பக்கம் 232-3. (‘பசுவின் புனிதம்: மறுக்கும்
ஆதாரங்கள்.’ பக்கம் 25-26.))
தொடக்கக்கால ஆரியர்களுடன் சில இந்தோ-ஈரானிய
தெய்வங்களும் குடிபெயர்ந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், காலப்போக்கில் அவை தங்கள் குணங்களையும், தோற்றங்களையும்
ஏதேனும் ஒரு வகையில் மாற்றிக் கொண்டன. அத்தெய்வங்களில் இந்திரன்,அக்னி, சோமன் ஆகிய மூவரை முக்கியமாகக்
குறிப்பிடலாம்.
ரிக்வேதத்தில் அதிகமான பாடல்களில் போற்றப்பட்டுள்ள இந்திரன், அவெஸ்தாவில்
இரண்டே முறை குறிப்பிடப்பட்டுள்ளான். அதுவும் பேயாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறான்;
தெய்வமாக அல்ல. விருத்திரகன் (விருத்திரனைக் கொன்றவன்) என்ற வேதப்
பட்டப்பெயரால் ரிக்வேதத்தில் எழுபது முறை இந்திரன் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.
பின்னர் இது விருத்திராக்னா என மருவியது. அவெஸ்தாவில் அடர் என்றிருந்தது இங்கு
அக்னியாக மாறியது. இங்கிருந்த சோமன் அங்கு ஹவோமாவாக மாறினான். அவெஸ்திய ஈரான்
தெய்வங்களுக்கும், வேதகாலத் தெய்வங்களுக்கும் இடையில்
காணப்படும் ஒற்றுமைகள் குறித்து பல ஆய்வாளர்கள் விவாதித்துள்ளனர்.
எடுத்துக்காட்டுக்கு பின்வரும் நூல்களைப் பார்க்கவும்:
(ஏ.ஏ.மேக்டோனல், வேதப் புராணங்கள், ஸ்டிராஸ்பர்க், 1897, இந்திய மறுபதிப்பு, இன்டாலிஜிகல்
புக்ஸ் ஹவுஸ், வாரணாசி, 1963;
ஏ.பி.கீத், வேதம்
மற்றும் உபநிடதங்களின் சமயமும், தத்துவமும், ஹார்வார்ட் ஓரியண்டல் சீரியஸ், 31, கேம்பிரிட்ஜ், மசாசு சூஸஸ்ட்ஸ், 1925, இந்திய மறுபதிப்பு, மோதிலால்
பனாரஸ் சிதாஸ் 1970;
லூசிஸ் ரெனோ, வேத இந்தியா, இந்திய மறுபதிப்பு,
இன்டாலிஜிகல் புக்ஸ் ஹவுஸ், வாரணாசி,1971.)
ஆரியர்களின் தெய்வங்கள் அனைத்துமே உயிர்ப்பலி தரப்பட்ட விலங்குகளின்
இறைச்சி மீது குறிப்பாக மாட்டிறைச்சியின் மீது பேரார்வம் காட்டியிருக்கின்றன.
ஆரியர்களின் மேய்ச்சல் நில வாழ்க்கையில் இந்தக் கால்நடைகள் மிகப் பெரிதாக
மதிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கடவுளுக்குப் படைக்கப்பட்ட படையலின்
எச்சங்களைப் பங்கு பிரித்துக் கொள்வதில் இவர்கள் பெரும் ஆர்வம் காட்டினார்கள்.
வேதச் சடங்குகளிலும், வேள்விகளிலும் பயன்படுத்தப்பட்ட பொருட்களைப்
பார்க்கும்போது ஒரு விஷயத்தை ஊகமாகப் பெற முடிகிறது. வேதகால மக்கள் தாங்கள் உண்ண
விரும்பிய பொருட்களையே கடவுளுக்குப் படையல்களாகப் படைத்தார்கள் என்பதுதான் அது.!
(‘பசுவின் புனிதம்: மறுக்கும் ஆதாரங்கள்.’ பக்கம்
27.)
வேதகாலக் கடவுளர்களிலேயே மிகப்பெரிய கடவுளான, சிற்றின்ப
பிரியனான இந்திரனுக்கு படைக்க எருதுகளின் இறைச்சி சமைக்கப்பட்டது குறித்து
ரிக்வேதம் அடிக்கடி குறிப்பிடுகிறது. ‘’அவர்கள் எனக்காக
பதினைந்து, இருபது எருதுகளை சமைத்தார்கள்..! என்று
ஓரிடத்திலும் (ரிக்வேதம் X,86. 14ab.) பசுமாட்டு
காளைகளை உண்டதாக மற்றோர் இடத்திலும் இந்திரன் கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
(ரிக்வேதம் X.28.3c.)
இந்திரனுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் கொண்ட அக்னிக்கு, “எருதும்,
மலட்டுப் பசுவுமே அவனது உணவாக இருந்தன..!” என்று
ரிக்வேதம் குறிப்பிடுகிறது. (ரிக்வேதம் VIII 43.11.) குதிரைகள் (அஸ்வம்), காளைகள் (ரிஷபம்), எருதுகள் (உக்ஷன்) மலட்டு பசுக்கள் (வசு), ஆட்டுக்கடா
(மேஷம்), போன்றவை அக்னி தேவனுக்கு பலியாக தரப்பட்டதாக
ரிக்வேதம் இயம்புகிறது. (ரிக்வேதம் X.91.14.ab.)
இறந்துப் போனவர்களைப் புதைப்பது குறித்துப் பேசும் ஒரு பாடலில், “ அக்னிக்குரிய
பங்கான ஆட்டை எரிக்க வேண்டும்; தீயிலிருந்து உடம்பைப்
பாதுகாத்துக் கொள்ள பசுவின் இறைச்சியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்..!” என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. (ரிக்வேதம் X.16.7.ah.)
மற்றும் (ரிக்வேதம் X.16.7.ab.)
பசுவைக் கொன்று, யாகங்கள்.! (யஜுர்
வேதத்தில்)
1. கோஸவம். (பசுமாடு காளைமாடு இவைகளைக் கொல்லும்
யாகம்)
2. வாயவீய ஸ்வேதபக. (வாயு வேதனைக்காக
வெள்ளைப்பசு யாகம்)
3. லத்ஸோப கரணம். (கன்றுக்குட்டியை கொலை
செய்து நடத்தும் யாகம்.)
4. அஷ்டதச பசு விதானம். (பதினெட்டு
பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்)
5. ஏகாதசீன பசுவிதானம். (பதினொன்று
பசுக்களை கொல்லும் யாகம்)
6. க்ராமாரண்ய பசு ப்ரசம்ஸா. (நாட்டிலும்
காட்டிலும் உள்ள பசுவைக் கொன்று யாகம் செய்தல்).
7. உபாகரண மந்திரம். (யாகத்தில்
கொல்லப்படும் பசுவைச் சுத்தி செய்யும் மந்திரம்).
8. கவ்ய பசுவிதானம். (பசு மாட்டைக்
கொன்று நடத்தும் யாகம்)
9. ஆதித்ய தேவ தாகபசு. (சூரிய தேவதைக்கு
பசு யாகம்)
-சிவானந்த சரஸ்வதி. 'மத விசாரணை நூல்.' பக்கம்-79,80.
கால்நடைகளை உயிர்ப்பலி தருகிற நடைமுறை ரிக்வேதத்தில் மட்டுமல்லாது
பிற்கால வேதநூல்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. கோபத பிராமணம் என்ற நூலில் மட்டும்
இருபத்தியொரு யக்ஞங்கள் (வேள்விகள்) பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திரனுக்கு
காளையும் (ரிஷபம்) மரூத்களுக்கு (MARUTS) (மனிதர்களாக பிறந்து,
தெய்வங்களாக வழிபடப்பட்டவர்கள் ரிக்வேத காலத்தில் அவ்வாறு
அழைக்கப்பட்டார்கள்) புள்ளிகள் கொண்ட பசுவும், அஸ்வின்களுக்கு
செந்நிற பசுவும் பலி தரப்பட்டன. மித்திரன், வருணன் ஆகிய
தெய்வங்களுக்கும் பசு பலி தரப்பட்டது. (ஜி.யு.நைட், ‘பிராமணங்களில் உயிர்ப்பலி’ பூனா யுனிவர்சிட்டி,
பூனா, 1975, அத்தியாயம் VI.
// ஆர்.எஸ்.சர்மா, ‘பொருளாதாய கலாச்சாரம்,’
பக்கம் 119, ஏ.பி.கீத், மேற்சொன்ன
நூல் பக்கம், 324-6.)
மாபெரும் வேள்விகளான அஸ்வமேதம், ராஜசூயம், வாஜபேயம்
போன்றவற்றிற்கு பல்வேறு விலங்குகளின் இறைச்சிகள்-குறிப்பாக பசு,காளை,எருது போன்றவற்றின் இறைச்சிகள் அவசியமானதாக
இருந்தன. இவற்றை நடத்துமுன் ஆரம்ப சடங்கான அக்னியதேயாவை நடத்துவதற்கு பசுக்கள்
கொல்லப்பட்டன. அதேபோல அஸ்வமேத வேள்வியின் இறுதி கட்டத்தில் இருபத்தியொரு மலட்டுப்
பசுக்கள் பலியிடப்பட்டன. (லூசிஸ் ரெனோ, மேற்சொன்ன நூல், பக்கம் 102, 109, ஆக்னியதேயா சடங்கு குறித்து காதக சம்கிதத்தில் (8.7 90.10) காணப்பட்டுள்ள ஒரு பாடலை ஜே.சி.ஹீஸ்டர்மேன் மொழிபெயர்த்துள்ளார். அது
பின்வருமாறு; “அவர்கள் ஒரு பசுவைக் கொன்று, அதில் தங்களுக்குரியப் பங்கைப் பெறுவதற்குத் தாயம் விளையாடினார்கள். பின்
அங்கு கூடியிருந்த அனைவருக்கும் அந்த இறைச்சியைப் பரிமாறினார்கள்..!” The Broken World of Sacrifice, சிகாகோ
யுனிவர்சிட்டி பிரஸ், சிகாகோ, 1993, பக்கம்
194,283)
ராஜசூயம், வாஜபேயம் போன்ற வேள்விகளில் கோசவா(GOSAVA) சடங்கு (பசு பலி தரப்படும் சடங்கு) ஒன்றிணைந்த ஒரு முக்கிய பகுதியென
ஆர்.எல். மித்ரா எனும் சம்ஸ்கிருத அறிஞர் சுட்டிக் காட்டுகிறார். கோசவா என்பது
பசுவதை வேள்விகளில் ஒரு வகையாகும். மகாபாரத்தின் கருத்துப்படி (3.30.17) கலியுகத்தில் இச்சடங்கை செய்யக்கூடாது. (வி.எஸ்.ஆப்தே,
தற்கால சம்ஸ்கிருத-ஆங்கில அகராதி, சொயாடோ,1998.)
தைத்திரிய பிராமணத்தின் (II.7.9) கருத்துப்படி ஸ்வராஜ்யாவை
(SVARAJYA) விரும்புகிறவர்கள் கோசவா எனும் இந்த வேள்வியை
கண்டிப்பாக நடத்தவேண்டும். கோசவா சடங்கு முடிந்து ஒரு ஆண்டு வரையிலும் இச்ச்சடங்கை
நடத்தியவர் பசுவிரதனைப் போல - அதாவது பசுவைப் போல – நடந்து
வரவேண்டும். பசுவைப்போலவே நீர் அருந்த வேண்டும். பசுவைப்போலவே புல் மேய வேண்டும்.
தன் தாயுடன் உடலுறவு கூட வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம்
சொல்கிறது:
‘’ tenestva sambatsaram pasuvrato bhavati /
upavahayodakam pivettrnani. Cacchimdyat / upa mataramiyadupa svasaramupa..”
(மகாமகோபாத்யாயா பி.வி. கானே எழுதிய ‘தர்மசாஸ்திரங்களின் வரலாறு’ எனும் நூலில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. தொகுதி II, 1213,
2644; ஜி.வி.தைட் எழுதிய ‘பிராமணங்களில்
உயிர்ப்பலி’ எனும் நூலையும் பார்க்க; பக்கம்
97-100)
அதைப்போலவே அக்னிஸ்தோமா வேள்வியின் போதும் பஞ்சசாரதி யாசவா
(தர்ஷாபூர்ணமாஷா) வேள்வியின் போதும் மலட்டு பசு மற்றும் மூன்று வயதுக்குட்பட்ட
பதினேழு இளம்கன்றுகளை பலியிடப்பட வேண்டும். இதனை சதபத பிராமணமும் தைத்திரிய
பிராமணமும் தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக பல்வேறு வண்ணங்கள் கொண்ட
பசுக்களை (பலியிட) பரிந்துரை செய்யும் தாந்யா பிராமணத்திலுள்ள (சாம வேதம் குறித்த
நூல்) ஒரு பாடலை தன்னுடைய நூலில் மேற்கோள் காட்டியிருக்கிறார், ஆர்.எல்.
மித்ரா.
சதுர்மாஷ்யா, சௌத்ரா மணி, பசுபந்தா, நிருத பசுபந்தா உள்ளிட்ட பல்வேறு வேள்விகளில் பலித்தரப்பட வேண்டிய
கால்நடைகளின் (பசு) எண்ணிக்கைகளை குறித்து தைத்திரிய பிராமணம் குறிப்பிடுகிறது.
தொடக்ககால வேதநூல்களிலும்,பிற்கால வேதநூல்களிலும் இடம்
பெற்றுள்ள ஏராளமான குறிப்புகளைப் பார்க்கும்போது,பசுக்கள்
பலி தரப்படுவது வேள்விகளில் மிக முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது என்ற விஷயம்
வெளிப்படையாக தெரிகிறது. வேள்வியில் பலியிடப்படும் பசு “மிக
நல்ல உணவு..!” என்றும், நூறு காளைகளை
உயிர்ப்பலி தந்ததற்காக அகஸ்தியரைப் போற்றியும் தைத்திரிய பிராமணம் தெளிவாக
குறிப்பிட்டுள்ளது. (‘பசுவின் புனிதம்: மறுக்கும் ஆதாரங்கள்.’
பக்கம் 29.)
விருந்தினர்களை உபசரிக்கும் சடங்கான அர்கியம் அல்லது மதுபர்கம் என்று
மிக பிரபலமாக அழைக்கப்பட்ட ஒரு ஆர்வத்திற்குரிய சடங்கு குறித்து பிற்கால
வேதநூல்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றன. விருந்தினர்களை கவுரவிக்க பசுக்களை
கொல்லும் நடைமுறை பண்டைய காலத்திலிருந்தே இருப்பதாக தெரிகிறது. “விருந்துக்குப்
பொருத்தமான பசுக்கள்” என்ற பொருள் தரும் அதிதினிர் (ATITHINIR)
என்ற சொல் ரிக்வேதத்தில் (X-68.3) காணப்படுகிறது.
“விருந்தினர்களுக்காக பசுக்களை கொல்பவர்..” என்ற பொருள் கொண்ட அதிதிக்வா (ATITHIGVA) என்ற சொல்
வேதகால வீரனை குறிப்பிடுகிறது. திருமணம் போன்ற விழாக்காலங்களில் போதும்கூட
பசுக்கள் பலி தரப்பட்டன. எடுத்துக்காட்டாக திருமண விழாவின் போது பசு பலி
தரப்பட்டது குறித்து ரிக்வேத பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. “ஆட்சியாளர்களோ,
மரியாதைக்குரியவர்களோ விருந்தினர்களாக வந்தால் மக்கள் காளையையோ,
பசுவையோ பலி தந்தார்கள்.” என்று அய்த்தரேய
பிராமணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
மதுபர்கம் என்ற சொல் முதன்முதலாக ஜெய்மினிய உபநிடத பிராமணத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு கிரக சூத்திரங்களில் இது விரிவாக
விவாதிக்கப்பட்டுள்ளது. குரு, புரோகிதர், ஸ்நாதகன், மாமனார், தந்தை வழி,
தாய் வழி மாமாக்கள், நண்பன், அரசன் போன்ற சிறப்பு விருந்தினர்களை கவுரவிப்பதற்காகவே இச்சடங்கு
நடத்தப்பட்டது. மாட்டிறைச்சியோ, வேறு விலங்குகளின் இறைச்சியோ,
இல்லாமல் இந்த சடங்கு நடத்தப்படவில்லை என்றபோதிலும், விருந்தின் போது தயிரும், தேனும் (இந்த
சொல்லிலிருந்து தான் மதுபர்கம் என்ற சொல் பிறந்தது) கலந்து தரப்பட்டதோடு, முக்கியமாக மாட்டிறைச்சி - அதாவது பலி தரப்பட்ட மாட்டின் இறைச்சியோ, விருந்துக்காகவே கொல்லப்பட்ட மாட்டின் இறைச்சியோ விருந்தினர்களின்
விருப்பத்தை பொறுத்து படைக்கப்பட்டது. தனிப்பட்ட முறையிலோ, திருமண
விழாக்களின் ஒரு பகுதியாகவோ மதுபர்கம் சடங்கு நடத்தப்படும். விருந்தினர்களை
கவுரவிப்பதற்காக அச்சடங்கில் பல பசுக்கள் கொல்லப்பட்டன.அப்பொழுது ‘ஓம்குரு’ என்ற சொற்களை சொல்லிய பின்னால் தான்
அந்தப்பசுக்கள் கொல்லப்படும் என்று அஷ்வாலய கிரக சூத்திரம் (I.24.30-1) குறிப்பிடுகிறது. ஆகவே தான் விருந்தினர்களை குறிக்க கோக்னா என்ற சொல்லை
பாணினி பயன்படுத்தியிருக்கிறார். (‘பசுவின் புனிதம்:
மறுக்கும் ஆதாரங்கள்.’ பக்கம் 31.)
பெண்கள் நான்கு மாத கர்ப்பமாக இருக்கும் போது நடத்தப்பட்ட சீமந்த
நயனம், கல்வி கற்ற குழந்தைகளை குருவிடம் அனுப்புவதற்கு
முன்பு நடத்தப்பட்ட உபநயனம் போன்ற சடங்குகளின் போது காளை அல்லது பசுவின் தோல்
பயன்படுத்தப்பட்டதை கிரக சூத்திரங்கள் (பராஷ்கரா கிரகசூத்திரம், I.8.10 அஸ்வாலயான கிரகசூத்திரம், I.14.3) தெரிவிக்கின்றன.
தனக்குப் பிறக்கும் மகன் நீண்ட ஆயுளும்,நல்ல
அறிவும் கொண்டவனாக இருக்கவேண்டுமென்று விரும்பினால் அவர்கள் வேகவைத்த கன்றின்
இறைச்சியுடன் அல்லது மாட்டிறைச்சியுடன் (அல்லது வேறு ஏதாவது இறைச்சியுடன்) அரிசிச்
சோறும், நெய்யும் கலந்து உண்ண வேண்டும் என பிரகத் ஆரண்யக (உபநிடதம் VI.4.18) சொல்கிறது.
வேதநூல்களிலும், வேதகாலத்திற்கு பிந்தைய
நூல்களிலும் கணிசமான இடத்தைப் பிடித்துள்ள இறந்தோர் வழிபாட்டோடு பசுக்கள்
கொல்லப்படுவது பிரிக்க முடியாதபடி இணைந்திருந்தது. பிணத்தை அடக்கம் செய்வது
குறித்து ரிக்வேதத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (ரிக்வேதம் X.16.7ab)
அதில் ஓரிடத்தில், இறந்த உடலை மூடுவதற்குப்
பசுவின் தோலும், கொழுப்பும் பயன்படுத்தப்பட்டது குறித்து
குறிப்பிட்டுள்ளது. (ரிக்வேதம் X.14-18) இறந்து போனவர்
சொர்க்கத்திற்குப் பயணம் செய்ய அவரோடு ஒரு காளையும் எரிக்கப்பட்டது பற்றி அதர்வ
வேதம் (XII. 248.) தெரிவிக்கிறது. இறுதிச் சடங்கு நடத்தும்
முறை குறித்து கிரக சூத்திரங்கள் விரிவாக வர்ணித்துள்ளன. பிணத்தை எரிக்கும் போது
பசு பலியிடப்பட்டது குறித்தும், அதன் பல்வேறு பாகங்கள்
பிணத்தின் மீது வைக்கப்பட்டது குறித்தும், தெளிவான ஆதாரங்களை
பார்க்க முடிகிறது. (கௌசிதக சூத்திரம்,
81, 20-9; அஸ்வாலயன் கிரக சூத்திரம் IV.3.19-21; கௌசிதக சூத்திரம்,V.2.13; V.3.1-5;)
ஈமசடங்கின் போது கொல்லப்பட்ட விலங்கு அனுஷ்டாரனி என்று
அழைக்கப்பட்டது. இதன் பொருள் பசு அல்லது பெட்டை வெள்ளாடு என்பது சமஸ்கிருத அறிஞர்
மகாமகோபாத்யாயா பி.வி. கானேயின் கருத்து. (பார்க்க; அவரது
நூல் ‘தர்மசாஸ்திரங்களின் வரலாறு’ பக்கம்
206. அனுஷ்டாரனி பசு என்பது பொதுவாக கன்று ஈனாத பசுதான் என்ற
விளக்கமும் தரப்பட்டுள்ளது. டபுள்யு. நார்மன் பிரவுன், THE
SANCTITY OF THE COW IN HINDUISM, மெட்ராஸ் யுனிவெர்சிட்டி ஜெர்னல், XXVIII, எண்.2, 1957, பக்கம்.33.)
இறந்து போன மூதாதையர்களைக் கவுரவிக்க பல்வேறு சடங்குகள் நடத்தப்பட்டன.
பிதுர் யக்ஞம், மஹா பிதுர் யக்ஞம், அஷ்டகம் என
இவற்றிற்குப் பல பெயர்களை வேதநூல்கள் குறிப்பிடுகின்றன. இதைப்போலவே, வேறு வகையான சிரார்த்தம் (இறந்துபோன முன்னோர்களுக்காக செய்யப்பட்ட
நினைவுச் சடங்கு) குறித்து வேதகாலத்திற்குப் பிந்தைய நூல்கள் (முக்கியமாக கிரக
சூத்திரங்கள்) பேசுகின்றன. இந்த வகை சடங்குகளில் பிதுர்களை (இறந்துபோன
முன்னோர்களின் ஆவிகள்) மகிழ்விக்க நல்லதொரு விருந்து தர வேண்டியதிருந்திருக்கிறது.
மாட்டிறைச்சி தந்திருந்தால் மாத்திரமே சிறப்பான விருந்தாக அன்றைக்கு அது
அமைந்திருந்திருக்கும்.
“முன்னோர்களின் ஆவிகள் மாட்டிறைச்சியைக் கண்டு பெரிதும்
மகிழ்கின்றன..!” என்று ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் (II.7.16.25)
சொல்கிறது. இறந்துப் போனவரின் உறவினர்கள், மரணத்திற்குப்
பிறகு பதினொன்றாம் நாள் பார்ப்பனர்களுக்கு இறைச்சி விருந்து தர வேண்டும் என்று
பராஷ்கர கிரக சூத்திரம் சொல்கிறது. மரணமடைந்தவரை கவுரவிக்க பசுவும் பலி தரப்பட
வேண்டும். ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் (III.10.48.9)
பின்னர் வந்த காலங்களில், ஆண் குழந்தை பிறப்பு, பிள்ளைக்குத் திருமணம் போன்ற விழாக்களுக்கு முன்னோட்டமாக பிதுர்களை
மகிழ்ச்சிப்படுத்த ஆபியுதயீகா (நந்திமுகம் என்றும் இது அழைக்கப்பட்டது.) என்ற
சடங்கு நடத்தப்பட்டது. அஷ்டகம் அல்லது ஏகாஷ்டகம் என்று அழைக்கப்பட்ட வேறு வகை
சிரார்த்தம் குறித்து விரிவாகப் பேசும் கிரக சூத்திரங்கள் அச்சடங்கில் பசுக்கள்
பலியிடப்பட்டதை வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளன. சிரார்த்த சடங்கின் போது அதில்
பலி தரப்படும் விலங்குகளுகேற்பத் தான் பலனும் கிடைக்கும் என்றிருந்த போதிலும்,
அஷ்டகம் நடத்தும் நபர், பசுவை வெட்டி, அதன் குடல் இறைச்சியைச் சமைத்து பிதுர்களுக்குப் படைக்கவேண்டும் என
விதிகள் கூறுகின்றன. மாட்டிறைச்சி ஒரு ஆண்டுக்கும், எருமை,
முயல், போன்ற காட்டு விலங்குகள், வெள்ளாடு போன்ற வளர்ப்பு மிருகங்களின் இறைச்சி ஒரு ஆண்டுக்கு அதிகமாகவும்
பிதுர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என்றும், பிதுர்கள் காலம்
முழுக்கவும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டுமானால் காண்டாமிருகத்தின் இறைச்சி,
சதாபாலி (ஒரு வகை மீன்) வார்த்திரினாஷா போன்றவற்றைப் படையல் செய்ய
வேண்டும் என்றும் விதிமுறைகள் கூறுகின்றன. மாட்டிறைச்சி பொதுவாகவே தவிர்க்கப்பட முடியாத
உணவாக இருந்ததால், அதை உண்பதா அல்லது வேண்டாமா என்ற
கேள்விக்கே இடமில்லை. சிரார்த்தம் என்பது பிதுர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்கான
சடங்கு என்பதற்கும் மேலாக, இறந்தவரின் உறவினர்களுக்கான
விருந்தாகவும் – குறிப்பாக மாட்டிறைச்சிக்கு முன்னுரிமை தந்த
பார்ப்பனர்களுக்கான விருந்தாகவும் – இருந்தது. மாட்டிறைச்சி
கிடைக்காதபோது மட்டுமே பிதுர்களுக்கு காய்கறிகள் படையலிடப்பட்டன. (‘பசுவின் புனிதம்: மறுக்கும் ஆதாரங்கள்.’ பக்கம்.
33.)
கால்நடைகள் பலிதரப்பட்ட வேறு பல சடங்குகளும் இருந்தன. பார்ப்பனர்களால்
நடத்தப்பட்ட காவா மயானம் என்ற சடங்கின் பிரதான அம்சமான மகா விரதம் எனும் உச்சகட்ட
நிகழ்ச்சி, மிகுந்த ஆடம்பரத்துடனும் மது களியாட்டங்களுடனும்
நடத்தப்பட்டன. அதில் எண்ணற்ற பசுக்கள் பலியிடப்பட்டு மித்ரவருணனுக்கும், மற்ற தெய்வங்களுக்கும் விருந்து படைக்கப்பட்டன. (பி.வி.
கானே ‘தர்மசாஸ்திரங்களின் வரலாறு’ பக்கம்
1239-46)
தொடக்கக்காலத்திலும், அதற்குப் பின்னர் வந்த
காலத்திலும் பொதுவாக நடைமுறையில் இருந்ததும், பல்வேறு
சிரார்த்த சூத்திரங்களில் விவாதிக்கப்பட்டிருந்ததுமான கிரக மேதம் சடங்கானது
அளவில்லாத எண்ணிக்கையில் பசுக்கள் கொல்லப்பட்ட சடங்காக இருந்தது. சடங்கு
முறைப்படியும், கறாரான விதிகளின் படியும் அல்லாமல், குரூரமான முறையிலும், சடங்கு விதிகளை மீறிய
முறையிலும் பசுக்கள் கொல்லப்பட்ட ஒரு ஊதாரித்தனமான பொது விருந்தாக அது இருந்தது.
(ஜே.சி. ஹீஸ்டர்மேன், THE BROKEN WORLD
OF SACRIFICE: AN ESSAY IN ANCIENT INDIAN RITUAL, யுனிவர்சிட்டி
ஆப் சிக்காகோ பிரஸ்,1993, பக்கம் 189-201)
மநு சாஸ்திரம்..!
உண்ணத்தகுந்த உணவு, விலக்கப்பட்ட உணவு ஆகியன
குறித்து மிக அதிகமாக பேசியுள்ளதும், சாஸ்திர நூல்களிலேயே (LEGAL
TEXTS) மிக முன்னோடியானதுமான மநு சாஸ்திரத்தில் (கி.மு.200 -
கி.பி.200) இறைச்சி குறித்து பல்வேறு
குறிப்புகளைக் காண முடிகிறது. தொடக்கக்கால, பிற்காலப்
பார்ப்பன சாஸ்திர நூல்களோடு இதன் கருத்துக்கள் பெரும்பாலும் ஒத்துப் போகிறது.
தொடக்கக்கால சாஸ்திர நூல்களைப்போலவே, மநுசாஸ்திரமும்
எந்தெந்த விலங்குகளின் இறைச்சியை உண்ணலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது. அது
பின்வருமாறு;
முள்ளம் பன்றி, முள்ளெளி, உடும்பு, காண்டாமிருகம், ஆமை, முயல்,
ஒட்டகம் தவிர, ஒரு தாடையில் பல் இருக்கும்
வீட்டு விலங்குகள் அனைத்தையும் உண்ணலாம். (மநு V.18.)
(விதிவிலக்கு தரப்பட்ட விலங்குகளில் பசு இல்லை என்பது
முக்கியமானது.!)
‘’வேள்வி சடங்குகளின் போது இறைச்சி உண்பது தெய்வ
கட்டளை..!” (மநு V.31)
“இறைச்சி எந்த வழியில் பெறப்பட்டிருந்தாலும், அதை தேவர்களுக்கும், பிதுர்களுக்கும், விருந்தினர்களுக்கும் படையல் செய்து விட்டு உண்பது பாவகாரியமாகாது..!”
(மநு V.32 / மநு V.41)
“வேள்விகளில் பலியிடுவதற்காகவே விலங்குகள்
படைக்கப்பட்டுள்ளன; சடங்குகளின் போது நடத்தப்படும் கொலை(வதை)
கொலையல்ல (அவதை); வேதத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஹிம்சையை,
அஹிம்சையாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும்..!” (மநு
V.39 / V.44)
“வேள்விக்குப் பயன்படுகின்ற கால்நடைகள், தாவரங்கள், மரங்கள், பறவைகள்
யாவும் இறப்பிற்குப் பின்னர் நற்கதியையே அடைகின்றன..!” (மநு V.
40.)
“வேதப் பொருளுணர்ந்த இருபிறப்பாளன் விருந்திலும்,
வேள்வியிலும், சிரார்த்ததிலும் உயிர் வதை
செய்கையில் அவ்வுயிர்களுடன் தானும் (சொர்க்கத்தில்) நற்கதி பெறுவான்..!” (மநு V.42.)
“வேள்வி, சிரார்த்தம் ஆகிய நிகழ்ச்சிகளின் போது தரப்படும்
இறைச்சியை உண்ண மறுக்கும் பார்ப்பனன் இருபத்தியொரு முறை விலங்காய் பிறப்பான்..!”
(மநு V.35.)
“புனித நீர் தெளிக்கப்பட்டிருந்தாலோ, பார்ப்பனர்கள் அனுமதித்ததாலோ, சாஸ்திரப்படி ஒருவர்
நடந்துக் கொண்டாலோ, உயிருக்கு ஆபத்தான நிலைமையை சந்தித்தாலோ
ஒருவன் இறைச்சி உண்ணலாம்..!” (மநு V.27.)
‘’இறைச்சி, மது, உடலுறவு ஆகியவற்றைத் தவிர்த்தால் பெறும்பலன்கள் கிடைக்கும் என்ற போதிலும்,
இவை மனிதனின் இயற்கையான விருப்பங்கள்..! (என்னவொரு தாராளமான சட்டம்..!!)
na mamsabhaksane doso na madya na ca maithune / pravrttiresa bhutanam
nivrttistu mahaphalah.. (மநு V.56.)
“பிரஜாபதி இந்த உலகை மூலமுதற் பொருளின் பண்பாகவே படைத்தான்; அசைகின்ற,
அசையாத பொருட்கள் அனைத்தையும் அதற்கு உணவாகப் படைத்தான்; இடம் விட்டு இடம் நகரக்கூடியவற்றிற்கு ஓரிடத்திலேயே அசையாதிருந்தவை உணவாக
அமைந்தன. கோரைப்பற்கள் கொண்ட விலங்குகளுக்கு, கோரைப்பற்கள்
இல்லாத விலங்குகள் உணவாக அமைந்தன. கைகளுள்ள மானிடருக்கு கைகளில்லாத மீன்
போன்றவையும், கொடிய விலங்குகளுக்கு யானை போன்ற சாதுவான
விலங்குகளும் உணவாக அமைந்தன; எனவே, தனக்கென
விதிக்கப்பட்ட உணவை கொன்று உண்ணுவது பாவமாகாது; ஏனெனில்
உண்ணும் உயிரினம், உண்ணப்படும் உயிரினம் இரண்டையுமே
படைத்தவன் பிரமன் தான்..!” (மநு V. 28-30)
மநுவைப் போலவே யாக்ஞவல்கியரும் பிதுர்களைத் திருப்திப்படுத்தும்
விசேசமான இறைச்சி வகைகளைப் பற்றியும் (மான், செம்மறியாடு, வெள்ளாடு, பன்றி, காண்டாமிருகம்)
பறவைகளைப் பற்றியும் (உ-ம்.கெளதாரி) குறிப்பிடுகிறார். மாணவன், குரு, மன்னன், நெருங்கிய
நண்பன், மருமகன் ஆகியோருக்கு ஒவ்வொரு ஆண்டும் அர்கியம்
தரவேண்டும்; அனைத்துச் சடங்குகளின் போதும் புரோகிதருக்கு
மதுபர்கம் செய்ய வேண்டும் என்பது இவரது கருத்தாகும். (யாக்ஞவல்கிய ஸ்மிருதி, I, 258-61 மற்றும் யஜுர் I,110)
“வேதமறிந்த பார்ப்பனனை பெரிய எருது அல்லது வெள்ளாடு,
சுவையான உணவு, இனிமையான வார்த்தைகளோடு
உபசரிக்க வேண்டும்..!” என்றும் யாக்ஞவல்கியர்
கட்டளையிடுகிறார். (‘பசுவின் புனிதம்: மறுக்கும் ஆதாரங்கள்.’
பக்கம் 63.)
மிதிலை நகரில் பெரிதும் மதிக்கப்பட்டு
வந்த யாக்ஞவல்கியரின் விருப்பத்திற்குரிய உணவாக மாட்டிறைச்சி இருந்தது. இளம் கன்று
அல்லது இளம் பசுவின் இறைச்சியாக இருந்தால், அதை விரும்பி சாப்பிடுவதாக இவரே
சொல்லியிருக்கிறார். (‘பசுவின் புனிதம்: மறுக்கும் ஆதாரங்கள்.’ பக்கம். 34.)
காவியங்கள் வழங்கும் ஆதாரங்கள்.
மௌரியர் காலத்திற்குப் பின்பும், குப்தர் காலத்திலும் இலக்கிய
வடிவம் தரப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட மகாபாரதம், இராமாயணம்
ஆகியவை மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்திற்குத் தெளிவான ஆதாரங்களை தந்துள்ளன.
(தொடக்கக்கால ஸ்மிருதிகளும், புராணங்களும் இதே காலகட்டத்தைச்
சேர்ந்தவைதாம்.) பொழுதுபோக்கிற்கு என்பதைவிட உணவுக்காக ஷத்திரியர்கள் அடிக்கடி
வேட்டையாடி வந்திருக்கிறார்கள் என்பதற்கு மகாபாரதம் – குறிப்பாக
அதிலுள்ள வனபர்வம் – ஆதாரமாக இருக்கிறது. (‘பசுவின் புனிதம்: மறுக்கும் ஆதாரங்கள்.’ பக்கம் 66.
இதில் காட்டப்பட்டுள்ள மேற்கோள், ஜான்
பிராக்கிங்டன், THE SANSKRIT EPICS, ஈ.ஜே.பிரில்,
லெய்டன், 1998, பக்கம் 191-2)
உணவுக்காக வளர்ப்பு விலங்குகள் கொல்லப்பட்டு வந்ததற்கும் ‘வனபர்வம்’
ஆதாரங்களைத் தருகிறது. ஹிம்சையை பார்த்து மனம் வருந்திய
யுதிஷ்டரும்கூட தன் தம்பிகளுக்கும், திரெளபதிக்கும், காட்டில் வாழ்ந்து வந்த பார்ப்பனர்களுக்கும் உணவுதர தினந்தோறும் ரூரூ
மான்களையும் கிருஷ்ண மிருகத்தையும் வேட்டையாடியதாக இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
பார்ப்பனர்களின் உணவில் இறைச்சி சாதாரணமாக இடம் பெற்று வந்தது என்ற
தகவலை ஆதிபர்வத்தில் இடம் பெற்றுள்ள கல்மாசபாதம் என்ற கதை கூறுகிறது. (மகாபாரதம், 1.166.20.
ஜான் பிராக்கிங்டன், THE SANSKRIT
EPICS, ஈ.ஜே.பிரில், லெய்டன், 1998, பக்கம் 225)
ஜெயத்ரதனுக்கும் அவன் பரிவாரங்களுக்கும் ஐம்பது மான்களைக் கொன்று
திரெளபதி விருந்து தந்ததாகவும், கருப்பு உடும்பு, புள்ளி உடும்பு, மான், இளமான்,
சராபா, குழி முயல், ரிஷ்யா,
ரூரூ, சம்பரா, காயல்,
பலவகை மான்கள், பன்றி, எருமை
இன்னும் ஏனைய விலங்குகளின் இறைச்சியை யுதிர்ஷ்டர் அவர்களுக்குத் தருவார் என்று
உறுதி தந்ததாக மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது. (மகாபாரதம்,III.251.12-13)
பாண்டவர்கள் விஷம் தடவப்படாத அம்புகளால் மான்களை வேட்டையாடியதாகவும், பார்ப்பனர்களுக்குத்
தந்த பின்னர் அந்த இறைச்சியை அவர்கள் உண்டதாகவும் மகாபாரதம் கூறுகிறது. (மகாபாரதம்,III.50.4.)
மாட்டிறைச்சியையும், உணவு தானியங்களையும்
பார்ப்பனர்களுக்கு தானம் தந்து அதன் மூலம் ஈடு இணையற்ற புகழைச் சம்பாதித்துக்
கொண்ட மன்னன் நந்திதேவரின் அரண்மனைச் சமையலில் தினந்தோறும் இரண்டாயிரம் பசுக்கள்
கொல்லப்பட்டதாக வனபர்வம் குறிப்பிடுகிறது. கொல்லப்பட்ட பசுக்களின்
இரத்தத்திலிருந்து தான் ‘கர்மாவதி ஆறு (புதிய பெயர் சம்பல்)
உருவானது. பாணினி இதை ‘கர்மனன்வதி ஆறு’ என்று இந்த புதியப் பெயருக்கு முன்பே குறிப்பிட்டுள்ளார். (மகாபாரதம்,III.208.8-9. ரஜினிகாந்த் சாஸ்திரியின் ‘HINDU
JATI KA UTTHANA AUR PATAM’ என்ற நூலில்(அலகாபாத்,1988,
பக்கம் 91.) மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு எஸ்.சொரன் சென்னின், ‘AN INDEX
TO THE NAMES IN THE MAHABHARATA’ (மோதிலால் பனார்சிதாஸ், தில்லி, 1963, பக்கம் 593-4) என்ற
நூலைப் பார்க்கவும். மற்றும் அஸ்தாதயாயி, VIII.2.12.)
பார்ப்பனர்களுக்கு இறைச்சி, அரிசி, நெய்,
பால், ஆகியவற்றை வழங்கவேண்டும் என அனுஷாசன
பர்வத்தில் நாரதர் அறிவித்துள்ளார். (மகாபாரதம், XIII.63.6.)
பிதுர்களுக்குப் படையல் செய்ய வேண்டிய பொருட்களை ஏறுவரிசைப்படி
பீஷ்மர் விவரித்துள்ளார். அவை, எள், அரிசி,
பார்லி, அவரை, நீர்,
கிழங்குகள், பழவகைகள், மீன்,
ஆட்டிறைச்சி, முயல், வெள்ளாடு, பன்றி, கோழி, மான் இறைச்சி (PARASATA,
RAURAVA), காயல், எருமை,
மாட்டிறைச்சி, பாயாசம், வார்திரினஷம்,
காண்டாமிருகம், (கட்கம்) ஆட்டுத்தோல், சிவப்பு ஆடு ஆகியன மட்டும்..!! (மகாபாரதம், XIII.88.2-10.
/ மகாபாரதம், XII.88.7-8 / ஒப்பீட்டுக்காக மநு 3.266-76 )
“மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ள பொதுவான அசைவ உணவுச்
சூழலை வைத்துப் பார்க்கும் பொழுது, அஹிம்சையை
மேன்மைப்படுத்தியும் அதில் சில இடங்களில் பேசியிருப்பது முரண்பாடாக இருந்தபோதிலும், பசு, கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளின் இறைச்சி உணவாக
உண்ணப்பட்டு வந்த நடைமுறை பண்டைய காலத்தில் பார்ப்பனர்கள், சத்திரியர்கள்
மத்தியில் பொதுவான நடைமுறையாக இருந்திருப்பது தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது.
சமூகத்தின் அடித்தட்டுப் பிரிவினர் மட்டுமே இறைச்சி உண்டு வந்ததாக மகாபாரதத்தில்
வரும் ஒரு பாத்திரம் சொல்லியுள்ள போதிலும் (மகாபாரதம், I.79.12)
காளைகள் உள்ளிட்ட விலங்குகள் ஏராளமான எண்ணிக்கையில் கொல்லப்பட்டதாக
சொல்லப்படும் யுதிஷ்டரின் அஸ்வமேத வேள்வியின்போது நடைபெற்ற விருந்தில் பல்வேறு
வகைப்பட்ட இறைச்சிகள் பரிமாறப்பட்டிருந்தன. உணவு விசயத்தில் பார்ப்பனர்கள் மிகுந்த
கட்டுப்பாடு கொண்டவர்கள் என்று பெருமையடித்துக் கொண்ட போதிலும், இம்மாதிரியான விருந்துகளில் இறைச்சி உணவு வகைகளை இவர்கள் உண்பதற்கு இந்தப்
பெருமை குறுக்கே நிற்கவில்லை..!” (‘பசுவின் புனிதம்:
மறுக்கும் ஆதாரங்கள்.’ பக்கம் 66-67)
“மகாபாரதத்தைப் போலவே, வால்மீகி
இராமாயணத்திலும், வேள்விகளுக்காகவும்,
உணவுக்காகவும் கால்நடைகள் உள்பட விலங்குகளைக் கொன்று வந்த நடைமுறைக்கு ஏராளமான
ஆதாரங்களைப் பார்க்க முடிகிறது. தனக்கு வாரிசு வேண்டுமென்பதற்காக தசரதன் ஒரு
வேள்வி நடத்தியதாகவும், அதில் பலியிட சாஸ்திரங்களால்
அனுமதிக்கப்பட்ட விலங்குகள் ஏராளமானவற்றை (எ.கா: குதிரைகள், பாம்புகள்,
நீர்வாழ் உயிரினங்கள்) முனிவர்கள் கொண்டு வந்ததாகவும், இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சடங்கில் பலி தருவதற்காக பூமியைச்
சுற்றி வந்த குதிரையுடன், முன்னூறு விலங்குகளையும் சேர்த்து
வேள்விக் கம்பங்களில் (யுபாஷ்) கட்டி வைத்ததாக அது மேலும் குறிப்பிட்டுள்ளது. (THE
VAALMIKI RAMAYANA, BALAKANDA, XIV.29-30. Ed; T.R.KRISHNACHARYA, IST edn.
KUMBAKONAM, 1905, rpt., SRISATGURU PUBLICATIONS, DELHI,1982.)
தான் நாடு கடத்தப்பட்ட செய்தியை கெளசல்யாவிடம் சொன்ன ராமன், இறைச்சியை
விலக்கி வைத்து விட்டு (இராமாயணம் 2.17.15) தேன், கிழங்கு, பழவகைகளை மட்டுமே சாப்பிட்டு பதினான்கு
ஆண்டுகள் காட்டில் வாழப்போவதாக சத்தியம் செய்து தருகிறான். உண்மையில் தொடக்கத்தில்
அவ்வாறு நடந்தும் காட்டினான். இதனால்தான், நிஷாதர்களின்
தலைவன் குகன் இறைச்சி தந்தபோது அவன் அதை வாங்க மறுத்தான். (இராமாயணம்,
2.44.20.) உணவுக்காகவும், வேள்விகளுக்காகவும்
இராமனும், இலட்சுமணனும் காட்டு விலங்குகளை வேட்டையாடியதாக
இதே புராணத்தில் அடிக்கடி பல குறிப்புகளைப் பார்க்க முடிகிறது. இராமன்
வேட்டையாடுவதையே பொழுது போக்காகக் கொண்டவன் என்ற படிமத்திற்கு ஆதாரமாக ஏராளமான
இராமாயணக் கதைகளைக் காட்ட முடியும். (VAALMIKI RAMAYANA, 2.49.14. /
2.50.16.)
இறைச்சி உணவு மீது சீதை பெரும் ஆர்வம் காட்டி வந்தாள் என்ற
விசயத்தையும் இராமாயணத்திலுள்ள பல பாடல்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. கங்கையைத்
தாண்டியபோது அரிசிச் சோறும், இறைச்சியும் கங்கையாற்றுக்கு
சமைத்து தருவதாக சீதை உறுதி தந்தாள். தன் கணவனுடன் பத்திரமாக திரும்பி வந்தால்,
ஏராளமான மதுவையும் தருவதாக வாக்குறுதி அளித்தாள். (VAALMIKI
RAMAYANA, 2.52.89.)
(‘பசுவின் புனிதம்: மறுக்கும் ஆதாரங்கள்.’ பக்கம்.67.)
தன்னுடைய கணவன் அவனது சபதத்தை நிறைவேற்றி முடித்தால், ஆயிரம்
பசுக்களையும், நூறு ஜாடி மதுவையும் யமுனை ஆற்றுக்குப் படையல்
தருவதாக அந்த ஆற்றைக் கடக்கும்போது சீதை வேண்டிக் கொள்கிறாள். (VAALMIKI
RAMAYANA, 2.55.19.) மான் இறைச்சி மீது சீதை வைத்திருந்த
விருப்பத்தின் காரணமாகவே அவள் கணவன், பொன்மான் வேடமிட்டு
வந்த மாரீசனை துரத்திச் சென்று கொல்கிறான்; அதனால் வரும்
கேடுகளை உணர்ந்திருந்த போதிலும், அந்தப்புள்ளி மானைக் கொன்று,
அதன் இறைச்சியை எடுத்து வர ராமன் தயக்கம் காட்டவில்லை.
(VAALMIKI RAMAYANA, 3.42.21.)
சீதை கர்ப்பமாக இருந்தபோது அவளுக்குப் பல வகைப்பட்ட மதுவையும் இராமன்
தந்ததாகவும், வேலைக்காரர்கள் அவளுக்கு இறைச்சியும், பழங்களும் தந்ததாகவும் இராமாயணத்தின் இறுதிப்பகுதியில்
குறிப்பிடப்பட்டுள்ளது. (VAALMIKI RAMAYANA, 7.41.13-14.)
சீதையைப் பிரிந்திருந்த இராமன் அந்த நாட்களில் இறைச்சியையோ, தேனையோ,
மதுவையோ தொடவில்லை (ஜான் பிராக்கிங்டன்,
‘THE RIGHTEOUS RAMA’ பக்கம் 82) என்று
சீதையிடம் அனுமன் விவரிக்கின்ற போதிலும், சுக்ரீவனைச்
சந்திக்கச் சென்ற வழியில் அந்த ‘நாயகன்’ போகிற போக்கில் பறவைகளையும், மீன்களையும் கொன்றதாக
கவந்தர் சொல்கிறார். (VAALMIKI RAMAYANA, 3.69.8-11.)
பரதனுக்கு மீன், இறைச்சி, தேன்
ஆகியவற்றையும், அவன் படைகளுக்கு கருவாடு, மீன் ஆகியவற்றையும் குகன் விருந்தாக தருகிறான். பரதனின் படைகளை
பரத்வாஜரும் நன்கு உபசரிக்கிறார். இறைச்சியும், மதுவும்
தந்து அவர்களைக் கெளரவப் படுத்துகிறார். (VAALMIKI RAMAYANA, 2.85.17.) ‘கொழுத்த கன்றை வெட்டிச் சமைத்து உணவு படைத்து ராமனையும் வரவேற்கிறார்..!’
(ஆர்.எல்.மித்ரா, ‘இந்தோ-ஆரியர்கள்,’
தொகுதி-I பக்கம்-386)
உண்ணத்தக்கவை என்று தர்ம சாஸ்திரங்களால் குறிப்பிடப்பட்ட விலங்கு
இறைச்சிகள் எல்லோராலும் உண்ணப்பட்டு வந்ததற்கு ஏராளமான குறிப்புகளை வால்மீகியின்
இராமாயணத்தில் பார்க்கலாம்; ஆனால் இதில் நாய் இறைச்சி மாத்திரம், வெறுப்புக்குரியதாக சொல்லப்படுகிறது. (ஜான்
பிராக்கிங்டன், ‘THE RIGHTEOUS RAMA’ பக்கம் 83)
இவ்வாறாக, இறைச்சி உண்பதை வால்மீகி இராமாயணம் ஒருபுறம் கண்டித்துள்ள
நிலையிலும், அசைவ உணவு மரபை அது உயர்த்தி பிடிக்கவே
செய்கிறது. யமுனை ஆற்றுக்கு ஆயிரம் கால்நடைகளை வெட்டிப் பலி தருவதாகக் கூட சீதை
வாக்குறுதி அளித்ததை முன்னமே கண்டோம். வைணவ பக்தி இயக்கத்தின் உறுதியான ஆதரவாளரான
இராமானந்தரால் (பதினான்காம் நூற்றாண்டு) எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் ‘அத்யாத்ம இராமாயணத்திலும்’ கூட, இறைச்சி உணவின் மீது சீதை கொண்டிருந்த விருப்பம்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (THE ADHYATMA RAMAYANA, ஆங்கில
மொழியாக்கம்: லாலா பாய்ஜி நாத், பானினி அலுவலகம், அலகாபாத்,1913, பக்கம் 44; பாடல்கள்
21-22 / பக்கம் 80; பாடல்கள் 38-39)
நோயும், ஆரிய சிகிச்சை முறையும்.
பல்வேறு நோய்களுக்கு மருந்தாக குறைந்தது இருபத்தெட்டு விலங்குகளின் இறைச்சியைக் குறிப்பிட்டு ‘சரக சம்ஹிதம்’ ஒரு பட்டியல் தந்துள்ளது. (பிரம்மானந்த திரிபாதி, தொகுப்பாசிரியர்: ‘சரகசம்கிதம்’, செளகாம்பா சூரபாரதி பிரகாசன், வாரணாசி, நான்காம் பதிப்பு, 1996, பக்கம் 1376.) நூற்று அறுபத்தெட்டு இறைச்சி வகைகளை, அவற்றின் மருத்துவக் குணங்களைக் குறிப்பிட்டு ‘சுஷ்ருதா சம்கிதம்’ வகைப்படுத்தியுள்ளது. (பிரான்சிஸ் ஜிம்பர்மான், ‘THE JUNGLE AND THE AROMA OF MEATS’, கலிபோர்னியா யுனிவர்சிட்டி பிரஸ், பெர்க்ளி,1987, பக்கம் 98, 103-111. / ஒப்பீட்டுக்கு பார்க்கவும்; பி.ராய், ஹெச்.என்.குப்தா, எம்.ராய். ‘சுஷ்ருதா சம்கிதம்’ (SCIENTIFIC SYNOPSIS) இந்தியன் நேசனல் சைன்ஸ் அகாடமி, தில்லி, 1980, அட்டவணை I, பக்கம் 110-119)
பல்வேறு நோய்களுக்கு மருந்தாக குறைந்தது இருபத்தெட்டு விலங்குகளின் இறைச்சியைக் குறிப்பிட்டு ‘சரக சம்ஹிதம்’ ஒரு பட்டியல் தந்துள்ளது. (பிரம்மானந்த திரிபாதி, தொகுப்பாசிரியர்: ‘சரகசம்கிதம்’, செளகாம்பா சூரபாரதி பிரகாசன், வாரணாசி, நான்காம் பதிப்பு, 1996, பக்கம் 1376.) நூற்று அறுபத்தெட்டு இறைச்சி வகைகளை, அவற்றின் மருத்துவக் குணங்களைக் குறிப்பிட்டு ‘சுஷ்ருதா சம்கிதம்’ வகைப்படுத்தியுள்ளது. (பிரான்சிஸ் ஜிம்பர்மான், ‘THE JUNGLE AND THE AROMA OF MEATS’, கலிபோர்னியா யுனிவர்சிட்டி பிரஸ், பெர்க்ளி,1987, பக்கம் 98, 103-111. / ஒப்பீட்டுக்கு பார்க்கவும்; பி.ராய், ஹெச்.என்.குப்தா, எம்.ராய். ‘சுஷ்ருதா சம்கிதம்’ (SCIENTIFIC SYNOPSIS) இந்தியன் நேசனல் சைன்ஸ் அகாடமி, தில்லி, 1980, அட்டவணை I, பக்கம் 110-119)
பசுக்களைக் கொல்வதில் புகழ்பெற்றவன் என்று பிற்காலப் புராணங்களில்
குறிப்பிடப்பட்டுள்ள பிரஷாதரன் (மநுவின் எண்ணற்ற வாரிசுகளில் ஒருவர்) ஒரு
வேள்வியின் போது கொல்லப்பட்ட பசுக்களின் இறைச்சியை உண்டதிலிருந்து வயிற்றுப்போக்கு
நோயே உருவானதாக குறிப்பிடுகிறார். கால்நடை இறைச்சிகளிலேயே மிகச் சுகாதாரக் கேடானது
எருதின் இறைச்சிதான் என்று அவரது மிகுந்த அனுபவத்துடன் சொல்கிறார். (CARAKA CIKITSA,
XIX.4 / CARAKA SUTRA XXV.39. ஒப்பீட்டுக்கு ஜிப்மர்மான் எழுதிய
நூல். பக்கம் 189.)
விட்டுவிட்டு வரும் காய்ச்சலுக்கு மாதுளம் பழச்சாற்றில் ஊறவைத்த மாட்டிறைச்சிக்
கஞ்சியை சரகர் பரிந்துரைக்கிறார். மூச்சுத்திணறல், மூக்கடைப்பு,
அவ்வப்போது வரும் காய்ச்சல் ஆகிய நோய்களுக்கு மாட்டிறைச்சி மருந்தாக
அமையுமென்று தெளிவாக விவரிக்கிறார். (CARAKA SUTRA II.31. / CARAKA SUTRA
XXVII.79.)
மூச்சுத்திணறல், மூக்கடைப்பு, இருமல், தொடர்ச்சியான காய்ச்சல், ஓயாத பசி போன்ற நோய்களுக்கு மாட்டிறைச்சி நல்ல மருந்து என்பது
மெய்பிக்கபட்ட ஒன்று என்று கூறும் சுஷ்ருதர், மாட்டிறைச்சி
புனிதமானது, சுவையானது என்றும் அதனை வர்ணித்துள்ளார். (SUSRUTA
SUTRA, XLVI. ‘பசுவின் புனிதம்: மறுக்கும் ஆதாரங்கள்.’ பக்கம்.70.)
பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த வாக்பதர் (ஏழாம் நூற்றாண்டு) அதே
தொனியில் மாட்டிறைச்சியின் நோய் தீர்க்கும் ஆற்றல்கள் குறித்துப் பேசுகிறார். (ASTANGA HRDAYAM,
SUTRA,VI.65. K.R. SRIKANTHA MURTHY, ed.and tr., ASTANGA HRDAYAM, VOL; I. KRISHNADAS
ACADEMY, VARANASI, 1996.) மாட்டிறைச்சியின் மருத்துவக் குணங்கள்
பற்றி புகழ்பாடும் குறிப்புகள், பிற்காலத்திலும் தொடர்வதை -.
மாட்டிறைச்சியின் நோய் தீர்க்கும் கலை குறித்த சுஷ்ருதரின் நினைவுகளை - ஹலாயுதர்
(பத்தாம் நூற்றாண்டு) பாதுகாத்து வைத்துள்ளதன் மூலம் உணரலாம். (HALAYUTHAKOSAH
(ABHIDHANARATNAMALA), ED. JAISANKAR JOSHI, UTTARPRADESH HINDI SANSTHAN,
LUCKNOW.3RD EDN., 1993, P.281)
கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள், தத்துவ
அறிஞர்களின் பார்வையில்..!
கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளைக்
கொல்ல சாஸ்திர நூல்கள் அனுமதித்தன என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று.
உணவுக்காகக் கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகளைக் கொன்று வந்த நடைமுறையானது பிற்காலம்
வரை தொடர்ந்து வந்திருப்பதற்கு சமயசார்பற்ற இலக்கியங்கள் ஆதாரங்களாக முன் நிற்கின்றன.
காளிதாசரின் ‘மேகதூதம்’ கலை
நேர்த்தியான நூற்றுக்கும் மேற்பட்ட பத்திகளைக் கொண்ட உணர்ச்சிப்பாடல் வகையை
சேர்ந்தது. அலாகா மலையில் பிரிவுத் துயரத்தால் வாடிக்கொண்டிருக்கும் தன் மனைவிக்கு
காதல் ஏக்கத்தால் தவித்துக் கொண்டிருந்த கணவன் யட்சன், மேகத்தைத்
தூது அனுப்புவது தான் அதன் கரு. இரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்தோடும் அளவிற்கு
ஏராளமான பசுக்களைக் கொன்ற நந்திதேவரை வணங்கும்படி தன் மேகத்தூதர்களை யட்சன்
கேட்டுக்கொள்கிறான். இது வெளிப்படையாகவே மகாபாரதக் கருத்தோடு பொருந்திப் போகிறது.
(மேகதூதம்: தொகுப்பும், மல்லிநாதரின்
(பதினான்காம்-பதினைந்தாம் நூற்றாண்டு) உரையின் மொழியாக்கமும், எம்.ஆர்.காலே மோதிலால் பனார்ஜிதாஸ், எட்டாம் பதிப்பு,
மறுபதிப்பு, 1979, பக்கம் 83.)
‘மகாவீர சரிதம்’ என்ற நூலில்
ராமனின் குழந்தைப் பருவ வாழ்க்கையைப் பற்றிப் பேசவரும் நூலாசிரியர் பவபூதி(கி.பி.700)
ஒரு காட்சியை விவரிக்கிறார். இளம் பசுவைக் கொன்று மன்னன் ஜனகன் தந்த
உபசரிப்பை ஏற்றுக்கொள்ளும்படி கோபத்திலிருந்த பரசுராமனிடம் வசிஷ்டர்
வேண்டிக்கொள்வது தான் அந்தக் காட்சி. (MAHAVIRACARITA, III. 2.ed. WITH
HINDI tr. RAMPRATAP TRIPATHI SHASTRI, LOK BHARATI PRAKASHAN, ALLAHABAD, 1973,
p.60.)
வால்மீகியின் குடிசையில் “பழுப்புநிற இளம் கன்றின்” விருந்தை தான் உண்டதாக வசிஷ்டரே சொல்வதாக ‘உத்தரராம
சரிதம்’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. புனித
சாஸ்திரத்தின்படி ஸ்ரோட்ரியன் (வேதமறிந்த பார்ப்பனன்) விருந்தாளியாக வந்தால் இளம்
கன்றை அல்லது காளையை அல்லது வெள்ளாட்டை அவனுக்கு விருந்தாக படைக்க வேண்டியது
குடும்பத் தலைவரின் கடமை என்று வால்மீகியின் பிற்காலச் சீடர் ஒருவர்
குறிப்பிட்டுள்ளார். (‘உத்திராராமா சரிதம்’ தொகுப்பு, மொழியாக்கம்,
ஞானசியாமரின் உரை விளக்கம். பி.வி.கானே & சி.என். ஜோசி,
மோதிலால் பனார்ஜிதாஸ், தில்லி, 1962, ஏக்ட் II. பக்கம் 86.
வால்மீகியின் சீடர்களான தாண்டாயனருக்கும், செளதாதகிக்கும்
இடையே நடந்த உரையாடல் பற்றிய மேற்சொன்ன வியாக்கியானம் தொகுப்பாசிரியர்கள்
முன்வைத்த நேரடி மொழியாக்கத்தை மட்டுமல்ல, பதினெட்டாம்
நூற்றாண்டைச் சேர்ந்த ஞானசியாமரின் உரைவிளக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.)
ஸ்ரோட்ரியனுக்கு (வேதமறிந்த பார்ப்பனன்) எருது அல்லது வெள்ளாட்டு விருந்து தரவேண்டும் என்ற பழைய நடைமுறையை
சதாநந்தர் ராவணனுக்கு பணிவடக்கத்தொடு எடுத்துக் கூறியதாக ராஜசேகரரின் (பத்தாம்
நூற்றாண்டு) பாலராமாயணத்தில் காணப்படுகிறது. (ராஜசேகரரின் பாலராமாயணம், தொகுப்பு: ஞானசாகர் ராய், செளகாம்பா, வாரணாசி, 1984, பக்கம் 216.)
செவ்வியல் கால நீண்ட மகாகாவியங்களில் ஒன்றான ஹர்சரின் நைஷத சரிதம்
(பன்னிரெண்டாம் நூற்றாண்டு) விரிவாக விவாதித்துள்ளது. பசு வதை குறித்து சுவையான
இரண்டு குறிப்புகளையும் அந்நூல் தந்துள்ளது. தமயந்தியின் சுயம்வர நிகழ்ச்சியில்
கலந்துக் கொள்ளத் தவறியதால், அழகான அப்பெண்ணைக்
கரம்பிடிக்கும் வாய்ப்பை இழந்த காளி ஆத்திரத்தால், நளனை பழி
வாங்கும் நோக்கோடு அவன் தலைநகரை அழிக்கப் புறப்படுவதாக இந்நூலில் பதினேழாவது
காண்டத்தில் ஒரு பதிவு காணப்படுகிறது. ஆனால் அந்த இடம் கோயில் என்பதையும் அவன்
அறிந்தான். வேள்வியில் பலி தருவதற்காக நிறுத்தப்பட்டிருந்த ஒரு பசுவைப்
பார்த்ததும் உற்சாகமடைந்த காளி, அதைப் பிடிக்க விரைந்து
சென்றதாகவும், ஆனால், சோம வேள்வி
சமபந்தப்பட்ட ஒரு சமய சடங்கிற்காக அந்தப்பசு அர்ப்பணிக்கப் பட்டிருந்ததால் அது
அவனைத் துரத்தியடித்து விட்டதாகவும் ஓரிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.
கொல்லப்படவிருந்த ஒரு பசுவைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு ஓடிய காளி, அது விருந்தினருக்காகக் கொல்லப்பட இருக்கிறது என்பதைத் தெரிந்ததும்
திரும்பி விடுவதாக மற்றோர் இடத்தில் சொல்லப்பட்டுள்ளது. ( நைசாத மகாகாவியம் (CHOWKHAMBA
Edn. ) XXVII.173. மல்லிநாதர் (பதினான்காம்-பதினைந்தாம் நூற்றாண்டு)
/ மற்றும் அதே நூல் XVII.197.)
விருந்தினர்களைக் கெளரவிக்கும் ஒரு பகுதியாகவே பசு கொல்லப்படுகிறது
என்பதே நைசாத மகாகாவிய செய்யுளின் (XVII.197) பொருள் என்று மல்லிநாதர்
விளக்கம் தருகிறார். காளிதாசரின் ஈரடி செய்யுள்களுக்கு விளக்கம் தர வந்த இவர்,
ரந்திதேவர் தினந்தோறும் பெரும் எண்ணிக்கையில் பசுக்களைக் கொன்று
வந்ததையும், அவற்றின் இரத்தம் கர்மான்வதி ஆறாக
பெருக்கெடுத்து ஓடியதையும் விவரிக்கும் மகாபாரத கதையை நினைவுபடுத்துகிறார்.
உத்திரராமாயணத்தில் தாண்டாயனனுக்கும் சௌதாடகிக்கும் நடந்த
உரையாடலுக்கு விளக்கம் தர வந்த ஞானசியாமர் (பதினெட்டாம் நூற்றாண்டின்
தொடக்கக்காலத்தை சேர்ந்தவர்) விருந்தினர்களைக் கெளரவிப்பதற்காக பசுக்களை கொல்லும்
நடைமுறை தொன்றுதொட்டு இருந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். (‘பசுவின்
புனிதம்: மறுக்கும் ஆதாரங்கள்.’ பக்கம். 73.)
பசுக்களைக் கொல்லாமல் இருப்பதோ, இறைச்சி உணவு உட்கொள்ளாமல்
இருப்பதோ பார்ப்பனர்களின் அல்லது பார்ப்பனிய சமூக அமைப்பின் சமூக அடையாளங்களாக
இருந்திருக்கவே முடியாது என்பதை இதுகாறும் கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவாக
புரிந்துக் கொள்ள முடியும்.
மத்தியகாலத்தின் தொடக்கக்கட்டத்தைச் சேர்ந்த தத்துவ அறிஞர்கள் மற்றும்
தர்க்க அறிஞர்கள் சிலரின் ஆதரவை அசைவ உணவு பெற்றிருந்தது. “வேதகாலச்
சடங்கு முறைகளைக் கொண்ட சமயமானது விரைவாக கடந்த காலத்தின் எச்சமாகிக்
கொண்டிருந்தாலும், மீமாம்சகர்கள், ஸ்மார்த்தர்கள், நியாய வைசேடிகர்கள் ஆகியோரால் வேதத்தின் அதிகாரம் தொடர்ந்து மறு
உறுதிப்படுத்தப் பட்டு வந்தது.” குமாரில பட்டர் (கி.பி.650-750)
வேதச் சடங்கின் வன்முறையை நியாயப்படுத்தினார். விலங்குகளை
உயிர்ப்பலி தருவது பாவம் என்ற கருத்தை வேதாந்த தத்துவ ஆசிரியர் சங்கரர் (எட்டாம்
நூற்றாண்டு) நிராகரிக்கிறார். வைஷ்ணவ தத்துவ அறிஞர் மத்வர் (பன்னிரெண்டாம்
நூற்றாண்டு) வேத முறைப்படி விலங்குகளைப் பலியிடும் நடைமுறையைக்
கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகக் கருதவில்லை.
பார்ப்பனர்கள் இறைச்சி உண்பதை பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், ஸ்மிருதிகளுக்கு
உரையெழுதிய தர்க்க அறிஞருமான விஸ்வநாத நியாய-பஞ்சாணனன் உறுதியாக ஆதரித்தார். பௌத்த
சீடர்களைப் போல, இறைச்சி உணவை கண்டித்த தென்னிந்தியப்
பார்ப்பனர்களை ஏளனம் செய்தார். (விஸ்வநாத நியாய-பஞ்சாணனனின் BHASAPARICCED
WITH SIDDHANTA-MUKTAVALI, மொழியாக்கம் சுவாமி மத்வானந்தர், முன்னுரை சத்காரி முகர்ஜி, அத்வைத ஆசிரமம், கல்கத்தா,1977. பக்கம் XXIVXXV.)
இவ்வாறாக முந்தைய ஆரியர்களும், அவர்களது காவியத்தலைவர்களும் பசுவின்
மாமிசத்தை ரசித்து, ருசித்து உண்டவர்களாக இருக்க, அதையெல்லாம் மறைத்து, இன்றைக்கு
மாட்டிறைச்சி உண்ணுகிற முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை தனிமைப் படுத்தி அவர்கள்
மீது அடக்குமுறைகளை ஏவ கிட்டிய அரிய ஒரு வாய்ப்பாகவும், பழைய காலம் போல, தாழ்த்தப்பட்ட
மக்கள் மீது தீண்டாமை முதலான கொடுமைகளை கொண்ட வர்ணாசிரமத்தை திணித்திடும் ஒரு சூழ்ச்சியாகவும்,
இந்துத்துவ வெறியர்களின் இந்த ‘புனிதப்பசு’ நாடகம் அரங்கேறி வருகிறது என்பதை
யாவரும் புரிந்து கொண்டு விழிப்படைய வேண்டும்.
நமது கேள்விகள்..
வேத, இதிகாச, புராண உபநிடதங்கள், மனுஸ்மிருதி மற்றும் புத்த – சமண
மத இலக்கியங்கள் அனைத்தும் பண்டைய ‘இந்துக்கள்’ மாட்டுக்கறி தின்னும் உலகளாவிய பழக்கத்தைக் கொண்டவர்களே என்பதைச்
சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன. ரிக்வேத தெய்வமான இந்திரன் டன் கணக்கில் ‘பசு மாமிசம்’ விழுங்கியதாக பல சுலோகங்கள்
தெரிவிக்கின்றன. இராமாயணம் எழுதிய வால்மீகி தனது ஆசிரம விருந்தினர்களுக்கு
மாட்டுக்கறி விருந்தளிப்பது வழக்கம் என இராமாயணம் தெரிவிக்கின்றது. ‘கோமேத’ யாகத்தில் கொல்லப்படும் மாட்டின் பாகங்கள்
பார்ப்பனப் பண்டாரங்களின் சமூக அந்தஸ்திற்கேற்பப் பங்கிடப்பட்டதாக நான்கு
வேதங்களும் குறிப்பிடுகின்றன. பிரம்மா பசுவைப் படைத்ததே வேள்வியில் கொல்லத்தான்
என்று கூறும் மனுஸ்மிருதி, ‘உலக நன்மைக்காக வேள்வியில்
கொல்லப்படும் பசுவை பிராமணன் உண்ணலாம்’ என்றும்
தெரிவிக்கின்றது. அதிலும் யாக்ஞவல்கியர் எனும் உபநிடத முனிவர், கன்றுக்குட்டி இறைச்சியைப் பற்றி ரசனையுடன் விவரிக்கிறார். எனவே
பசுவதையைத் தடை செய்யுமுன் அதைப் பிரச்சாரம் செய்யும் வேதம், புராணம், மனுஸ்மிருதி அனைத்தையும் தடை செய்ய
வேண்டும். காவிகள் செய்வார்களா..?
கணிப்பொறி வேலைக்காக நம்மூர் அம்பிகள் ஈக்களாய் ஒட்டிக்
கொள்ளும் அமெரிக்காவில்தான் சிகாகோ நகரம் உள்ளது. இறைச்சிக்காக நவீன ஆலைகளில்
தினமும் பல்லாயிரம் மாடுகள் கொல்லப்படும். இந்நகரம் ‘உலகின் கொலைக்களம்’ என்றழைக்கப்படுகிறது. ஆதலால்
கோமாதாவைக் கொலை செய்யும் அமெரிக்காவிற்கு இந்துக்கள் யாரும் போகக் கூடாது என
ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள்
அறிக்கை விடுமா..? ஆளும் பிஜேபி அரசு ‘அம்பிகளுக்கு’ தடை
போடுமா..ஏற்கனவே சென்றவர்களை திரும்ப அழைக்குமா..?
உலகத்திலேயே அதிகமாக மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கிற நாடு நம்முடைய
நாடு எனும் பொழுது, நம்முடைய மாட்டிறைச்சியை வெளிநாட்டுக்காரன்
சாப்பிடலாம்..சொந்த நாட்டுக்காரன் சாப்பிடக் கூடாதென்றால் அது எந்த வகை நியாயம்..?
மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகளவில் இந்தியா
முதலிடத்தில் இருக்கிறது. அதனை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை நடத்துவோரும் பெரும்பான்மை
முஸ்லிமல்லாதவர்கள். ஜெய்ன மதத்தவர் உள்பட அஹிம்சையை நக்குவோரே அதிகம் நடத்துகின்றனர்.
நம்முடைய நரபலி மோடியே பதவிக்கு வந்ததும் வராததுமாக சீனா சென்று மாட்டிறைச்சி
ஏற்றுமதிக்கு ஒப்பந்தம் செய்து வந்தார். பசுவதை கூடவே கூடாது என்று சொல்லி மனிதவதை
செய்திடும் காவிகள் ஏற்றுமதியை தடுப்பார்களா..? மாட்டிறைச்சி நிறுவனங்களை
இழுத்துப் பூட்டுவார்களா..? வெளிநாடுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களை கிழித்தெறிவார்களா..?
பசுவதை கூடாதென்றால் விவசாயத்திற்கு உதவாத வலுவிழந்த
மாடுகளை-அவனே சாப்பாட்டுக்கு வழியில்லாமல்,கடன் தொல்லையால்
தற்கொலை செய்து கொள்ளும் நிலையில்-எங்கிருந்து மாட்டுக்கு அவன் உணவளித்து
பராமரிப்பான்..? அத்தகைய மாடுகளை என்ன செய்வது..? குற்றுயிராய் கிடக்கும் விவசாயியை அலட்சியம் செய்து விட்டு, மாட்டுக்கு மட்டும் கரிசனம் காட்டும் சட்டம் போடும் அரசு அதற்கு என்ன
திட்டம் வைத்திருக்கிறது..? பராமரிக்க வசதியில்லாத
விவசாயிகளிடமிருந்து அவன் விரும்புகிற நல்ல விலையை கொடுத்து அவற்றை வாங்க
இந்துத்துவாக்களுக்கு குடை பிடிக்கும் அரசுகளோ அல்லது இந்துத்துவா ரவுடிகளே கூட
தயாரா..?
விற்கின்ற விலைவாசியில் காய்கறிகள் வாங்க முடிவதில்லை..
கோழியோ, ஆடோ வாங்க அடித்தட்டு மக்கள் அதன்
பக்கத்தில் கூட போக முடிவதில்லை. இந்நிலையில் மாடு போல அன்றாடம் உழைக்கும்
மக்களின் புரதத்தேவையை மாட்டிறைச்சி தான் தற்சமயம் கையிலுள்ள காசுக்கேற்ப ஈடு
செய்துக் கொண்டிருக்கிறது. அதனையும் அவன் தின்னக் கூடாதென்றால் அவன் எதை
சாப்பிடுவது..? இந்த உலகில் உயிர் வாழும் உரிமை
அத்தகையவனுக்கு இருக்கிறதா..இல்லையா..?
பசு புனிதமென்றால், மீன் விஷ்ணுவின்
மச்சாவதாரம், கோழி முருகனின் அவதாரம், ஆடு
கிருஷ்ணன் மேய்த்தது என அனைத்தையும் தடை செய்யலாமா? மாட்டுக்கறி
தின்னக்கூடாது என்பவர்கள் கோமாதாவைக் கொன்று தோலை உரித்துச் செருப்பு போட்டு
மிதிக்கலாமா? கடவுளே பிள்ளைக் கறியை ஏற்கும்போது, பக்தன் மட்டும் மாட்டுக்கறியைத் தின்னக் கூடாதா?
பசுவைக் கோமாதா என்றும் அதன் உடலில் 33 கோடித் தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்றும் கூறுபவர்கள், அது செத்தால் மட்டும் தூக்கிச் செல்வதற்குப் பறையர்களையும், சக்கிலியர்களையும் அழைப்பது ஏன்? பூதேவர்களான
பார்ப்பனரும், உயர் சாதியினரும், கோமாதா
பஜனை பாடும் சங்கராச்சாரியும், இராம.கோபாலனும் – செத்த
கோமாதாவைத் தூக்கி அடக்கம் செய்து தமது ‘இந்து’ உணர்வை நிரூபிப்பார்களா..?
பசுவதை செய்வது பாபம் என்றால், அது உங்கள் மனதை புண்படுத்துவது உண்மையாக இருந்தால்,
நீங்கள் வணங்குகிற தெய்வங்கள், ராமன்-சீதை உள்பட உள்ள காவிய
பாத்திரங்கள், நீங்கள் போற்றுகிற ராமானுஜர், விவேகானந்தர் ஆகியோர் அனைவரும் பாபிகள் தானே..? பசுக்களை
டன் கணக்கில் விழுங்கிய அவர்களையும் வணங்கிக் கொண்டு, மாட்டிறைச்சியை
மற்ற நாடுகளுடன் போட்டிப்போட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துக் கொண்டு
உள்ளூரில் மட்டும் சிறுபான்மையினரும் தாழ்த்தப்பட்டோரும் பசுவதை செய்யக்கூடாது
என்று கூறுவது உங்களது இழிவான நயவஞ்சகம் தானே..?
பால் தரும் பசு புனிதம். அதனால் அதனை கொல்லக் கூடாதென்றால், அதேப் போல
பால் உள்பட பல பயன்பாடு உள்ள எருமை மாடும் புனிதமென்று சொல்லத் தயாரா..?
For Further Readings..
For Further Readings..
http://www.vinavu.com/2012/05/12/myth-of-the-holy-cow/http://chunauti.org/2015/05/22/whats-your-beef-mr-naqvi/
http://www.vinavu.com/2011/05/30/beef-biryani/
Wonderful True Explanation. Keep it up.
ReplyDeleteExcellent Article Sir... Thank you very much.!
ReplyDelete