இன்றைய தேதியில் அனைவரையும் கவர்ந்த உரையாக அமைந்து விட்டது டில்லி நேரு பல்கலைக்கழக மாணவர் கன்ஹையா விடுதலைக்குப் பின்னர் ஆற்றிய உரை. அரசியல் ரீதியாக தன்னை ஒருவர் எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும். என்பதை இந்த உரை நமக்கு உணர்த்துகிறது. மாணவர் கன்ஹையாவின் உரையை முழுமையாக தமிழ் வாசகர்களுக்கு வழங்குகிறோம்!
தோழர்களே,
எல்லாவற்றுக்கும் முதலாக, ஜேஎன்யூவின் மாணவர்கள், பேராசிரியர்கள், தொழிலாளர்கள், கடைக்காரர், கடையில் வேலை பார்க்கும் தொழிலாளி, வாயிற்காவலாளி என ஜேஎன்யூவின் அனைத்து அங்கத்தினருக்கும் எனது புரட்சிகர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, நாட்டின் அனைத்து பிரிவு மக்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஜேஎன்யூவோட போராட்டத்தில் துணை நின்ற உலகளவிலான பல்கலைக்கழகங்கள், மாணவர்கள், மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.ஊடகம், சிவில் சமூகம், அரசியல், அரசியலற்ற என ஜேஎன்யூவை காப்பதற்கான போராட்டத்திலும், ரோஹித் வெமுலாவிற்கு நியாயம் கிடைப்பதற்கான போராட்டத்திலும் துணை நிற்கிறவர்களுக்கும் எனது செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு நாட்டிற்கு எது சரி, எது தவறு என்று பாடமெடுக்கும் மகான்களுக்கும், அவர்களது காவல்துறைக்கும், தொலைக்காட்சி சேனல்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.ஜேஎன்யூ அவமானப்படுத்துவதற்காகவேனும், பிரைம் டைமில் இடம் கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
யார் மீதும் எங்களுக்கும் வெறுப்பில்லை. குறிப்பாக, ஏபிவிபியை சொல்ல வேண்டுமென்றால், கிஞ்சித்தும் வெறுப்பில்லை. ஏன் தெரியுமா? நம் வளாகத்தின் ஏபிவிபி வெளியே இருக்கும் ஏபிவிபியை விட முற்போக்கானது. மேலும், யாரெல்லாம் தங்களை அரசியல் பண்டிதர்களாக கருதிக் கொள்கிறார்களோ, அவர்கள் எல்லோரும் கடந்த ஜேஎன்யூவின் மாணவர் சங்க தலைவருக்கான தேர்தல் விவாதத்தின் போது, ஏபிவிபி தலைவருக்கு நேர்ந்ததை காணொளியில் பார்த்துவிடுங்கள். ஏபிவிபியில் இருப்பதிலேயே கூடுதல் அறிவாளியான, ஜேஎன்யூவின் ஏபிவிபியை தண்ணீர் குடிக்க வைத்தோம் எனும் போது, நாட்டின் பிற பகுதிகளில் ஏபிவிபியின் நிலையை சிந்தித்து பாருங்கள். ஆகையால், ஏபிவிபிக்கு எதிராக எந்த வெறுப்புணர்ச்சியும் இல்லை. ஏனென்றால், நாங்கள் உண்மையிலேயே ஜனநாயக சக்திகள், நாங்கள் அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம், ஆகையால், ஏபிவிபியை எதிரியாய் அல்ல, மாறாக, எதிர்கட்சியாக மட்டுமே பார்க்கிறோம். நாங்கள் உங்களை துர்தேவதைகளைப் போல நடத்த மாட்டோம். ஏனென்றால், வேட்டையும் கூட வேட்டைக்கு தகுதியானதையே செய்யப்படும். நடந்தவை எல்லாமே, காணாததை கண்டு திக்கித்து சொல்வதாக நினைக்க வேண்டாம்.. உண்மையாக சொல்கிறேன், உண்மையை உண்மை என்றும், பொய்யை பொய் என்றும் சொல்ல துணிச்சலாக நின்ற ஜேஎன்யூவை வணங்க விரும்புகிறேன்.
வேடிக்கையான விசயம் என்னவென்றால், இது உடனடி நிகழ்வாகும். ஏன் இதை சொல்கிறேன் என்றால், அவர்களுடைய செயல்கள் எல்லாம் திட்டமிட்டதாக இருக்க, நம்முடையவை எல்லாமே அனிச்சையாக நிகழ்ந்தன. இந்த தேசத்தின் அரசியல் சாசனத்தின் மீதும், சட்டத்தின் மீது, நீதி வழங்கல் முறையின் மீதும் கண்டிப்பாக நம்பிக்கை இருக்கிறது. மாற்றம்தான் உண்மையானது. நாங்கள் மாற்றத்தின் பக்கம் நிற்கிறோம். எங்களுக்கு இந்த சாசனத்தின் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. சாசனத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல சோசலிசம், மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய சாசனத்தின் லட்சியங்களின் பக்கம் நிற்கிறோம். நான் இங்கே உரையாற்ற வரவில்லை, என் அனுபவத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். முன்னர் அதிகம் படிப்பேன்.
ஜேஎன்யூவில் நிறைய ஆய்வு செய்கிறார்கள். முதற்கட்ட நேரடி தகவல்களைத்தான் நானும் கூற இருக்கிறேன். நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது எனக்கு இப்போதைக்கு சொல்ல ஒன்றுமில்லை. அரசியல் சாசனத்தின் மீது யாரெல்லாம் நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ, அண்ணல் அம்பேத்கரின் கனவுகளை யாரெல்லாம் மெய்பிக்க விரும்புகிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவதை, ஜாடைகளிலேயே புரிந்து கொள்வார்கள். நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதைப் பற்றி இப்போதைக்கு எதுவும் பேச இல்லை.
பிரதமர் அவர்கள் ட்வீட் செய்திருக்கிறார். சத்யமேவ ஜெயதே என்று ட்வீட் செய்திருக்கிறார். உங்களோடு ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், சத்யமேவ ஜெயதே உங்களுடையது கிடையாது, இந்த நாட்டினுடையது, சாசனத்தினுடையது, நானும் கூறுகிறேன் சத்யமேவ ஜெயதே. வாய்மையே வெல்லும். வாய்மையே வெல்லும். இந்த போரில் பங்கெடுத்துள்ள அனைவருக்கும் ஒன்றை கூறிக் கொண்டு எனது அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
அந்த ஒரு விசயம் என்னவென்றால், சில மாணவர்கள் மீது அரசியல் கருவி போல தேசத்துரோக சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால், எங்களைப் போன்றவர்கள் கிராமங்களிலிருந்து வருகிறோம். என்னுடைய குடும்பத்தை பற்றி இப்போது நீங்களும் அறிந்திருப்பீர்கள். எங்கள் ஒவ்வொரு ரெயில்வே நிலையத்திலும் அங்கே கண்கட்டி வித்தைகள் காண்பிப்பார்கள். மந்திர வித்தை காண்பித்து மோதிரம் விற்பார்கள். மனதுக்கு விருப்பமான மோதிரம். யாருக்கு என்ன விருப்பமோ, அந்த மோதிரம் அதை பூர்த்தி செய்யும் வல்லமை பெற்றதென்று அந்த மந்திரவாதி சொல்வான்.
இந்த தேசத்திலும் சில கண்கட்டி வித்தைக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கருப்பு பணம் வந்துவிடும் என்றார்கள். ஹர் ஹர் மோதி. விலைவாசி கடுமையாக ஏறிவிட்டது, இனியும் சகித்துக் கொண்டிராதீர்கள். எல்லோருடன் சேர்ந்து, எல்லோருடைய முன்னேற்றம். இந்த அனைத்து மந்திரங்களும் மக்களின் மனங்களில் இன்றும் இருக்கிறது. இந்தியர்கள் விரைவாக மறந்துவிடக் கூடியவர்கள் என்றாலும், அபாரமான கோமாளித்தனங்களால் அந்த மந்திரங்கள் மறக்க முடியாததாகியிருக்கிறது. நமது முயற்சி என்னவென்றால், அந்த மந்திரங்களை மறக்க செய்ய வேண்டும். எப்படி மறக்க செய்வது? இந்த நாட்டின் ஆய்வு மாணவர்களின் உதவித் தொகையை ரத்து செய்து விடுங்கள். மாணவர்கள் என்ன செய்வார்கள், உதவித் தொகையை வழங்கிடுங்கள், வழங்கிடுங்கள் என்று கோரிக்கை எழும். சரி, ஏற்கனவே தந்து கொண்டிருந்த 5000, 8000 ரூபாயை தருகிறோம், அதுவே தொடரும் என்று கூறிவிடுவார்கள். அதாவது, உதவித்தொகையை அதிகரித்து தாருங்கள் என்ற கோரிக்கை காணாமல் போய்விடும். யார் கூறுவார்கள்? ஜேஎன்யூ. உங்கள் மேல் வசவுகள் பொழியப்படும் பொழுது, கவலை கொள்ளாதீர்கள். எதை ஈட்டினீர்களோ, அதையே நீங்கள் உண்கிறீர்கள்?
இந்த நாட்டில் தேசவிரோதி அரசு அமைந்திருக்கிறது. அந்த மக்கள் விரோதி அரசுக்கு எதிராக பேசுவீர்கள் என்றால், அவர்களுடைய சைபர் செல் என்ன செய்யும். போலி வீடியோக்களை வெளியிடும். அவர்கள் உங்களுக்கு வசவுகளை அனுப்பி வைப்பார்கள். உங்கள் குப்பை தொட்டியில் எத்தனை காண்டம் இருந்தது என்பதையும் கணக்கெடுப்பார்கள். இது மிகவும் கடினமான சூழல். அதனாலேயே, இந்த சூழலில் நாமும் தீவிரமாக சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். ஜேஎன்யூ மீது நடத்தபட்ட தாக்குதலானது, திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாகும். நீங்கள் நடத்திய Occupy UGC என்று நடத்திய போராட்டத்தை காலி செய்துவிட திட்டமிட்டார்கள். எதற்காக இந்த தாக்குதல் என்றால், நீங்கள் ரோஹித் வெமுலாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், அவனுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காகவும் போராடினார்கள். அதை அவர்கள் முறியடிக்க விரும்பினார்கள். ஜேஎன்யூவை பற்றிய விவாதங்களுக்கு மதிப்பிற்குரிய முன்னாள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஏன் பிரைம் டைமில் நேரம் ஒதுக்குகிறார் என்றால், நீங்கள் இந்த நாட்டின் மக்களின் வங்கி கணக்குகளுக்கு 15 லட்சம் வந்து சேரும் என்று இன்றைய பிரதமர் வாக்குறுதி கொடுத்திருந்தார் என்பதை மறக்கடிக்க வேண்டும். ஆனால், ஒரு விசயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன், ஜே என்யூவில் அட்மிசன் கிடைப்பது கஷ்டமானது. ஆனால், ஜேஎன்யூ-க்காரர்களுக்கு மறக்க செய்வது என்பதோ அதைவிட கடினமானது.
நீங்கள் மறக்கடித்துவிட முடியும் என்ற நினைத்தால் நாங்கள் உங்களுக்கு மீண்டும், மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன். இந்த தேசத்தை ஆள்பவர்கள் எப்பொழுதெல்லாம் ஊழலில் ஈடுபட்டிருக்காங்களோ, அப்போதெல்லாம், ஜேஎன்யூ மிக துணிச்சலாக தன்னுடைய குரலை வெளிப்படுத்தியிருக்குது. நாங்கள் அதை மீண்டும், மீண்டும் செய்வோம். நாங்கள் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்போம். உங்களால் எங்கள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய முடியாது.
ஒரு பக்கம் இராணுவ வீரர்கள் எல்லையில் மடிகிறார்கள். எல்லையில் உயிர் துறக்கும் வீரரக்ளுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சிறையில் நான் ஒருவிசயத்தை கற்றுக் கொண்டேன். அது என்னவென்றால்,
போராட்டம் கருத்தியலுக்கானதாக இருக்கும் போது தனிநபர்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. எல்லையில் இராணுவ வீரரக்ள் உயிரிழப்பதை குறித்து பாஜக தலைவர் ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசுகிறார்.
யார் அவர்கள், உங்கள் சகோதரர்களா?
இராணுவ வீரர்களுக்காகவும், நமக்காகவும் உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் இந்த நாட்டிற்குள் தற்கொலை செய்து கொள்கிறார்களே...அந்த இராணுவ வீரர்களின் தந்தைகளான அந்த விவசாயிகள் குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
என் அப்பன்தான் சேற்றில் உழைக்கிறான், என் சகோதரன்தான் இராணுவத்தில் இணைந்து எல்லையிலும் உழைக்கிறான், உயிர் துறக்கிறான். எங்கள் உறவுகள்தான் நாட்டிற்குள்ளும், எல்லையிலும் இறக்கிறார்கள். சூழ்ச்சி செய்து நாட்டிற்குள் போலியான விவாதத்தை உண்டு பண்ணாதீர்கள். என்னுடைய கேள்வி இதுதான்..நாடாளுமன்றத்தில் நின்று கொண்டு, நீங்கள் யாருக்கெதிராக அரசியல் செய்கிறீர்கள்?
இறக்கும் எங்கள் உறவுகளின் உயிர்களுக்கு யார் பொறுப்பு? இறப்பவர்களா? சண்டையிட வைப்பவர்கள்தானே பொறுப்பு.
(ஷாந்தி நஹி தப்தக், ஜப்தக்
சுக்பாக் ந சப்கா ஷுக்பாக் ந சப்கா ஸம் ஹோகா
நஹி கிஷி கோ பகூத் அதிக், நஹி கிஷி கோ கம் ஹோகா- ஹிந்தி)
வளம் எல்லோருக்கும் எதுவரை சமமாகாதோ
அமைதி அப்போது வரை வாராது
சிலருக்கு வளம் பெறுக, சிலருக்கு வயிறு காய
என நிலை இருக்க
அமைதி என்பது வாராது)
போருக்கு யார் காரணம்? யார் மக்களை சண்டையிட வைப்பது? என் அப்பா எப்படி இறக்கிறார்? என் சகோதரன் எப்படி இறக்கிறான்? என்று இந்த பிரைம்டைம் ஸ்பீக்கர்களிடம் நாங்கள் கேட்க விரும்புகிறோம். நாட்டிலிருக்கும் பிரச்சினையிலிருந்து விடுதலை வேண்டுவது பிழையா? எதிலிருந்து விடுதலை வேண்டும் உங்களுக்கு இவர்கள் என்ன கேட்கிறார்கள்? நீங்களே கூறிவிடுங்கள். இந்தியா யாரையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்கிறார்கள். சரி, எங்களுக்கு பாரதத்திலிருந்து விடுதலை வேண்டாம். இந்தியாவிலிருந்து விடுதலை கேட்கவில்லை, இந்தியாவில் விடுதலை கேட்கிறோம். ’இருந்து’ என்பதற்கும் ’இல்’ என்பதற்கும் வேறுபாடு உண்டு.
ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை கேட்கவில்லை. அந்த விடுதலையை இந்த நாட்டின் மக்கள் போராடி பெற்றிருக்கிறார்கள். நான் இப்போது என் அனுபவத்திற்கு வருகிறேன். காவல்துறையினர் என்னிடம் விசாரித்தனர். அது என்ன செவ்வணக்கம், செவ்வணக்கம் என்று கூறுகிறீர்கள்? இந்த கேள்வி விசாரணையின் அங்கம் கிடையாது. உணவு கொடுக்க, மருத்துவ உதவி செய்ய என காவல்துறையினர் அழைத்து செல்லும் போது...ஜேஎன்யூ ஆட்களில் நான் பிரம்ம புத்திரன் இல்லையா? பேசாமல் எப்படி இருப்பது? நாங்கள் அவர்களோடு பேச தொடங்கினேன். அவரும் என்னை போன்றவராகவே இருந்தார். இந்த நாட்டில் காவல்துறையில் பணி புரிவது யார்? யாருடைய தந்தை விவசாயியோ, யாருடைய தந்தை கூலியோ, யாருடைய தந்தை விளிம்பு நிலை வர்க்கத்தை சேர்ந்தவரோ அவர்கள்தானே காவல்துறையில் பணி புரிகிறார்கள்.
நானும், இந்த நாட்டின் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றாக பீகாரிலிருந்துதான் வருகிறேன். நானும் ஒரு ஏழை குடும்பத்திலிருந்துதான் வருகிறேன். நானும் ஒரு விவசாய குடும்பத்திலிருந்துதான் வருகிறேன். காவல்துறையிலும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் வேலை பார்க்கிறார்கள். நான் கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர் வரையிலானவர்களை குறித்துதான் பேசுகிறேன். ஐபிஎஸ் ஆபிசருக்கும் எனக்கும் இடையே அதிக உரையாடல் ஏதும் நிகழவில்லை. அந்த காவலரோடு நான் உரையாடினேன்.அவர் கேட்டார் “லால் சலாம், லால் சலாம் (செவ்வணக்கம்) என்றால் என்ன?”
நான் சொன்னேன் “சிவப்பு என்றால் புரட்சி, ஆக, செவ்வணக்கம் என்றால் புரட்சிக்கு வணக்கம்.” என்றேன்
”புரியவில்லை” என்றார்
”இன்குலாப் ஜிந்தாபாத்... கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ”என்றேன்
“ ம் தெரியும்” என்றார்.
“புரட்சிக்கு உருதுவில் இன்குலாப்” என்று கூறுவார்கள் என்றேன்
”இன்குலாப் ஜிந்தாபாத் என்று ஏபிவிபி காரர்களும் கூறுகிறார்களே.” என்றார் ஆச்சரியத்தோடு
”இப்போது புரிகிறதா? அவர்கள் போலி புரட்சிக்காரர்கள், நாங்கள் அசல் புரட்சிக்காரர்கள்” என்று என்றேன்.
அந்த மனிதன் 18 மணி நேரம் வேலை செய்கிறார், அவரிடம் ”நீங்கள் ஓவர் டைம் பார்ப்பதற்கு பணம் கிடைப்பதில்லையா? என்றேன்.“லஞ்சம் என்று நீங்கள் கூறுகிறீர்களே, அதிலிருந்து எடுத்துக் கொள்கிறோம்.” என்றார்
”சீருடைக்கு அவர்களுக்கு 110 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் உள்ளாடைகள் கூட கிடைக்காது எனும் போது சீருடை எங்கிருந்து வரும். இதை அந்த கான்ஸ்டபிள்தான் கூறுகிறார். நான் சொன்னேன் இதிலிருந்துதானே விடுதலையை கோருகிறோம். பட்டினிச்சாவிலிருந்து, ஊழலிருந்து ” என்றேன்
இதற்கிடையில் அரியானாவில் ஒரு போராட்டம் தொடங்கிவிட்டது. உங்கள் எல்லோருக்கும் தெரியும், தில்லி காவல்துறையில் பெரும்பாலும் மக்கள் ஹரியானாவிலிருந்துதான் வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அவர்கள் கடின உழைப்புக்காரர்கள். ஆகவே, அவர்களை நான் பாராட்டுகிறேன்.
”இட ஒதுக்கீடு” என்றேன்....”அது சாதியவாதம் மிகவும் கொடுமையானது.” என்றார் அந்த கான்ஸ்டபிள்
“இந்த சாதியவாதத்திலிருந்துதானே விடுதலை வேண்டும் என்கிறோம்” என்றேன்
”இதில் ஏதும் தேசத்துரோகம் இல்லையே” என்றார் அவர்
நான் அவரிடம் “ சிஸ்டத்தில் அதிக பலம் யாருக்கு இருக்கிறது” என்றேன்
”அவர் என் தடிக்குதான் அதிகம் சக்தி உள்ளது. “என்றார்.
”உங்களால் இந்த தடியை உங்கள் விருப்பத்தின்படி சுழற்ற முடியுமா?” என்று மறுபடியும் கேட்டேன்.
“இல்லை” என்று சோகமாக தலையாட்டினார்.
”எல்லா சக்தியும் யாரிடம் போனது?” என்றேன்
“தினமும் போலி ட்வீட் செய்கிறவரிடம் போய்விட்டது.” என்றார்
‘இப்படி போலி ட்வீட் செய்யும் சங் பரிவார கும்பலிடமிருந்துதான். நாங்கள் விடுதலையை கோருகிறோம்.” என்றேன்
“உண்மையை சொன்னால், நாம் இருவரும் ஒன்றாக நிற்பது போன்ற உணர்வு வருகிறது.” என்றார்
இதில் ஒரு இக்கட்டு இருக்கிறது. அனைத்து ஊடகங்களையும் பார்த்து கூறவில்லை. தாழ்மையாக சொல்கிறேன். எல்லோரும் அங்கிருந்து சம்பளம் வாங்குவதில்லை. சிலருக்கு அங்கிருந்துதான் ஊதியம் வருகிறது, ஊடகங்களில் வேலை பார்த்துக் கொண்டெ, நாடாளுமன்றத்தில் ரிப்போர்ட் செய்து கொண்டே, உள்ளே செல்ல முயன்று கொண்டிருப்பவர்கள்தான் பதட்டமான சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தனி தனியாக நாம் பேசி கொண்டாலும் ’பரபரப்பு” செய்தியை பாருங்கள் என்று பீதியூட்டுகிறார்கள்.
அந்த காவல்துறை ஊழியல் மேலும் சொன்னார் “நண்பா, உண்மையை சொன்னால், எப்.ஐ.ஆரில் உங்கள் பெயர் வந்துவிட்டதால் நீ வருவாய் என்று தெரியும்.” நான் குறுக்கிட்டு, “ எப்.ஐ.ஆரில் பெயர் வருவதற்கு முன், ஏபிவிபியின் பட்டியலில் வந்துவிட்டோம். ஏபிவிபியின் பட்டியலில் குற்றச்சாட்டப்பட்டவர்கள் அனைவரது பெயரும் முதலில் வந்துவிட்டது, பின்னர்தான் எப்.ஐ.ஆரில் பெயர் வந்தது.” என்றேன். அவர் தொடர்ந்தார், “ நீ வந்தால் உன்னை நன்றாக உதைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், உன்னோடு பேசிக் கொண்டிருந்ததில், அவர்களை நான்கு சாத்து, சாத்தலாம் போல இருக்கிறது.” என்றார்
மிகவும் முக்கியமான விசயத்தை அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஊடகங்களின் வழியாக பொதுமக்களின் கவனத்திற்கு இதை கொண்டு வர விரும்புகிறேன். என்னை போல, சாதாரண குடும்பத்தை இளைஞன் அவன், அவனும் ஆய்வு மாணவனாக விரும்பினான் ஆனால், அவனுக்கு ஜேஎன்யூ கிடைக்கவில்லை. அவனும் என்னை போலவே, இந்த நாட்டின் நிலையை புரிந்து கொண்டு போராட விரும்பினான். படித்தவனுக்கும், கற்றவனுக்குமான வேறுபாட்டை புரிந்து கொள்ள விரும்பினான். அவன் இன்று காவல்துறையில் பணி புரிகிறான். இங்கேதான் ஜேஎன்யூ தனித்து நிற்கிறது. அதனால்தான், நீங்கள் ஜேஎன்யூவில் குரல்வளையை நெறிக்க விரும்புகிறீர்கள்.
அப்போதுதான், சாதாரண இளைஞன் ஆய்வு மாணவனாக வர முடியாது. ஏனென்றால், வெளியே கல்வி லட்சக்கணக்கில் விற்பனையாகிறது. அவனால் கல்வியை விலை கொடுத்து வாங்கிட இயலாது. எல்லையில் நின்றாலும், விவசாயத்தில் தன் உயிரை இழந்தாலும் அல்லது ஜேஎன்யூவில் விடுதலைக்காக போராடுகிறானோ நீங்கள் அந்த குரல்களை நசுக்க விரும்புகிறீர்கள், அந்த குரல்கள் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்று நீங்கள் விரும்புகிறீர்கள். நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அரசியல் ஜனநாயகத்தால் பலனில்லை என்று அண்ணல் அம்பேத்கர் கூறியிருக்கிறார். ஆகவே, நாங்கள் சமூக ஜனநாயகத்தை நிறுவுவோம். அடிக்கடி அரசியல் சாசனத்தை பற்றி பேசுகிறார்கள். ஜனநாயகம் என்பது சோசலிசத்தின் பாதையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும் லெனின் கூறுகிறார். இதனால்தான் நாங்கள் ஜனநாயத்தை பற்றி பேசுகிறோம். இதனால்தான், நாங்கள் பேச்சுரிமையை பற்றி பேசுகிறோம். இதனால்தான், நாங்கள் சமத்துவத்தை பற்றி முழங்குகிறொம், இதனால்தான் நாங்கள் சோசலிசத்தை பற்றி பேசுகிறோம். ஒரு செருப்பு தைக்கிறவனின் மகனும், ஜனாதிபதியின் மகனும் ஒரே பள்ளியில் படிக்கும் சமத்துவ நிலைக்காக நாங்கள் பேசுகிறோம். ஆனால், நீங்கள் இந்த குரலை நசுக்க விரும்புகிறீர்கள்.
எவ்வளவு அழுத்தம் கொடுப்பீர்களோ, அவ்வளவு மேலெழும் என்று அறிவியலில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இவர்களுக்கு அறிவியலுக்கு தொடர்பேயில்லை. ஏனென்றால், அறிவியலை படிப்பது ஒரு துருவம் என்றால், விஞ்ஞானி மறு துருவம். அறிவியல் மனப்பான்மை நாட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களோடு உரையாடல் நிகழ்த்தினால் இந்த நாட்டில் பட்டினிசாவிலிருந்தும், வறுமையிலிருந்தும், சுரண்டல் மற்றும் ஊழலிலிருந்து தலித், பழங்குடி, பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் அதிகாரத்திற்காக என நாங்கள் கோரும் விடுதலையை சாதித்தே தீருவோம். இதே சாசனத்தின் கீழ், இதே நாடாளுமன்றத்தில் கீழ், இதே நீதிவழங்கும் முறையின் கீழ் நின்றே சாத்தியமாக்குவோம்.
அது எங்கள் கனவு. இதுதான் அண்ணல் அம்பேத்கரின் கனவாக இருந்தது. இதுதான் தோழன் ரோஹித்தின் கனவும் கூட.. ஒரு ரோஹித்தை கொன்று விட துணிந்தீர்கள். அவனுக்கான நியாயத்திற்கான போராட்டத்தை நசுக்கிவிட நினைத்தீர்கள். ஆனால், பாருங்கள், எவ்வளவு பெரியதாய் கூட்டம் பரவிக் கொண்டிருக்கிறது.
இன்னொரு விசயம் இருக்கிறது, என்னுடைய சிறை அனுபவத்திலிருந்து சொல்ல விரும்புகிறேன். இது என்னுடைய சுய விமர்சனம். உங்களுக்கான சுயவிமர்சனமாக உங்களுக்கு தோன்றினால், இதை நீங்களும் பரிசீலியுங்கள். நாம் ஜேஎன்யூவை சார்ந்தவர்கள் அறிவுப்பூர்வமாகத்தான் பேசுகிறோம். ஆனால், சாதாரண மொழியில் பேசுவதில்லை. கடினமான மொழியையே கையாள்கிறோம். அது சாதாரண மக்களுக்கு புரிவதில்லை. அது அவர்களுடைய குற்றம் இல்லை. அவர்கள் புரிந்து கொள்ளும் தன்மை கொண்ட நேர்மையான மக்கள்தான். நீங்கள்தான் அவர்களுடைய தளத்திற்கு சென்று அவர்களோடு உரையாடுவதில்லை.
அவர்களிடம் சென்றடைவதுதான் என்ன? அதிகத்துக்கு அதிகமான க்ரூப்புகளுக்கு அனுப்புங்கள். ஓ.எல்.எக்ஸில் உங்கள் பொருட்களை விற்பனை செய்யுங்கள் என்று விற்பனை செய்யும் மனநிலை பரவலாக நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது.அது குறித்து நாம் உரையாட வேண்டும். சிறைச்சாலையின் அனுபவத்திலிருந்து இங்கே கூற விரும்புகிறேன். அது என்னவென்றால், எனக்கு சிறையில் இரண்டு குவளைகள் கிடைத்தன, ஒன்று நீல வணத்தில் இருந்தது, மற்றது சிவப்பு வண்ணத்தில் இருந்தது, அதை பார்த்து நான் மீண்டும், மீண்டும் சிந்தித்தேன். எனக்கு விதியின் மீது நம்பிக்கை கிடையாது. கடவுளையும் தெரியாது. ஆனால், இந்த நாட்டில் ஏதோ நல்லது நடக்க இருக்கிறது. நீலம் மற்றும் சிவப்பு வண்ண குவளை வைக்கப்பட்டிருந்த தட்டு இந்தியா போல தெரிந்தது. நீல வண்ண குவளை அம்பேத்கரிய இயக்கமாக எனக்கு தோன்றியது, சிவப்பு வண்ணம் பொதுவுடமை இயக்கமாக தோன்றிற்று. இவற்றின் ஒற்றுமை இந்த நாட்டில் உருவாக்கப்பட்டால், உண்மையை கூறுகிறேன், விற்பது என்பது, விற்கும் கும்பலை துரத்துவதுதான் நடக்கும் என்று அவற்றை பார்த்து எனக்கு தோன்றியது.
விற்கும் கும்பல் நமக்கு தேவையில்லை. எல்லோருக்குமான நீதியை உறுதிப்படுத்துபவர்களின் அரசை நாம் நிறுவுவோம். அனைவரோடும் இணைந்து, அனைவருக்குமான மேம்பாடு என்பதை எதார்த்தத்தில் உறுதி செய்வோம்.
மிக நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜேஎன்யூ மாணவர்களை சிறையிலடைத்திருக்கிறார்கள். ஏனென்றால், நீண்ட நாட்களுக்கு பிறகு....
அதற்கு முன் இதனோடு தொடர்புடையது, ஒரு சுவாரஸ்யமான செய்தியை சொல்லிவிடுகிறேன்.
மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களின் பெருமதிப்பு கொண்ட...(சொல்ல வேண்டியிருக்கிறதல்லவா?) யாருக்கு தெரியும். இதையும் திரித்து ஒரு வீடியோ வெளியிட்டாலும் வெளியிட்டுவிடுவார்கள். ஆகையால், மதிப்பிற்குரிய பிரதம மந்திரி அவர்கள், ஸ்டாலின் மற்றும் குருசேவை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அதை கேட்ட மாத்திரத்தில் தொலைக்காட்சி பெட்டிக்குள் நுழைந்து விடும் ஆர்வம்தான் மேலிட்டது. அவருடைய சூட்டை பிடித்துக் கொண்டு “ மோடிஜி கொஞ்சம் ஹிட்லரை பற்றியும் பேசிவிடுங்களேன். ஹிட்லர் இல்லையென்றால், கருப்பு தொப்பு அணியும் முசோலினியை பற்றியாவது பேசிவிடுங்களேன். அவரைத்தானே உங்கள் குருஜி கோல்வால்கள் சந்திக்க சென்றிருந்தார். பாரதிய உணர்வை புரிந்து கொள்ள ஜெர்மனிலிருந்து தத்துவ தரவிறக்கம் செய்ய கூறியிருந்தார் ” என்று சொல்ல தோன்றியது.
ஆனால், அவர் மன் கி பாத்(மனதின் செய்தி) கேட்பதில்லை, அவர்கள் மனதில் தோன்றியதை செய்கிறார்கள். இது ரொம்பவும் தனிப்பட்ட விசயம். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று என் தாயோடு பேசினேன். ஜேஎன்யூவில் இருந்த தருணங்களில் அவரோடு அதிகம் பேசியதில்லை. சிறைக்கு சென்று வந்ததற்கு பிறகு, சீரான இடைவெளியில் பேச வேண்டும் என்று தோன்றியது. நீங்களும் உங்கள் வீட்டாரோடும் அவ்வப்போது பேசிக் கொண்டிருங்கள். நான் என் தாயிடம் ”நீ மோடியை பயங்கரமாக கேலி செய்து விட்டாயே” என்றேன். அதற்கு அவர் “ கேலி செய்வது, வேடிக்கை காண்பிப்பது எல்லாம் அவர்கள் வேலை. நான் என் வலியை மட்டும்தான் சொன்னேன். யாருக்கு இந்த வலி புரிகிறதோ அவர்கள் அழுவார்கள், புரியாதவர்கள் மட்டுமே சிரிப்பார்கள்.” மேலும் அவர் “ எனக்கு வலித்தது, அதற்காகத்தான் மோடியும் ஒரு தாயின் பிள்ளைதானே, என் பிள்ளையும் தேசத்துரோக வழக்கில் சிக்க வைத்துவிட்டார்கள். எப்பொழுதும் மன் கி பாத் செய்ற அவர், எப்போதாவது தாயின் பேச்சையும் எப்பொழுதாவது கேட்கட்டும்.”
(குரல் தளுதளுத்துவிட்டது)
என்னிடம் அவருக்கு சொல்ல சொற்களே இல்லை. ஏனென்றால், இந்த நாட்டிற்குள் என்ன நடக்கிறதோ, அதில் ரொம்பவும் பயங்கரமான விசயம் உட்பொதிந்து இருக்கிறது. அதனால்தான், நான் ஏதேனும் ஒரு கட்சியை பற்றி பேசவில்லை. குறிப்பிட்ட தொலைக்காட்சியை பற்றி பேசவில்லை. அதனால்தான், இராணுவ வீரர்களை குறித்து மட்டும் பேசவில்லை. உண்மையில் நான் முழு நாட்டை குறித்து பேசுகிறேன். நாட்டின் மக்களே இல்லாத நாடு, எப்படியாபட்ட நாடாக இருக்கும்.
சிந்தியுங்கள்!
ஜேஎன்யூ சார்பாக மக்கள் எழுந்து நின்றார்கள் என்றால், நாம் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு மரியாதை செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களால் வலியை புரிந்து கொள்ள முடிகிறது, ஜேஎன்யூவில் எப்படியான இளைஞர்கள் படிக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
இங்கே 60 விழுக்காடு பெண்கள் படிக்கும் நாட்டின் ஒரே பல்கலைக்கழகம் இதுதான். ஏராளமான அயோக்கியர்களையும் தாண்டி, இட ஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தும் பல்கலைக்கழகம் ஜேஎன்யூதான். வளாகத்தின் எந்த பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட வில்லையோ, அங்கே நடைமுறைப்படுத்த நாங்கள் போராடுகிறோம். நான் இதுவரை உங்களிடம் கூறியதில்லை. என் குடும்பம் 3000 ரூபாயில்தான் இயங்கி வருகிறது. நான் ஏதாகிலும் பெரிய பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாக இணைந்திருக்க முடியுமா?
எனக்கு எந்த அரசியல் கட்சியின் மீதும் அனுதாபம் கிடையாது, எனக்கென்று நான் நம்பும் சித்தாந்தம் இருக்கிறது. இது போன்று, ஜேஎன்யூவில் தாக்குதல் தொடுக்கப்படும் போது, ஆனால், பல்கலைக்கழகத்திற்கு ஆதரவாக நிற்பவர்களுக்கும் தேசத்துரோகி முத்திரை குத்தப்படுகிறதே? சீத்தாராம் யெச்சூரியையும் என்னோடு இணைத்து தேசத்துரோக முத்திரை குத்திவிட்டிருக்கிறார்கள். ராகுல் காந்தி, டி..ராஜா, கெஜ்ரிவால் என பலர் மீதும் தேசத்துரோக வழக்கு போடப்பட்டிருக்கிறது. ஊடகங்களின் வழியாக ஜேஎன்யூவின் சார்பாக, இன்னும் சொல்லப்போனால் ஜேஎன்யூ சார்பாக அல்ல, உண்மையை உண்மையென்றும், பொய்யை பொய்யென்றும் கூறுகின்றனர். அவர்களுக்கு வசவுகள் அனுப்பப்படுகின்றன. அவர்களுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. உண்மையில் முழக்கங்கள் எழுப்பினீர்களா? என்று சில காவல்துறை ஊழியர்கள் கேட்டார்கள். நான் ,மீண்டும் சென்று எழுப்புவோம் என்றேன்.
பகுத்தறிவுங்கிறது மொத்தமாக முடிந்து போய்விட்டதென்று அவர்கள் கருதுகிறார்கள். இந்த அரசு வந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. இன்னும் மூன்று ஆண்டுகள் சகித்துக் கொள்ள வேண்டும். இரண்டே ஆண்டுகளில் மக்கள் தங்கள் பகுத்தறிவை இழந்துவிட மாட்டார்கள். ஏனென்றால், 69 விழுக்காடு மக்கள் அந்த இந்து மனோநிலைக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். வெறும், 31 விழுக்காட்டை மட்டும்தான் இவர்களுக்கு ஆதரவு. அதில் சிலரை ஹர், ஹர் என்று பேசி ஏமாற்றிவிட்டார்கள். இன்று அனைத்திலும் (ஹர் என்றால் அனைத்தும் என்று பொருளுண்டு) மக்கள் பிரச்சினையை சந்திக்கிறார்கள். இது உங்களுடைய நிரந்தர வெற்றி என்று கருதாதீர்கள். ஆயிரம் முறை பொய்யை திரும்ப, திரும்ப சொல்வதன் மூலம் அதை மெய்யாக்கிவிடலாம்தான். ஆனால், அது பொய்யோடு மட்டுமே நிகழும், உண்மையோடு இல்லை.
சூரியனை நூறு முறை நிலா என்று அழைப்பதால், அது நிலவாகுமா? நீங்கள் ஆயிரம் முறை கூறினாலும் அது சூரியனாகத்தான் இருக்கும். நீங்கள் பொய்யைத்தான் உண்மையை போல திரிக்க முடியும். ஆனால், உண்மையை பொய்யாக்க முடியாது. இவர்களுடைய செயல்கள் என்பது மக்களின் கவனத்தை திசைதிருப்புவதில்தான் இருக்கிறது. மக்களுடைய அன்றாட பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புகிற வேலை அது.
மக்களை ஏமாற்றுவதற்கு அவர்கள் புது, புது திட்டம் வைத்திருக்கிறார்கள். இங்கே பல்கலைக்கழகத்தில் உதவித்தொகைக்கான போராட்டம் நடந்தால், அங்கே ரோஹித் கொலை செய்யப்பட்டான். ரோஹித்துக்காக போராட தொடங்கினோம், தேசத்துரோக குற்றச்சாட்டுகள் பரவ தொடங்கின. ஜேஎன்யூவை தேசத்துரோகிகளின் கூடாரம் போல சித்தரித்தார்கள். இதுவும் நீண்ட நாள் நடக்காது. அடுத்த தயாரிப்பில் இறங்கியிருப்பார்கள். ராமனுக்கு கோவில் கட்டுவதற்கு கிளம்பியிருக்கிறார்கள். இன்றைய செய்தியை குறிப்பிடுகிறேன். இன்று சிறையிலிருந்து மீண்டு வரும் போது நிகழ்ந்தது.
மதம் தெரியுமா? என்றார் ஒரு காவலர். ”மதம் என்றால் என்னவென்றே தெரியாது” என்றேன் நான்.
“ முதலில் என்னவென்று கற்றுக் கொள், பின்னர் ஒத்துக் கொள்வாய்” என்றார்
”எந்த குடும்பத்திலாவது பிறந்திருப்பாய்தானே?” என்றார்
”கெடுவாய்ப்பாய், இந்து குடும்பத்தில் பிறந்துவிட்டேன்” என்றேன்
”அதை பற்றி எதாவது தெரியுமா?” என்று மீண்டும் கேட்டார்
”எனக்கு தெரிந்த வரையில், கடவுள் அண்டத்தை படைத்தார். ஆனால், கடவுளுக்காக ஏதோ ஒன்றை படைக்க விரும்புகிறார்கள், அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்றேன்.
“சிறந்த ஐடியாதானே” என்றார்
இன்னும் எவ்வளவு உயரம், வாயில் ராமனும், கக்கத்தில் அரிவாளையும் வைத்துக் கொண்டு ஏற்கனவே 80லிருந்து 180 ஆக ஆக்கி கொண்டீர்கள். ஆனால், இனி நடக்காது. ஆனாலும், அவர்கள் தொடர்ந்து முயன்று வருகிறார்கள்.
நாட்டின் முக்கியமான பிரச்சினைகளின் மீது முக்கியமான கேள்விகள் ஏதும் எழும்பிவிடக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். நான் இங்கே நிற்கிறேன், நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் மீது ஏதோ தாக்குதல் நடந்ததாக உணர்கிறீர்கள். உண்மையில் இது பெரிய தாக்குதல்தான். ஆனால், இந்த தாக்குதல் இன்று தொடங்கியதில்லை.
உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆர்.எஸ்.எஸின் பத்திரிக்கை ஆர்கனைசரில் ஜேஎன்யூவை பற்றி ஒரு கவர் ஸ்டோரி எழுதியிருந்தார்கள். சுப்பிரமணிய சுவாமி ஜேஎன்யூவை பற்றி பேசியிருந்தார். ஒருவேளை ஏபிவிபியின் எனது நண்பர்கள் கேட்பீர்களேயானால், அவர்களிடம் எனக்கு ஒரு சின்ன வேண்டுகோள் இருக்கிறது. ஒருமுறை சுப்பிரமணியசுவாமியை இங்கே அழைத்து வாருங்கள். நேருக்கேர் விவாதிக்கலாம். தர்க்க முறையில், குதர்க்க வழிமுறையில் அல்ல, ஜேஎன்யூவை நான்கு மாதங்களுக்கு மூடிவிட வேண்டும் என்று நிருபிப்பாரேயானால், நான் அவரது கருத்தை ஆமோதிக்க தயார். இல்லையென்றால், முன்னர் எப்படி நாட்டை விட்டு வெளியே இருந்தீர்களோ, அப்படியே நாட்டை விட்டு வெளியே போய்விடுங்கள் என்று தாழ்மையான வேண்டுகோள் வைப்பேன்.
சுவாரஸ்யமான செய்தி ஒன்றை கூறுகிறேன். நீங்கள் வளாகத்திற்குள் இருப்பதால் உங்களுக்கு இந்த விசயங்கள் தெரிந்திருக்காது. எவ்வளவு திட்டமிடல், முதல் நாளிலிருந்து திட்டமிடல். இங்கிருக்கிற ஏபிவிபிகாரர்களை குறிப்பிடவில்லை, வெளியே இருக்கிற ஏபிவிபி காரர்களை குறிப்பிடுகிறேன்.
எந்த பதாகையோடு ஹிந்து கிராந்தி சேனா போராடுகிறதோ, அதே பதாகையோடுதான் ஏபிவிபிகாரர்களும் போராடுகிறார்கள், முன்னாள் இராணுவ வீரர்களும் அதே பதாகையோடுதான் போராடுகிறார்கள். இதன் பொருள், எல்லோருடைய நிகழ்ச்சி நிரலும் நாக்பூரில்தான் திட்டமிடப்படுகிறது. இவர்களுடைய போராட்டங்கள் எதுவும் தன்னிச்சையாக நடப்பவை அல்ல. அரசியல் ரீதியாக ஊக்கம் பெற்றது அது. அதன் நோக்கம் இந்த நாட்டில் இருக்கும் போராட்ட குரலை முற்றும், முழுதாக நசுக்குவது.
மக்களின் அடிப்படை விசயங்களிலிருந்து கவனத்தை திசை திருப்பி, இந்த வளாகத்தில் போராடக்கூடிய அநிர்பான் ஆகட்டும், உமர் ஆகட்டும், அசுதோஷ் ஆகட்டும், கண்ணையாவாகட்டும், உங்கள் அனைவரிலும் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் அவர்களுக்கு தேசத்துரோக முத்திரை குத்தி, ஜேஎன்யூவின் குரலை நசுக்கி , ஜேஎன்யூவின் நீர்த்து போகச் செய்து, இந்த போராட்டத்தை ஒடுக்க நினைக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். எவ்வளவு அழுத்தினாலும், நாங்கள் முன்னிலும் வேகமாக எழுவோம். இது ஒரு நீண்ட போராட்டம்.
நிற்காமல், மூச்சுவிடாமல் ஒரு தொடர்ச்சியோடு இந்த போராட்டத்தை நாம் முன்னகர்த்த வேண்டும். இந்த வளாகத்திற்குள், நாட்டை பிளவுப்படுத்த நினைக்கும் சக்திகள், அது ஏபிவிபியாகட்டும், இந்த வளாகத்திற்கு வெளியே நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டு செல்லும் ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பலாகட்டும் நாம் ஒருங்கிணைந்து எழுந்து நிற்போம். ஜேஎன்யூ எழுந்து நிற்கும் ,வரலாறு படைக்கும்
எந்த போராட்டம் பல்கலைக்கழக ஊக்கத்தொகக்காக, ரோஹித்துக்கான போராட்டத்தில் நாட்டின் விளிம்பு நிலை மக்களின் போராட்டத்தில் தொடர்ந்து நின்ற உங்களுக்கு நன்றி. தொடர்ந்து போராடுங்கள்!
மாணவர்கள் ஒற்றுமை ஓங்குக, சமூக ஒற்றுமை ஓங்குக.
இன்குலாப் ஜிந்தாபாத் செவ் வணக்கம் ஜெய் பீம்!
நன்றி - மின்னம்பலம்
YOU TUBE VIDEO
https://www.youtube.com/watch?v=AzaCTYU3kkI&ebc=ANyPxKoXvek5jS4A1GQBdoFsthxUWdz6Lycb-1rNNS9vMBB8ZKr1qThDvfBnhI79GtODHXBJZnSjs720GtUqxYzpg0tqwjuO3g
YOU TUBE VIDEO
https://www.youtube.com/watch?v=AzaCTYU3kkI&ebc=ANyPxKoXvek5jS4A1GQBdoFsthxUWdz6Lycb-1rNNS9vMBB8ZKr1qThDvfBnhI79GtODHXBJZnSjs720GtUqxYzpg0tqwjuO3g
[][][]
No comments:
Post a Comment