Translate

Wednesday, 16 March 2016

வானம்-வளி மண்டலம் பற்றி குர்ஆன்





வளி மண்டலம் பற்றி குர்ஆன்


அரபியில் வானம் என்பதற்கு ஸமாஃ என்ற பதம் உபயோகிக்கப்பட்டாலும் அந்த வார்த்தைக்கு வானம் என்று மட்டும் பொருளல்ல. நமக்கு மேலே உள்ள எல்லாவற்றிற்கும் ஸமாஃ என்று சொல்லப்படும். இதன்படி இந்த வார்த்தை விசாலமான கருத்தைக் கொண்டுள்ளது. எனவே தான் குர்ஆனில் வீட்டு முகட்டிற்கும் ஸமாஃ என்ற சொல் வந்துள்ளது. வீட்டின் முகடும் நமக்கு மேலே தான் உள்ளது.

நமது பூமியைச் சுற்றி வளிமண்டலம் என்ற போர்வை போர்த்தப்பட்டிருப்பதை நாம் அறிவோம். அதுவும் நமக்கு மேலே இருப்பதால் ஸமாஃ என்ற வார்த்தையை வளிமண்டலம் என்ற பொருளிலும் உபயோகிக்கலாம். 

''மேலும் நாம் வானத்தை (வளிமண்டலத்தை) பாதுகாக்கப்பட்ட முகடாக அமைத்தோம்.'' (21:32) குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள இந்த  வசனத்தில் வரும் ஸமாஃ என்ற வார்த்தைக்கு வளிமண்டலம் என்ற பொருளும் பொருந்தும்.

வளிமண்டலம்:

பூமியைச் சுற்றி காற்று மற்றும் வாயுக்கள் நிரம்பிய போர்வை தான் வளிமண்டலம். இது பல அடுக்குகளைக் கொண்டது. ஏறத்தாழ 1000 கி. மீ. வரை இந்த முகடு - பாதுகாப்பு மண்டலம் பரவியிருக்கிறது. அதற்கு மேலும் அடர்த்தி குறைந்த வாயுக்கள் பரவியுள்ளன. அல்லாஹ் இப்படியொரு வளிமண்டலத்தை ஏன் படைத்திருக்கிறான்? இதன் மூலம் பல நன்மைகள் இருக்கின்றன, என்பது மட்டுமல்ல, எத்தனையோ ஆபத்துகளை விட்டும் இந்த மண்டலம் மூலம் பாதுகாப்பு பெறுகிறோம், என்பதைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

இன்ஜினியர்கள் வீட்டுக்கு கான்கிரீட் முகடு வேண்டுமானால் போடலாம். ஆனால் வளிமண்டலத்தைப் போல பிரமாண்டமான முகட்டை உலகின் அனைத்து பொறியாளர்கள் சேர்ந்தாலும் உண்டாக்கிட முடியாது. கண்ணுக்குத் தெரியாத இந்த வளிமண்டலம் இல்லையென்றால் பூமியில் எதுவும் உயிர் வாழ முடியாது.

வெளிச்சம் எதனால்?:

பகலின் பளிச்சிடும் வெளிச்சத்திற்கும் இரவின் இருட்டுக்கும் என்ன காரணம் என்றால் சூரியன் என்று கூறிவிடுவோம். ஆனால் இது கண்டிப்பாக சரியான - முழுமையான பதிலாக இருக்கமுடியாது.

பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் சூரியக் கதிர்கள் பட்டு சிதறுவதால் தான் இந்த வெளிச்சத்தைப் பார்க்கிறோம். இல்லையென்றால், ஏறத்தாழ 200 கி.மீ.க்கு அப்பால் நாம் சென்று பார்த்தால் சூரியன் இருக்கும். ஆனால், வானம் கருப்பாகத்தான்  தெரியும். சூரியன் இருக்கும்போதே நட்சத்திரங்களும் தெரியும். ஆனால் நம்முடைய வானம் நாம் பார்க்கும் பொழுது நீல நிறமாக இருக்கிறது. அது ஏன்? சூரிய ஒளி பூமியை அடையும் முன்பு வளிமண்டலத்திலுள்ள காற்றில் புகுந்து சிதறடிக்கப் படுகிறது. சூரிய ஒளியை சிதறடிக்கும் போது ஒளியிலுள்ள பிற நிறங்களை விட நீல நிறமே நமக்கு அதிகமாகத் தெரிகிறது.

குர்ஆன் கூறும் இருட்டு:

20 நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள் யாவும்,  அறிவியல் வளர்ச்சி பெறாத அந்தக் காலத்தில் இறக்கியருளப்பட்ட குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறதென்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான் உண்மை. ''வானத்தில் வாயிலொன்றை அவர்களுக்கு திறந்துவிட்டு அதன் வாயிலாக அவர்கள் மேலேறத் தொடங்கினாலும், எங்கள் பார்வைகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. (எதையும் பார்க்க முடியவில்லை) இல்லை. நாங்கள் சூனியம் செய்யப்பட்டிருக்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள்.'' திருக்குர்ஆன்  (15: 14, 15)

இந்த வசனத்தில், வானத்தில் ஏற்றிவிட்டாலும் கூட இறைநிராகரிப்பாளர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் வளிமண்டலத்திற்கு வெளியே போனால் வானம் கருப்பாக இருக்கும், என்பதும் சூசமாக விளக்கப்பட்டுள்ளது. எனவே தான் வளிமண்டலத்திற்கு வெளியே இருட்டு இருப்பதற்கு இவ்வசனத்தில் ஆதாரம் இருப்பதாக தஃப்ஸீருல் முனீரில் கூறப்பட்டுள்ளது.

சந்திரனில்:

பூமியைப்போல் சந்திரனுக்கு வளிமண்டலம் ஏதும் கிடையாது. மனிதன் அங்கு சென்ற போது திருமறை சொன்ன உண்மை கண்கூடாக தெரிந்தது. பூமியில் சூரிய உதயத்திற்கு முன்னரும் அஸ்தமனத்திற்குப் பின்னரும் பொழுது புலருவதையோ பொழுது சாய்வதையோ காண்பதைப் போல நிலவில் காண முடியவில்லை.

சந்திரனில் திடீரென இரவும், திடீரென பகலும் தோன்றுகின்றன. மரத்தின் நிழலில் நாம் நின்றால், அவரின் மீது சூரிய ஒளி விழாது. எனினும் நிற்கும் நபரைத் தெளிவாகப் பார்க்க முடியும் அளவுக்கு வெளிச்சம் இருக்கும். ஆனால் சந்திரனில் ஒரு மலைக்குப் பின்னாலுள்ள நிழலில் எந்த வெளிச்சமும் இருக்காது. அந்த இடம் இரவின் இருட்டைப் போல் கடும் இருட்டாக இருக்கும்.

வளிமண்டலத்தின் மூலம் அல்லாஹ் இவ்வுலகை பேராபத்திலிருந்து பாதுகாக்கிறான். 16 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை ஓசோன் வாயு பரவியுள்ளது. இதன் மூலம் ஆபத்தான கதிர்வீச்சுகள் உடலைத் தாக்குவதை விட்டும் பாதுகாக்கப்படுகிறது. 50 கி. மீ. முதல் 80 கி. மீ. வரை உள்ள வளிமண்டல அடுக்கு விண்கற்கள் பூமியின் எல்லைக்குள் நுழைவதைத் தடுக்கிறது. இல்லையானால் எப்பொழுதும் பூமியில் விண்கற்கள் விழுந்து கொண்டே இருக்கும். பூமிக்கடியில் சுரங்கம் அமைத்துத் தான் வாழ வேண்டும். சந்திரனில் இவ்விரண்டு ஆபத்திலிருந்தும் பாதுகாப்பு பெற முடியாது.

இரத்தம் வராத துவாரங்கள்:

மனித உடலில் பல துவாரங்கள் இருக்கின்றன. ஆனால் எந்த துவாரம் வழியாகவும் இரத்தம் வெளியாவதில்லை. மூன்றரை கோடி ரோம துவாரங்களும் எட்டு கோடி வியர்வை துவாரங்களும் நம் உடலில் இருக்கின்றன.

சிறிய ஊசி குத்தினாலும் இரத்தம் வெளியாகும். ஆனால் கோடிக்கணக்கான துவாரங்களிலிருந்து இரத்தம் வெளியேறாமல் அல்லாஹ் பாதுகாக்கிறானென்றால் இந்த வளிமண்டலம் மூலம் தான். பாதுகாப்பு சாதனமின்றி வளிமண்டலத்தைத் தாண்டி வெளியே சென்று விட்டால் வியர்வை துவாரம் முதற்கொண்டு அனைத்து துவாரங்களிலிருந்தும் இரத்தம் கொட்ட ஆரம்பித்துவிடும். சந்திரனுக்குப் போய் பார்த்த பிறகு தான் மனிதனுக்கு வளிமண்டலத்தின் அருமை தெரிந்தது.

நன்றி: நிசாம் யூசுபி


[][][]

No comments:

Post a Comment