Translate

Saturday, 19 September 2015

கத்னா-விருத்தசேதனம்-மார்க்கல்யாணம்-கவரடைப்பு..!




இஸ்லாமிய மார்க்கத்தில் விருத்தசேதனம்..! 


கத்னா, சுன்னத் என்று இஸ்லாமிய மரபில் அழைக்கப்படுகிற விருத்தசேதனம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட இயற்கை வழி முறையாகும்.

“விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடிகளை களைவது, அக்குள் முடிகளை களைவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையை கத்தரித்துக் கொள்வது ஆகிய ஐந்து விசயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்..!” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்கள்: புகாரி-5889,5891,6297 முஸ்லிம்-377,378 மற்றும் திர்மிதி, நஸயி, அபூதாவூத் இப்னு மாஜா, அஹ்மத், முஅத்தா, மாலிக்.

கத்னா செய்தல் இஸ்லாத்தில் கட்டாயக் கடமை என்று சொல்வதற்கில்லை. கத்னா செய்யாமலும் ஒருவர் இஸ்லாத்தில் இணைந்து முஸ்லிமாக இருக்க முடியும். ஆயினும் கத்னா செய்வது  நபியவர்களால் வலியுறுத்தப்பட்ட தாகும்.

முஸ்லிம்கள், யூதர்கள், கிருஸ்துவர்கள் ஆகிய மூன்று சமயத்தவருக்கும் பெரும் பாட்டனாராகிய இப்ராஹீம் (அலை) அவர்களது முன்னுதாரணத்தைப் பின்பற்றியே இன்றுவரை கத்னா செய்துகொள்வது வழக்கில் உள்ளது.  நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆவதற்கு முன்பே மக்கத்து குறைஷியரும் மதீனா பகுதிகளில் குடியேறி வாழ்ந்துவந்த யூதர்களும் விருத்த சேதனம் செய்துகொள்ளும் வழக்கமுடையோராக இருந்துள்ளனர் என்பதை வரலாற்று நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது.

"(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் என்பது வயதிற்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். அவர்கள் 'கதூம்' (எனும் கூரிய ஆயுதத்தின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்..!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) 

நூல்கள் புகாரி 33566298, அஹ்மத்.


யூதர்களிடம் விருத்தசேதனம்..! 

பைபிள் பழைய ஏற்பாடு கத்னா செய்வதை ஒரு உடன்படிக்கையாக சொல்கிறது. (பார்க்க: ஆதியாகமம் 17:10-14 )

10. எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்.

11. உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் பண்ணக் கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

12. உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்.

13. உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப் பட்டவனும், விருத்தசேதனம் பண்ணப்படவேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது.

14. நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப் படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான்..என்றார்.!

யூதர்கள் இன்றைக்கும் இதனை பின்பற்றியே BRIT MILAH’Covenant of Circumcision  என்று அழைக்கிறார்கள்.!



  JEW'S BRIT MILAH CEREMONY..




   A Brit Milah Kit..



இயேசுவின் விருத்தசேதனம்..


இயேசுவின் விருத்தசேதனம் என்பது லூக்கா நற்செய்தியின்படி இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு ஆகும். இதன் படி இயேசு பிறந்த எட்டாம் நாள் தூய்மைச் சடங்கை நிறைவேற்றி அவருக்கு விருத்தசேதனம் செய்து அவரை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவரின் பெற்றோர் எருசலேமுக்குக் அவரை கொண்டு சென்றார்கள். இந்த நாளிலேயே அவருக்கு இயேசு என்னும் பெயரும் இடப்பட்டது.

இந்த நிகழ்வு கிறித்தவக்கலையில் 10ஆம் நூற்றாண்டு முதல் இடம்பெறத் துவங்கியது. முதலில் 
இயேசுவின் வாழ்க்கைச் சக்கரத்தில் ஒரு பகுதியாக மட்டுமே சித்தரிக்கப் பட்டாலும், பின்னாட்களில் இந்த நிகழ்வே தனி கருப்பொருளாக மாறியது. இந்த நிகழ்வு இயேசுவின் விருத்தசேதன விழா என்னும் பெயரில் கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் ஆங்கிலிக்க ஒன்றியத்தில் ஜனவரி1 அன்றும், கத்தோலிக்க திருச்சபையில் ஜனவரி3 அன்றும் விருப்ப நினைவு நாளாக, ஜனவரி3 அன்று இயேசுவின் திருப்பெயர் எனவும் கொண்டாடப்படுகின்றது.

Circumcision of Christ  





பைபிளில் விருத்தசேதனம்..!

பழைய ஏற்பாட்டில்..

ஆதியாகமம் 17:10-14 /ஆதியாகமம் 34:14-16 / யோசுவா 5:4-8 /லேவியராகமம்12:3 /யாத்திராகமம் 12:44 /நியாயாதிபதிகள் 14:3 /எரேமியா 9:25-26.

புதிய ஏற்பாட்டில்..

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:8 /லூக்கா 21:59 / லூக்கா 2:21/யோவான் 7:22-23 /பிலிப்பியர் 3:5 / அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:3 /அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:46 /அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:5.

இயேசு கிறிஸ்துவிற்கு முன்னால் யூதர்கள் மத்தியிலும் இன்றைய கிறிஸ்துவ மதத்தின் ஸ்தாபகர் பவுலுக்கு முன்னால் இயேசுவின் காலத்திலும் விருத்தசேதனம் என்பது இறைவனோடு கொண்ட உடன்படிக்கையாகவும் தூய்மைக்கான அடையாளமாகவும் இருந்து வந்தது. பவுலடிகள், தான் ஸ்தாபித்த கிறிஸ்துவ மதத்தை யூத சனங்களை தாண்டி மற்றவர்களிடமும் பரப்பிட எண்ணம் கொண்டார். அதற்கு விருத்தசேதனம் ஒரு தடையாக இருக்கலாகாது என்று கருதி.. விருத்தசேதன நியமத்தை தளர்த்திக் கொண்டார் என்பதை பவுலும் மற்றவர்களும் எழுதின நிருபங்களில் காண முடிகிறது.

பிற்காலத்தில் முஹம்மது நபி (ஸல்)அவர்கள் இஸ்லாத்தை போதித்த பொழுது பாட்டனார் இப்ராஹீம் (அலை) அவர்களது வழிமுறையான விருத்தசேதனத்தையும் வலியுறுத்தினார்கள். முஸ்லிம்களும் முழுக்க முழுக்க விருத்தசேதனம் செய்து வந்த நிலையில், யூதர்களில் சிலர் தற்பொழுது அதன் முக்கியத்துவத்தை குறைத்துக் கொண்டார்கள் என்று அறிகிறோம்.!

கலாச்சாரத்தின் அடிப்படையில் விருத்தசேதனம்..!

"மதக்கடமை என்ற முறையில் மட்டுமல்லாமல் கலாச்சார முறையிலும் சில இடங்களில் விருத்தசேதனம் கடைபிடிக்கப் படுகிறது. குறிப்பாக நைஜீரியாவில் உள்ள சில குழுக்கள், அர்கம்லேண்ட், ஆஸ்திரேலியாவின் மத்திய மற்றும் மேற்கு பாலைவனங்களில் உள்ள பழங்குடிகள் ஆகியோரிடமும் விருத்தசேதன பழக்கம் உள்ளது. மேலும் பசிபிக் தீவுக் கூட்டங்களான பிஜி, வனுவாட்டு, பெந்தேகொசுடு தீவுகள் மற்றும் பாலினேசியன்  தீவுகளான சமோவா, தொங்கா, குவாம், வடக்கு மரியானா தீவுகள், நியுவே, திகோபியா ஆகியவற்றில் உள்ள மக்களாலும் விருத்தசேதனம் கடைபிடிக்கப்படுகிறது. ஆணிலிருந்து பெண் தன்மையை நீக்கும் சடங்காக விருத்தசேதனம், மேற்கு ஆப்பிரிக்க தோகன் மக்களால் கருதப்படுகிறது.


மதுரை வட்டாரத்திலுள்ள 'பிறமலைக்கள்ளர்' சமூகத்தில் விருத்தசேதனம் 'கவரடைப்பு' அல்லது 'கவரடப்பு' என்ற பெயரில் கடைபிடிக்கப்படுகிறது. தற்காலத்தில் இது 'மார்க்கல்யாணம்' என வழங்கப் பெறுகிறது. தமிழ்ச் சமுதாயத்தில் பலசமூகங்களில் இருந்த இந்தப் பழக்கம், பிறமலைக்கள்ளர்களிடம் மட்டும்தான் எஞ்சியுள்ளது..!"           
SOURCE:

தமிழ்நாட்டில் 'மார்க்கல்யாணம்'எனும் பெயரில் நடத்தப்படும் விருத்தசேதனம்..!





பாலாறுபட்டியில் ஊருக்கு வெளியே மரத்தடியில் காவிவேட்டி, கையில் கம்பியுடன், ‘யாராவது வருகிறார்களா.?’ என்று ரோட்டில் கண் வைத்துக் காத்திருக்கிறார்கள், சிறுவர்கள். பைக்கில் வருபவரைப் பார்த்ததுமே கம்பியை வைத்து வழிமறிக்கிறார்கள்.! காசை எடு..இது கள்ள நாட்டு வழக்கம்..!" என்கிறார்கள் கோரஸாக, விஷயம் தெரிந்த உள்ளூர்க்காரர்கள் சிரித்தபடி காசு கொடுக்கிறார்கள். ஊருக்கு புதியவர்களோ, ‘இது என்ன நவீன பிச்சையா.. இல்லை வழிப்பறியா..?’ எனப் புரியாமல் தடுமாறுகிறார்கள்.

எங்க சாதி வழக்கப்படி 1௦ வயசுப் பையன்களுக்கு மார்கல்யாணம் (சுன்னத்) செய்வாங்க.. மார்கல்யாணம் செய்றவங்க, ஒரு வாரம் ஊருக்கு வெளியே தங்கணும். அந்த சமயத்தில் வழியில் போற வர்றவங்க கிட்ட வழிப்பறி செய்றது மாதிரி பணம் வாங்குவோம். அந்தப் பணத்தில் கோவிலுக்கு எண்ணை வாங்கி ஊத்துவோம். மீதி பணத்துக்கு காவி வேட்டி எடுத்து கட்டுவோம்..!என்றார்கள் ஊர்மக்கள். இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள சுன்னத் வழக்கம், பிறமலைக் கள்ளர் சமூகத்தினரிடம் எப்படி வந்தது..?’ என்று கேட்டால், ”எப்படி வந்ததுனு தெரியல.பாரம்பரியமாக கடைபிடித்து வருகிறோம். மார்கல்யாணம் பண்ணும்போது சொந்தக்காரங்களுக்கு சொல்லி அனுப்புவோம்.அவுங்க சீர் செய்வாங்க.!என்றார்கள்.

இது குறித்து, சமூகஅறிஞர் தொ.பரமசிவனிடம் கேட்டோம்.

உலகத்தில் பல பழங்குடிகளிடம் இந்தப் பழக்கம் இருந்துள்ளது. குறிப்பாக, யூதர்களிடம் இருந்தது. தமிழ்
சமுதாயத்தில் பல சமூகங்களில் இருந்த இந்தப்பழக்கம், பிறமலைக் கள்ளர்களிடம் மட்டும்தான் எஞ்சியுள்ளது. அவர்கள் முந்தைய காலத்தில் மார்கல்யாணத்தை கவரடைப்புஎனச் சொல்வார்கள். இந்த வழக்குச் சொல்லும் தற்போது மறைந்து விட்டது, என்றார்..!

-இரா.முத்துநாகு

SOURCE:
9 நவம்பர் 2011 ஆனந்தவிகடனில் வெளிவந்த செய்தி.. 


கவிஞர் வைரமுத்து எழுதிய 'கள்ளிக்காடு இதிகாசம்' எனும்  நூலில்..அவரது வரிகளில்..!

"ஆணுக்குன்னு உண்டான 'அந்த' உறுப்புல மேல் தோல மட்டும் எடுத்துவிட்டுட்டா நாளப்பின்ன நல்லது. 'அங்க' அழுக்குச் சேராது. சிக்கலான இடம் பாருங்க; சீக்கு வராது. ஒரு வயசுப் பயலுக்கு ஒரு நாவிதரு அந்தத் தோல வைத்திய முறைப்படி நீக்கிவிடற வைபவந்தான் 'மார்க்க கல்யாணம்'. அதைத்தான் நம்ம ராவுத்தமாருக 'சுன்னத்'துங்கிறாக..!''

(கள்ளிக்காடு இதிகாசம். பக்கம்:280)

விருத்த சேதன பரவல்..!


பொதுவாக இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும், இஸ்ரேலிலும் அதிக அளவில் விருத்தசேதனம் செய்யப்படுகின்றது.

2006ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கை, உலக அளவில் 30 முதல் 33 சதவிகித ஆண்கள் விருத்தசேதனம் செய்துக் கொள்வதாக கூறுகின்றது. மேலும் இதன் கணக்கீடுகள் விருத்தசேதன பழக்கமானது கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இறங்குமுகமாகவும், தென் ஆப்பிரிக்காவில் ஏறுமுகமாகவும் உள்ளதை சுட்டிக் காட்டுகின்றது. நாடுகள்வாரியாக விருத்தசேதனத்தின் பரவல் பின்வருமாறு உள்ளது.       
              
நாடுகள் வாரியாக விருத்தசேதன பரவல். உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வரைபடம்..!


  
SOURCE:
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D 

ஆய்வுகள்..!
           
மருத்துவ அறிவியல் என்றால் என்னவென்றே அறிந்திராத 1400 ஆண்டுகளுக்கு முந்தைய முஸ்லிம்கள் தங்கள் திருத்தூதர் கற்றுத் தந்த வாழ்வியலை பின்பற்றி கத்னா எனப்படும் ஆண் உறுப்பின் முன்தோலை நீக்கும் முறையை கையாண்டு வந்தனர். இன்று வரை அதை கடைப் பிடித்தும் வருகின்றனர்.

இன்று மருத்துவ அறிவியல் அபரிவிதமான வளர்ச்சி கண்டபோது, உலகிலே குழந்தை மருத்துவத்தின் மிக உயர்ந்த அமைப்பான American Academy Of Pediatrics என்னும் குழந்தை மருத்துவத்திற்கான அமெரிக்க அகாடமி, கத்னா செய்வதால் அதிக மருத்துவ பயன்கள் உள்ளன என்று 2012 இல் தான் ஆய்வு செய்து உறுதிபடுத்தியுள்ளது.


AAP கூறும் பயன்களில் ஒரு சில:


எளிதான சுகாதாரம்:

கத்னா செய்த ஆணுறுப்பை மிக இலகுவாக சுத்தப்படுத்தி சுகாதாரமாக வைத்துக் கொள்ளமுடியும். அழுக்குகள், நுண்கிருமிகள் ஆண்குறியின் நுனியில் சேர்வதைத் தடுத்துக் கொள்ளமுடியும். அதற்காக தனியொரு அக்கறை எடுத்துக் கொள்ள தேவையில்லை. சர்வ சாதாரணமாகவே சுத்தமுடனும், சுகாதாரத்துடனும் கத்னா செய்த ஆணுறுப்பைப் பராமரித்துக் கொள்ளமுடியும்.

சிறுநீர்ப் பாதை நோய் தொற்று குறையும் வாய்ப்பு:

சிறுநீர்ப் பாதையில் நோய்தொற்று வரும் வாய்ப்பு, கத்னா செய்யாத ஆண்களுடன் ஒப்பிடும் போது கத்னா செய்த ஆண்களுக்கு மிகமிகக் குறைவு. சிறுவர்களுக்கு Phimosis எனும் ஆணுறுப்பின் முன்தோல் இறுக்கம் ஏற்பட்டு, அதனால் கழிக்கும் சிறுநீர் சிறிது தங்கிவிடும். இந்த நிலை கத்னா செய்த ஆண்களுக்கு குறிப்பாக சிறுவர்களுக்கு வருவதே இல்லை. இந்த Phimosis நோய் காரணமாக சிறுநீர் பாதையில் தொற்று வரும் ஆபத்து அதிகம். சில சமயம் சாதாரண சிறுநீர்ப் பாதை நோய் தோற்று, கிட்னி பாதிப்பை ஏற்படுத்தலாம் இந்த நிலை கத்னா செய்த ஆண்களுக்கு வருவது கிடையாது.

பால்வினை நோய் வரும் ஆபத்து குறைகிறது:

கத்னா செய்த ஆண்களுக்கு எய்ட்ஸ் உட்பட பால்வினை நோய்கள் வரும் வாய்ப்பு மிக குறைவு. இதை ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப் பட்ட ஒரு ஆய்வும், CDC Math Model என்னும் அமெரிக்க ஆய்வும் உறுதிப்படுத்துகின்றது.

ஆணுறுப்பில் வரும் பிரச்சினைகள் குறைவு:

கத்னா செய்யப்படாத ஆண்குறியின் முன்தோலை பின்னால் இழுக்க முடியாமல் போகும் நிலை வருவதால், ஆண்குறியின் முன்தோல் அழற்சி, ஆண்குறியில் அழற்சி வரலாம். தோலின் கீழ் மாவு போன்ற அழுக்கு சேர்ந்து, கட்டி போன்று உருவாகலாம்

கத்னா செய்த ஆண்களுக்கு ஆண்குறி கேன்சர் என்பது அறவே வராது.

கத்னா செய்த ஆண்களின் மனைவியருக்கு Cervical Cancer எனும் கருப்பைவாய் புற்று நோய் வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. அதற்கு காரணம், கத்னா செய்த ஆண்களுக்கு HPV என்னும் Human Pappiloma Virus தொற்று வரும் வாய்ப்பே இல்லை. இந்த HPV என்னும் வைரஸ் கிருமி தான் பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. மேலும் கத்னா செய்த ஆண்குறியில், Smegma எனும் மாவு போன்ற அழுக்கு சேராததால், ஆண்குறியில் வரும் நோய்த்தாக்கம் குறைவு. இதை இன்னொரு ஆப்பிரிக்க ஆய்வு உறுதிப்படுத்துகிறது. Prostate Cancer எனும் ஆண் இனபெருக்க உள்ளுறுப்பில் வரும் புற்று நோய், கத்னா செய்த ஆண்களுக்கு வரும் வாய்ப்பு மிக குறைவு என்று இன்றைய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

கத்னா குறித்து மேலும் சில மருத்துவ மற்றும் அறிவியல் ஆய்வு முடிவுகள். புதிய ஆய்வு ஒன்று கீழ்க்கண்டவாறு உறுதிப்படுத்துகிறது:


கத்னா செய்வதால், ஆணுறுப்பில் உள்ள பாக்டீரியா Ecosystem எனப்படும் உயிர் பொருட்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு செயல்படும் முறை,அதிகளவில் மாறுகிறது. நோயை உருவாக்கும் பாக்டீரியா எண்ணிக்கை வெகுவாகக் குறைகிறது. அதிலும் குறிப்பாக ஆக்ஸிஜன் இல்லாமல் வாழும் பாக்டீரியாவான Anaerobic வெகுவாகக் குறைகிறது. அதனால் ஆணுறுப்பில் வரும் நோய்த் தொற்று குறைகிறது.

(தகவல் Journal mBio ஏப்ரல் 16, 2012)

இதே தகவலை இன்னொரு ஆய்வும் உறுதி செய்கிறது.

அமெரிக்க ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மரபணு ஆய்வாளர் Lance Price, "ஒரு பாறையைப் புரட்டிப் போடுவதால் Ecosystem மாற்றுவதைப் போல கத்னாவினால் ஆண்குறி பாக்டீரியா Ecosystem மாற்றம் அடைகிறது..!" என்கிறார்.("From an ecological perspective, it's like rolling back a rock and seeing the ecosystem change.!").

இதேபோல உகாண்டா நாட்டில், Lance Price மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் கத்னா செய்த ஆண்களிடம் நடத்திய ஆராய்ச்சியில், "கத்னாவினால் நீக்கப்பட்ட தோலின் கீழ் பகுதியிலுள்ள நுண்ணுயிரிகளில் Biodiversity மிக குறைவாக உள்ளது, மிக நல்ல விஷயம். கத்னாவினால் நீக்கப்படும் நுண்ணியிரிகள் தான் ஆண்குறியில் அழற்சியை ஏற்படுத்துவதற்கு மூலக்காரணம்.!" என்று கண்டுபிடித்துள்ளனர்.

உலகிலேயே குழந்தை மருத்துவதிற்கான மிகப் பெரிய அமைப்பான AAP, கடந்த 13 ஆண்டுகாலமாக கத்னாவினால் ஏற்படும் நன்மைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்த நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு தான், பலவித ஆய்வுகள் மூலமாக உறுதிப்படுத்தி ஒப்புக் கொண்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

உலகிலேயே ஆப்பிரிக்காவில் தான் கத்னா குறித்து அதிக ஆய்வுகள் நடத்தப் பட்டன. 2005 இல் தென்னாப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கத்னா செய்யப்பட்ட ஆண், HIV Positive என்னும் எய்ட்ஸ் நோய் தொற்றுள்ள பெண்களோடு உடலுறவு கொண்டபோது, அவர்களுக்கு அந்தப் பெண்களில் இருந்து வரும் HIVவினால் ஏற்படும் AIDS நோய் தொற்று, 63 சதவிகிதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டது, இதனால் கத்னா செய்த ஆண்கள் பாதுகாப்பாக எந்தப் பெண்ணுடனும் தகாத உடலுறவு கொள்ளலாம் என்று கருதக் கூடாது. இது ஒரு ஆய்வறிக்கை தான். இஸ்லாம் விபச்சாரத்தை அறவே தடுக்கிறது..வெறுக்கிறது.!


கத்னாவிற்கு எதிராக, அதன் எதிர்ப்பாளர்களால் வைக்கப்படும் ஒரு வாதம் கத்னா செய்த ஆண்களுக்கு உடலுறவின் போது அதிக உடலுறவு சுகம் கிடைக்காது என்பது. ஆனால் இந்த வாதத்தையும் பல ஆய்வுகள் பொய் என்று உறுதி செய்து விட்டன.


கத்னா செய்யப்பட்ட ஆண்களின் ஆணுறுப்பின் நுனிப்பகுதி, சிறுவயதில் இருந்தே, வேஷ்டி, ஜட்டி அல்லது பேன்ட் போன்றவற்றின் மீது உரசி பழக்கப்பட்டு போவதால், உடலுறவின் போது பெண்ணுறுப்பில், ஆணுறுப்பை வைத்தவுடன் அதிக உணர்ச்சி கூச்சத்தால் ஏற்படும் Premature Ejaculation எனப்படும் முன்கூட்டியே விந்து வெளியாதல்எனும் நிகழ்வு, கத்னா செய்த ஆண்ககளுக்கு ஏற்படாது. இதனால் அவர்களுக்கும் அவர்களது மனைவியருக்கும் நீண்ட நேர உடலுறவு மற்றும் உடலுறவில் ஏற்படும் உச்சகட்டத்தை அடையமுடியாமல் போகும் ஏமாற்றம் ஆகியன ஏற்படாது.

சுன்னத் செய்வதன் நன்மைகள்.
By: டாக்டர் த.முஹம்மது கிஸார்.
Thanks

OnlinePj.com


பெண்களுக்கு கத்னா உண்டா..?


ஷாபிஇமாம் உள்ளிட்ட பலர், ஆண்களும் பெண்களும் கத்னா செய்வது கடமை என்கின்றனர். அபூஹனீஃபா இமாம், மாலிக் இமாம் ஆகியோர் உள்ளிட்ட பலர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அது சுன்னத் என்று கூறுவதாக, நவவி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

பெரும்பாலானவர்கள் பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டும் என்று கூறினாலும் அது சம்மந்தமாக வரும் ஹதீஸ்கள் ஆதாரமாகக் கொள்ளத்தக்கதாக இல்லை. பெண்களின் பிறப்புறுப்பில் உணர்வுகளின் முடிச்சு என்று கூறப்படும் பகுதியை வெட்டியெடுப்பதை தான் பெண்களின் கத்னா என்கின்றனர்.!

உம்முஅதிய்யா(ரலி) அவர்கள் பெண்களுக்கு கத்னா செய்பவராக இருந்தார். அவரிடம், " ஓட்ட நறுக்கி விடாதே..! மேலோட்டமாக நறுக்குவாயாக..! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதாவூதில் ஒரு ஹதீஸ் உள்ளது.      

حدثنا سليمان بن عبد الرحمن الدمشقي وعبد الوهاب بن عبد الرحيم الأشجعي قالا حدثنا مروان حدثنا محمد بن حسان قال عبد الوهاب الكوفي عن عبد الملك بن عمير عن أم عطية الأنصارية أن امرأة كانت تختن بالمدينة فقال لها النبي صلى الله عليه وسلم لا تنهكي فإن ذلك أحظى للمرأة وأحب إلى البعل قال أبو داود روي عن عبيد الله بن عمرو عن عبد الملك بمعناه وإسناده قال أبو داود ليس هو بالقوي وقد روي مرسلا قال أبو داود ومحمد بن حسان مجهول وهذا الحديث ضعيف
(அபூதாவூத் 4587)


இதில் இடம் பெறும் முஹம்மது இப்னு ஹஸ்ஸான் என்பவர் யாரென்று தெரியாதவர். இப்னுஅதீ, பைஹகீ, அபூதாவூது ஆகியோர் இதனை உறுதிப்படுத்துகின்றனர். இதே ஹதீஸ் பைஹகீயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

17338 - وأخبرنا أبو علي الروذباري أنبأ أبو بكر بن داسه ثنا أبو داود ثنا سليمان بن عبد الرحمن وعبد الوهاب بن عبد الرحيم الأشجعي قالا ثنا مروان ثنا محمد بن حسان قال عبد الوهاب الكوفي عن عبد الملك بن عمير عن أم عطية الأنصارية : أن امرأة كانت تختن بالمدينة فقال لها النبي صلى الله عليه و سلم لا تنهكي فإن ذلك أحظى للمرأة وأحب إلى البعل قال أبو داود محمد بن حسان مجهول وهذا الحديث ضعيف
سنن البيهقي الكبرى 8 /324]


இந்த ஹதீசும் முஹம்மத் பின் ஹஸ்ஸான் என்பவர் வழியாக அறிவிக்கப்படுவதால், இதுவும் பலவீனமான தாகும். இதே ஹதீஸ் ஹாகிமிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது..!

 6236 - ما حدثناه أحمد بن سلمان الفقيه ببغداد ثنا هلال بن العلاء الرقي ثنا أبي ثنا عبيد الله بن عمرو عن زيد بن أبي أنيسة عن عبد الملك بن عمير عن الضحاك بن قيس قال : كانت بالمدينة امرأة تخفض النساء يقال لها : أم عطية فقال : لها رسول الله صلى الله عليه و سلم اخفضي و لا تنهكي فإنه أنضر للوجه و أحظى عند الزوج
تعليق الذهبي قي التلخيص : سكت عنه الذهبي في التلخيص
المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص [5 /264]  

இதன் அறிவிப்பாளரான அலா என்பவர் இட்டுக் கட்டுபவர் என்று சந்தேகிக்கப்பட்டவர். எனவே இதுவும் பலவீனமான ஹதீஸ் தான். இதே கருத்தில் பஸ்ஸார், அபூநயிம் ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

8881 - وعن ابن عمر قال : دخل على النبي صلى الله عليه و سلم نسوة من الأنصار فقال : ص . 311
 يا نساء الأنصار اختضبن غمسا واخفضن ولا تنهكن فإنه أحظى عند أزواجكن وإياكن وكفر المنعمين
 قال مندل : يعني الزوج
 رواه البزار وفيه مندل بن علي وهو ضعيف وقد وثق وبقية رجاله ثقات
مجمع الزوائد [5 /310]


இந்த ஹதீஸில் முன்தில் இப்னு அலி என்பார் இடம் பெறுகிறார். அவர் பலவீனமானவர் என்பதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும். கத்னா ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும் என்ற ஹதீஸ் அஹ்மத் நூலில் இடம் பெற்றுள்ளது.


 حدثنا سريج حدثنا عباد يعني ابن العوام عن الحجاج عن أبي المليح بن أسامة عن أبيه أن النبي صلى الله عليه وسلم قال الختان سنة للرجال مكرمة للنساء 

இதன் அறிவிப்பாளர் ஹஜ்ஜாஜ் என்பார் பலவீனமானவர். தனது ஆசிரியரை விட்டுவிட்டு ஆசிரியரின் ஆசிரியர் பெயரைப் பயன்படுத்தக் கூடியவர் என்பதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.



பைஹகீயிலும் இது இடம் பெற்றுள்ளது. இது இப்னு அப்பாஸின் சொந்தக்கூற்று என்பதே சரியான முடிவு என்று அவரே கூறுகிறார்..!

 أخبرنا أبو بكر بن الحارث الفقيه ، أنبأ أبو محمد بن حيان ، ثنا عبدان ، ثنا أيوب الوزان ، ثنا الوليد بن الوليد ، ثنا ابن ثوبان ، عن محمد بن عجلان ، عن عكرمة ، عن ابن عباس ، عن النبي صلى الله عليه وسلم قال : " الختان سنة للرجال , مكرمة للنساء " هذا إسناد ضعيف , والمحفوظ موقوف *

இந்த ஒரே கருத்தில் வருகின்ற எந்தவொரு ஹதீஸும் விமர்சனத்துக்கு உட்படாமல் இல்லை. அதனால் பெண்கள் கத்னா செய்வது இஸ்லாமிய வழியல்ல என்பதை உணரலாம்.

மேலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலுணர்வை இறைவன் வழங்கியுள்ளான். அந்த உணர்வைக் கொண்டே உலகம் நிலை பெற்றுள்ளது. அவர்கள் உடலுறவின் மூலம் அந்த இச்சையைத் தணித்துக் கொள்கின்றனர்.

பெண்களுக்கு கத்னா செய்வதால் அவர்கள் அந்த பாக்கியத்தை இழந்து விடுகின்றனர். இல்லறத்தில் அவர்கள் பூரணதிருப்தியை அடைவதில்லை. அடையவும் முடியாது.

ஆண்களுக்கு கத்னா செய்வது அவர்களின் அந்த உணர்வுக்குத் தடையாக இராது. அதற்கு உறுதுணையாக இருக்கும். இதற்கு மேல் விளக்கமாக இதை எழுத இயலாது.

இறைவன் எந்தநோக்கத்திற்காக பிறப்புறுப்புகளை அமைந்துள்ளானோ அந்த நோக்கத்தில் பெரும்பகுதி பெண்களுக்கு கத்னா செய்வதால் அடிபட்டுப் போகின்றது.


இறைவன் வழங்கிய பாக்கியத்தை அழித்துக் கொள்வது என்ற அடிப்படையில் பார்க்கும்போது பெண்களுக்கு கத்னா செய்வது கொடூரமானது என்று அறியலாம்.
(பி.ஜெனுலாபிதீன் அவர்கள், அல்ஜன்னத் இதழில் எழுதியது..)

சில கேள்விகளும்..அதற்கான பதில்களும்..! 

Q.சிறு குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்வது என்பது மனித உரிமை மீறல் இல்லையா..?

A.பிறக்கும் பொழுது தாயின் தொப்புள் கொடியை கதறகதற அறுத்து தான் மருத்துவமனைகளில் குழந்தையை வெளியேற்றுகிறார்கள். அதுவும் தவறு என்று சொல்ல வேண்டியது வருமே.!   


Q. ஆணுறுப்பின் நுனித் தோலை இறைவன் ஏன் படைக்கவேண்டும்.. பிறகு நீக்க சொல்ல வேண்டும்..? Why did He create the foreskin which covers the tip of the penis and ordered us to cut it?
A. தின்று விட்டு வீசியெறிந்து விடுகிற வாழைபழத்தை, தோலுடன் ஏன் அவன் படைக்க வேண்டும்..? கிட்டத்தட்ட அதே காரணம் தான் இதற்கும்.!

தாயின் கருவறையில் வளருகிற ஆண் குழந்தைக்கு இந்த ‘கவரிங்’ அவசியம் தேவைப்படுகிறது. தாய்,சேய் இருவருக்கும் அங்கே உயிரியல்ரீதியாக கேடேதும் நேராமல் இருப்பதற்காக பாதுகாப்பு கவசமாக இந்தத் தோல் படைக்கப்பட்டிருக்க வேண்டும். குழந்தை பிறந்தப் பிறகு அந்த தோல் பல ஆபத்துகளை விளைவிக்கும் என்பதால் முஸ்லிம்களால் அது நீக்கப்படுகிறது.

இது தொடர்பாக மேலும் தெரிந்துக் கொள்ள Sheikh Muhammad Amin Sheiko என்பாரது விளக்கத்தை படித்துப் பார்க்கலாம்.!         




Q. ஆண்குறியின் நுனித்தோலுடன் இயற்கையே படைத்துள்ள பொழுது.. செயற்கையாக அதனை நீக்கி மாற்றம் செய்வது மூலமாக இயற்கைக்கு  விரோதமாக நடக்கலாமா..? அத்தகைய விருத்தசேதனத்தை வலியுறுத்துகிற இஸ்லாத்தை  இயற்கை மார்க்கம் என்று கூறலாமா..?

A. மனிதன் இயற்கையாக நிர்வாணியாக பிறக்கிறான். செயற்கையாக ஆடை தயார் செய்து உடுத்துகிறோம். மிருகங்கள் கூட பலவித திறமைகளுடன் பிறக்கின்றன. மனிதன் முட்டாளாக.. நீச்சல் கூட தெரியாதவனாக பிறக்கிறான். செயற்கையாக அவனுக்கு கல்வி புகட்டப்படுகிறது.

இயற்கையாக முடி வளருகிறது..நகம் வளருகிறது.. அதையெல்லாம் அவ்வபோது வெட்டி செயற்கையாக சீர்திருத்திக் கொள்கிறோம். இயற்கையாக அசுத்தம் அடைகிறோம். செயற்கையாக தூய்மை படுத்திக் கொள்ள வேண்டியதிருக்கிறது.

மிருகங்கள் காயம்படாமல் நடக்க, ஓட இயற்கையாகவே குழம்புடன் பிறக்கின்றன.. நாமோ செயற்கையாக மிதியடிகளை தேடிக் கொள்ள வேண்டியதிருக்கிறது. 
  
மனிதனைப் பொறுத்தவரை எது இயற்கை.. எது செயற்கை..?

சீர்திருத்தம் இல்லாத காடு போல வளர கடமை பட்டது மிருகம். தன்னை சீர்திருத்திக் கொண்டு அழகான தோட்டமாக மலர வேண்டியவன் மனிதன்.!


தொகுப்பு: பூமராங் 


SOURCES:



http://www.bbc.co.uk/religion/religions/judaism/jewishethics/circumcision_1.shtml



https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

http://www.who.int/hiv/topics/malecircumcision/en/


 http://www.scientificamerican.com/.../male-circumcision.../



http://mbio.asm.org/content/4/2/e00076-13




 http://www.onlinepj.com/kel.../Viruthasethanam-Saivathen/...

No comments:

Post a Comment