Translate

Sunday, 13 March 2016

திப்பு சுல்தான் கதை.!






ஹைதர் அலிக்கும், ஃபக்ர் உன்னிஸாவுக்கும் 1750 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் நாள் மகனாகப் பிறந்தவரே திப்புசுல்தான்!


போரும், கருணையும்

ஹைதர் அலி, அனைத்து மதத்தவர்களையும் அன்போடும், மரியாதையோடும் சமமாகவும் மதிக்கக்கூடியவர். அதனாலேயே, தனது மகன் திப்புவையும் இறைப்பணிக்காக அர்ப்பணித்தார்.

ஹைதர் அலியை, பெத்தனூர் ராஜா சண்டைக்கு இழுத்தார். பாலம் என்ற நகரில் போர் நடைபெற்றது. போர் நடப்பதை நேரில் களத்தில் நின்று பார்ப்பதற்காகத் தன் மகன் திப்புசுல்தானை, ஹைதர் அலி அழைத்துச் சென்றார். போர் உக்கிரமாக நடைபெற்றது. பெத்தனூர் ராஜா தோல்வியடைந்தார். பெத்தனூர் ராஜாவின் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் திப்புவிடம் வந்து கலங்கிய கண்களுடன் அடைக்கலம் கோரி மன்றாடினர். அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து, மரியாதையுடன் நடத்தினார். கப்பம் செலுத்தச் சொல்லாமல், கனிந்த உள்ளத்துடன் அவர்களை விடுதலை செய்தார்.! அதைக் கண்ட பெத்தனூர் ராஜா திப்புவின் முன்னிலையில் கண்கலங்கினார்; தலை தாழ்த்தி மண்டியிட்டார்.

திப்புவின் வீரம்

திண்டுக்கல் கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்தார் ஹைதர் அலி.! அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார். பொருளாதாரத் தடைகளை நீக்கினார். ‘மக்களுக்காகவே எனது அரசாங்கம் உள்ளது. மக்களின் வாழ்க்கையை மேன்மைப் படுத்தவே அது செயல்படும்; எனது அரசாங்கத்தில் மக்கள் சுதந்திரமாக வாழலாம்! ‘ என்று அறிவித்தார்.

திப்பு தனது தந்தை ஹைதர் அலியிடம் போர்க்கலையையும், போர்ப் பயிற்சிகளையும், போர் முறைகளையும் கற்றுக் கொண்டார்.

மைசூர் மீது ஆங்கிலேயர்களுக்குத் தீராத தாகம் எப்போதும் உண்டு. ஆங்கிலேயர்கள், ஹைதராபாத் நிஜாம், மராத்தியர்கள் மூவரும் இணைந்து 1767 ஆம் ஆண்டு ரகசியமாக மைசூரைத் தாக்கிட நாள் குறித்தனர். செய்தி அறிந்து, நிஜாமையும், மராத்தியரையும் திப்பு சந்தித்தார். எச்சரிக்கை செய்தார். அந்நிய ஆங்கிலேயர்களுடன் ஒன்று சேர்ந்து அவர்கள் போரிடக் கூடாது என்பதை எடுத்துரைத்து தடுத்துவிட்டார்.

சென்னைக்கு அருகில், ஆங்கிலேயர்களுடன் நடந்த போர், மிகக் கடுமையாக மாறிக் கொண்டிருந்தது. ஆகவே, திப்புவின் படை சென்னை நோக்கி விரைந்தது. அங்கே, ஹைதர் அலி திருவண்ணாமலை அருகில் ஆங்கிலேயர்களுடன் போரிட்டுக் கொண்டு இருந்தார். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்ற தகவல் அறிந்து, சென்னையிலிருந்து வெற்றி முழக்கோடு திருவண்ணாமலைக்குத் திரும்பி வந்து சேர்ந்தார் திப்பு! கர்னல் டோட், மேஜர் கிரால்ட் ஆகியோர் தலைமையிலான வெள்ளைப் படைகளைத் தோற்கடித்து தூள் துளாக்கினார்!

திருப்பத்தூர் கோட்டை, வாணியம்பாடி கோட்டை இரண்டையும் கைப்பற்றினார்கள். கர்னல் ஸ்மித், காலின் வாட்ஸன் ஆகியோர்களின் தலைமையிலான படைகளையும் திப்பு சிதறடித்தார். மங்களுரை முற்றுகையிட்டு, அங்கிருந்த ஆங்கிலேயப் படைகளையும் விரட்டியடித்தார். 1766 ஆம் ஆண்டு முதல் 1769 வரை போர் நீடித்தது. இதையே, 'முதல் மைசூர் போர் ' என்று பிற்காலத்தில் வரலாறு பதிவு செய்தது.

போர்ப்படைக்கு புலிச்சின்னம்

திப்பு சுல்தானின் போர்ப்படைக்கு புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடியே வடிவமைக்கப்பட்டது. எல்லாம் போர்களிலும் வீரர்கள் புலியாய்ப் பாய்ந்து சென்று வென்றனர்! ஹைதரும், திப்புவும் இணைந்து போர் தொடுத்து வென்றனர்!

காஞ்சிபுரம் அருகில் பேரம்பாக்கத்தில் செப்டம்பர் 1780ல் போர் நடத்தி, கேப்டன் ரூம்லே தலைமையிலான ஆங்கிலேயப் படையை வென்றனர். கர்னல் வில்லியம் பெய்லி சிறைபிடிக்கப்பட்டு, ஹைதர் அலியின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தப்பட்டார். அப்போது அவர், "உங்கள் மகன் எங்களைத் தோற்கடிக்கவில்லை. முற்றிலுமாக எங்களை நாசப்படுத்திவிட்டார்" என்று புலம்பினார்.! ஆங்கிலேயர்களுக்கு திப்பு சுல்தான் சிம்மசொப்பனமாகவே விளங்கினார்.

ஆங்கிலேயர்களைத் தாக்கிய ராக்கெட் ஆயுதம்

திப்பு ராக்கெட்டுகளைப் போரில் பயன்படுத்தினார். தனது முக்கியத் தளபதிகளுக்கு ராக்கெட் இயக்கம் குறித்த அடிப்படை ஆவணப் பிரதி ஒன்றையும் கொடுத்திருந்தார். ஃபத்துல் முஜாஹதின் என்பது அவர் பெயர். அந்த ராக்கெட்டுகள் ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்குகளை குறிபார்த்து அழிக்கும் வல்லமை பெற்றவை. முதன்முதலாக ராக்கெட் இந்தியாவில் (உலகில்) பயன்படுத்தப்பட்டது. ‘நாஸா’வில் திப்புவின் ராக்கெட் தான் ஓவியமாக தீட்டப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஹைதர் அலி 1782 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். 'பெரிய புலி மறைந்துவிட்டது' என்று ஆங்கிலேயர்கள் எக்காளமிட்டனர். ஆனால், திப்பு சுல்தான் பதவியேற்றார். பெரிய புலியின் இடத்தில் சிறிய புலி!

அனந்தபூரை ஆண்டு கொண்டிருந்தவர் நாராயணராவ். ஆங்கிலேயர்கள் அனந்த்பூர் கோட்டையைச் சுற்றி வளைத்து நாராயணராவைக் கைது செய்தனர்.

ஆனால், திப்பு சுல்தான் 1783, ஏப்ரல் 28 ஆம் தேதி அனந்த்பூரை நோக்கிப் படையெடுத்து ஆங்கிலேயரை விரட்டியடித்தார்; அனந்த்பூரை விடுவித்தார்!

மங்களுர் கோட்டையில் நடைபெற்ற போரிலும் ஆங்கிலேயக் கமாண்டர் காம்ப்பெல் படையைத் திப்பு சுல்தான் தோற்கடித்தார். மங்களுர் ஒப்பந்தம் 1784 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் நாள் கையெழுத்தானது. இவ்வொப்பந்தத்தில் மைசூர் ராஜ்ஜியமும், கிழக்கிந்திய கம்பெனியும் கையெழுத்திட்டன.

திப்புவின் நூலகம்

போர்க்களத்தில் வீரம் விளைந்தாலும், ஈர இதயத்தைப் பூக்கச் செய்யும் ஆற்றல் புத்தகங்களுக்கே உண்டு.! திப்பு தனது திருமணப் பரிசாக தனக்கு ஒரு நூலகம் வேண்டும் என்றே தந்தையிடம் கேட்டார். அதில், உலகின் அனைத்துப் பிறமொழி நூல்களையும் மொழிபெயர்த்துக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அரசியல், விவசாயம், மதம் - தத்துவம் - ராக்கெட் தொழில்நுட்பம் - என்று அறிவு வெளிச்சம் பரவச் செய்தார். சுருக்கமாகச் சொல்வதானால், சூரியனுக்கு கீழே உள்ள அத்துணை பொருள்கள் பற்றிய நூல்களும் திப்புவின் ஆசைக்கேற்ப அவரது நூலகத்தில் இடம்பெற்றன.! குறுகிய காலத்தில் மிகப் பெரிய நூலகமாக அது வளர்ச்சி பெற்றது. நூருல் அமீன் என்பவர் தலைமை நூலகராக அமர்த்தப்பட்டார். தகவல்களைத் தேடிக் கொண்டுவர, வரிசைப்படுத்த, ஆய்வு செய்ய என உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். உலகின் பல பாகங்களிலிருந்தும் மொழிபெயர்ப்பாளர்கள் வரவழைக்கப்பட்டனர். லத்தீன், ஜெர்மன், கிரேக்கம் முதலான பல்வேறு மொழிகளிலிருந்தும் சிறந்த நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன.

மைசூர் முழுவதும் பல கிளை நூலகங்கள் அமைக்க ஏற்பாடு செய்தார். உலகெங்குமுள்ள புத்தகக் கடைகளிலிருந்தும் புத்தகங்களை வரவழைத்தார் திப்பு.

தாமஸ் ஜெபர்ஸனின் "சுதந்திரத்துக்கானப் பிரகடனம்" என்னும் ஆங்கில நூல் திப்புவுக்கு அமெரிக்காவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை கற்பித்தது. திப்புவும் பல நூல்களைத் தானே மொழிபெயர்த்தார். நாடு பிடிப்பதிலும், தங்கம், வைரங்களை கொள்ளையடிப்பதிலும், மாடமாளிகைகள், கூட கோபுரங்கள், அழகிய ஆடம்பரமான அரண்மனைகளைக் கட்டுவதிலும் பேராசை பிடித்து அலைந்த மன்னர்களையே அதுவரை வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால், நூல் நிலையம் அமைத்தும் அறிவை வளர்க்கும் பணியில் திப்பு சுல்தான் ஈடுபட்டுப் புதிய வரலாற்றைப் படைத்து உள்ளார்!

மத நெறியும், போர் முறையும்

மதம் குறித்து 1789 ஆம்ஆண்டு திப்பு வெளியிட்டப் பிரகடனத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:-

மதங்களிடையே நல்லுறவு வேண்டும். பிற மதத்தவர்களின் விக்கிரகங்களை அவமதிக்கக் கூடாது. பிற தெய்வங்களை வழிபடுகிறவர்களைப் பழித்தல் கூடாது.

திப்பு இஸ்லாமியர்களுக்கான மசூதிகளைக் கட்ட மட்டும் நிதி உதவி செய்யவில்லை. ஆனால், இந்துக் கோயில்கள் மற்றும் கிருத்துவ தேவாலயங்கள் கட்டவும் அனுமதி அளித்தார். தாராளமாக நிதி உதவியும் செய்தார்.

'மதம் மக்களைப் பிளவுப்படுத்தக் கூடாது. மக்களை ஒற்றுமைப் படுத்த வேண்டும்' என்னும் உயரிய கொள்கையுடையவராய்த் திகழ்ந்தார்.

திப்பு சுல்தான் 1783 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில் போர் பற்றிய நியதிகளைக் கீழ்க்குறித்தவாறு அறிவித்துள்ளார்:-

“போரிடும் போது எதிரிகளிடமிருந்து நாம் எதையும் அபகரிக்கக் கூடாது. மக்கள் மீது போர் தொடுக்கக் கூடாது. பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். கண்ணியக் குறைவாகப் பெண்களிடம் நடக்கக் கூடாது. குழந்தைகளை சித்ரவதை செய்யக் கூடாது. கோயில்களில் கொள்ளையடிக்கக் கூடாது. சேதப்படுத்தக் கூடாது. “

நீதிபரிபாலனத்தில் திப்பு

முழுமையான விசாரணைக்குப் பிறகே குற்றவாளியா.? எனத் தீர்மானிக்க வேண்டும்; பின்புதான் குற்றத்துக்குரிய தண்டனையை அளிக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

குற்றம் இழைத்தவர்களும், துரோகம் செய்தவர்களும் திருந்துவதற்குரிய வாய்ப்பு அளிக்க வேண்டும்.

நாட்டைக் காக்கும் போரில் மக்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும. அப்போதுதான் போரில் வெல்ல முடியும். ஆதிக்கக்காரர்களுக்கு எதிராகப் போராட மக்கள் முன் வர வேண்டும். ஆட்சியாளர்களைக் கண்டு மக்கள் அஞ்சி நடுங்கக் கூடாது. மக்களைப் பயமுறுத்தி ஆட்சி செய்வது பிற்போக்குத்தனமானது.

திப்புவின் நிலச் சீர்திருத்தம்

வளமான நிலத்தை யாரும் தரிசாகப் போடக்கூடாது. நிலத்தின் உரிமையாளர் பயிரிட வேண்டும் அல்லது நியாயமான குத்தகைக்கு விட்டுப் பயிர் செய்ய வேண்டும். குறிப்பிட்டக் காலத்துக்கு மேல் நிலத்தை தரிசாகப் போட்டு வைத்திருந்தால், அரசாங்கத்தால் அந்நிலம் பறிமுதல் செய்யப்படும்.

நிலக்குத்தகை நியாயமானதாக இருக்க வேண்டும். தன் விருப்பப்படி குத்தகைத் தொகையை அடிக்கடி உயர்த்தக் கூடாது. மழையில்லாவிட்டாலும், அதிக மழை பொழிந்து பயிர் மகசூல் பாதிப்படைந்தாலும் குத்தகைத் தொகையை குறைத்து வாங்கிட வேண்டும். திப்புவின் ஆட்சிக் காலத்தில் மூன்று இலட்சம் ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டது. தலித் மக்களுக்கு தனியே நிலம் அளிக்கப்பட்டது.

அதிகாரிகளின் ஆட்டத்துக்கு வேட்டு

ஏழைகளையும், விவசாயிகளையும் துன்புறுத்தமாட்டோம். சுரண்ட மாட்டோம். ஏமாற்ற மாட்டோம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் கட்டாய உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

திப்புவின் பொதுவான சீர்திருத்தங்கள்

வாணிபத்துக்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் ஊக்கம் அளித்தார். கடலிலிருந்து முத்து எடுத்தல், கால்நடைகள் வளர்த்தல், பட்டு உற்பத்தி செய்தல் ஆகிய தொழில்கள் வளர்ச்சியில் அக்கறை காட்டினார்.

ஆதரவற்ற ஏழைச் சிறுமிகளை தேவதாசிகளாகக் கோயிலுக்கு விற்கும் கொடுமைக்கு தடை விதித்தார்.

பூரி ஜெகந்நாதர் கோயில் தேர்த் திருவிழாவில் பக்தர்கள் தேர்க்காலில் விழுந்து உயிர்விடும் மடைமையை கண்டித்தார்.

தவறு செய்யும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதையும், அரசாங்க ஊழியர்கள் மக்களுக்கு ஊழியம் செய்யவே உள்ளனர் என்பதையும் தனது கட்டளையாக அறிவித்தார் திப்பு!

மதுவிலக்கு கொள்கை

திப்பு 1787 ஆம் ஆண்டு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார்.

மது உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் சட்டப்படி குற்றம் என அறிவித்தார். மது விற்பனையினால் அரசாங்கத்திற்கு நிதி வரவு உண்டு என்பதற்காக, மக்களின் அறிவை மழுங்கக்கூடிய மதுவை விற்பனை செய்யக் கூடாது என்று அறிவித்தார். மது உற்பத்தியாளர்களின் உரிமங்களை நீக்கம் செய்தார். மக்கள், மதுவை நாடக் கூடாது என்றும், மதுவுக்கு அடிமையாகக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

சமூகச் சீர்திருத்தங்கள்

மலபாரில் வாழும் பெண்கள் தோள் சீலை அணிவதற்கான உரிமை குறித்து தெளிவாக உணர்ந்திருந்தார். அவ்வுரிமையை வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினார். அது தொடர்பாக, திப்பு சுல்தான், 1785 ஆம் ஆண்டு மலபார் கவர்னருக்குக் கடிதமும் எழுதினார். இதிலிருந்து பெண் உரிமையிலும், பெண் விடுதலையிலும் உறுதியாகச் செயல்பட்டவர் திப்பு சுல்தான் என்பதை நாம் தெளிவாக உணரலாம்.

தண்டனை அளிப்பதில் மாறுபட்ட உத்தி

குற்றம் புரியும் விவசாயிகளுக்கு அபராதம் விதிப்பதற்குப் பதிலாக, அவர்கள் வாழும் கிராமத்தில் இரண்டு மாமரங்கள் மற்றும் இரண்டு பலா மரங்கள் நட்டு அவற்றுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அவை மூன்று அடி உயரத்துக்கு மரமாக வளரும் வரை வளர்க்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். இவ்வாறெல்லாம் கூட சுற்றுச் சூழலைப் பேணிட முயன்றார் திப்பு!

தாவரக் கூடாரம் : லால்பாக் தோட்டம்

‘லால்பாக் தோட்டம்’ - திப்புவின் ஆராய்ச்சிக் கூடமாகியது! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மரம், செடி, கொடி வகைகளைக் கொண்டு வரச் செய்து பராமரித்தார். மூலிகை, யுனானி மருந்து முறைகளையும் பெருக்கினார்.

திப்பு, தன் ஆட்சியில் அனைவருக்கும் உணவு, வேலை, வசிக்க இடம், ஆடை, கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைக்க திட்டங்கள் தீட்டி நடைமுறைப்படுத்தினார். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வழி ஏற்படுத்தினார்.

குடிமக்களின் ‘திப்பு’

ஃப்ரான்ஸ் மன்னராட்சியை எதிர்த்து ஜாகோபியன்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சியாளர்களுக்கு திப்பு ஆதரவுக்கரம் நீட்டினார். அதனால், ஜாகோபியன்கள் திப்பு சுல்தானுக்கு ‘குடிமக்களின் திப்பு’ என்னும் பட்டம் அளித்துச் சிறப்பித்தார்கள்.

மீண்டும் போர்

மீண்டும் 1790 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் திப்புவினை எதிர்த்துப் போர் தொடுத்தனர். ஆங்கிலேயர்கள் படை திண்டுக்கல்லில் திப்புவின் படையுடன் கடுமையாக மோதினாலும், முடிவில் பின்னடைவைச் சந்தித்தது. திப்புவுக்குத் துரோகம் செய்த ‘ஹைதர் அப்பாஸ்’ தனது மனசாட்சி குத்தியதால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மாண்டு போனார்.

கர்னல் ஃப்ளாயிட் தலைமையிலான படையுடன் திப்பு மோதினார். ஜெனரல் மெடோவ்ஸ் ஸ்ரீரங்கப்பட்டிணத்தை நோக்கி படை நடத்தினார். தோல்வியைத் தழுவினார். கார்ன்வாலிஸ் தலைமையிலான படை மைசூர் நோக்கிச் சென்றது. மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடினார்கள். திப்பு மக்களுக்கும், படை வீரர்களுக்கும் தினம் தினம் உற்சாக மூட்டினார். ‘தோல்வியைப் பற்றிய பயம் வேண்டாம். துணிந்து போரிடுவோம், தாய்நாட்டைக் காப்போம்’ என்று முழங்கினார்.

போரும்-அமைதியும்

எத்தனை காலம்தான் போர்-போர் என்று அறைகூவல் விடுப்பது? அமைதியை நாடினால் என்ன? ஆங்கிலேயர்களுக்கும், திப்பு சுல்தானுக்கும் ரமிர்சாதிக் மூலம் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அது எப்படிப்பட்ட ஒப்பந்தம்? ஆங்கிலேயர்கள் பணம், தங்கம், வைரம் கேட்டதுடன், திப்பு ஆட்சியிலிருந்து பாதி மண்டலத்தையும் தரக் கோரினார்கள். அது மட்டுமா? திப்பு சுல்தானின் வீரப்புதல்வர்களான மூத்த மகன் அப்துல் காலிக் (எட்டு வயது), இளைய மகன் முய்ஸ்-உத்-தீன் (வயது ஐந்து) ஆகிய இருவரையும் பிணைக் கைதிகளாகக் கேட்டனர். கல்நெஞ்சக் கொடியவர்களான ஆங்கிலேயர்கள் உலக வரலாற்றில் குழந்தைகளைப் பிணைக் கைதிகளாகக் கேட்ட எதேச்சதிகார வன்னெஞ்ச மிலேச்சர்கள் ஆங்கிலேயர்கள் தான்.

ஒப்பந்தத்திற்கு அரசு கஜானாவில் உள்ளவை போதவில்லை என்பதால், பொதுமக்கள் தாங்கள் அணிந்திருந்த நகை, நட்டுகளை திப்புவிடம் அளித்து பாசமழை பொழிந்தார்கள்.

தோல்வியின் தொடக்கம்

ரிச்சர்ட் வெல்லஸ்லி 1799 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் சென்னை ஆளுநராக பதவியேற்றார். மைசூரை நோக்கி ரிச்சர்ட் வெல்லஸ்லி தலைமையில் இருபதாயிரம் பேர்களைக் கொண்ட பெரும்படை புறப்பட்டது. போர் கடுமையாக நடைபெற்றது. திப்புவின் படைத் தியாகம் செய்து போரிட்டது. ஆங்கிலேயர்களின் பீரங்கிகள், துப்பாக்கிகள், நவீன ஆயுதங்கள் ஆகியவற்றுடன் தாக்குபிடிக்க முடியாமல் திப்புவின் படை திரும்பத் தொடங்கியது.

ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மீது போர் தொடுத்தபோது, பீரங்கியால் கோட்டை மதில் சுவரைத் தாக்கி அழித்தனர். ராக்கெட்டுகளையும், பீரங்கிகளையும் பயன்படுத்தி திப்புவின் ஆயுதக் கிடங்கைச் சிதைத்தனர்.

வெள்ளைத் தளபதிகள் வெல்லஸ்லி, ஹாரிஸ், பெயர்ட் மூவரும் தலைமையேற்றனர். போர் நடக்கையில் யூனியன் ஜாக்கொடியை கோட்டை மீது ஏற்ற முயன்றவன் சுட்டு வீழ்த்தப்பட்டான்.

ஒப்புயர்வில்லாத் திப்பு

பிப்ரவரி 11, 1799 அன்று திப்பு காவல் கோபுரத்தின் மீது ஏறி நின்றார். போர்க்காட்சியை ஊன்றிப் பார்த்தார்! பின்பு, தனது வாளைச் சுழற்றி வீசி எறிந்தபடி போர்க்கள மண்ணில் பாய்ந்தார்! ரத்தம் பெருக்கெடுக்க அப்படியே கீழே சாய்ந்து விழுந்தார். போர் வீரர்களின் பிணக்குவியலுக்கு நடுவில் திப்புவின் உடல், கண்கள் திறந்திருந்தபடி கிடந்தது. அவரது உடலுக்கு அருகில் அவர் பொன்னே போல் போற்றிய குர்-ஆன் பிரதியொன்று கிட்டத்தில் கிடந்தது! இந்திய விடுதலை வரலாற்றில் திப்பு சுல்தானின் தியாகம் வீரத்தை நினைவூட்டும்! அவரின் விவேகம், ஞானத்தைப் பறைசாற்றும்! மொத்தத்தில், ஒப்புயர்வில்லாத் திப்பு என உலகம் ஒங்கிப் புகழ் ஏத்தும்!


[][][]

No comments:

Post a Comment