Translate

Wednesday, 14 October 2015

இந்துத்துவாவின் மாட்டிறைச்சி அரசியலும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களும்..!



கடந்த 28செப்டம்பர்,2015 அன்றிரவு 10.30 மணியளவில், மேற்கு உத்தரபிரதேசத்தின் கவுதம புத்தர் மாவட்டம் தாத்ரியை அடுத்துள்ள பிசோதா எனும் குக்கிராமத்தில் அந்த கொடிய நிகழ்வு நடந்தது. முகம்மது அக்லாக் என்ற இந்திய விமானப்படை வீரரின் தந்தையான ஐம்பது வயது முதியவர், பசுமாட்டிறைச்சியை சமைத்து தனது குடும்பத்தினருடன் உண்டதாக இந்துத்துவ தீவிரவாதிகளால் திட்டமிட்டு பரப்பிய புரளியின் காரணமாக, திரண்ட 200 பேர் கொண்ட காவி வன்முறைக்கும்பல் வீடு புகுந்து தாக்கி, ஏற்கனவே டைபாயிட் காய்ச்சலில் படுத்தபடுக்கையாக கிடந்தவரை வெளியே இழுத்துப் போட்டு கல்லாலும் கட்டையாலும் தாக்கி, முகத்தை சிதைத்து கொடூரமாக கொன்றுள்ளனர்.

அதோடு தடுக்க வந்த அவரது மற்றொரு மகனான தனிஸ் என்ற பள்ளி மாணவனையும் கடுமையான முறையில் தாக்கி, இறந்து விட்டதாக கருதி விட்டு சென்றுள்ளனர். அந்த சிறுவன் மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்பொழுது உடல் தேறி வருகிறான். சம்பவத்தின் போது அந்த கயவர்கள்-மனித மிருகங்கள் வீட்டிலிருந்த பெண்களையும் விட்டு வைக்கவில்லை. வயதான மூதாட்டியையும் மற்ற பெண்களையும் கடுமையான முறையில் தாக்கியிருக்கின்றனர்.

இந்த கொடூர சம்பவம் நாடெங்கும் காட்டுத்தீ போல பரவி, பத்திரிக்கைகள், சமூக வலைத்தளங்கள், பிஜேபி-சங்பரிவார அமைப்புகள் தவிர்த்த, மற்ற அரசியல் கட்சி தலைவர்கள், நாட்டின் புகழ்மிக்க எழுத்தாளர்கள் என்று பலரது கண்டனங்களுக்கு உள்ளானது. இது போன்ற சம்பவங்களில் ‘உப்புக்கண்டம் தின்ன பாப்பாத்தி மாதிரி அம்முன்னு இருந்த பிரதமர் மோடியின் மௌனமும் வன்மையாக கண்டிக்கப்பட்டது.

தனிமனித உரிமையான மாட்டிறைச்சி உண்பதற்கு தடை போட பார்க்கிற இந்துத்துவ மதவெறி சக்திகளுக்கு எதிராக, ஆர்பாட்டங்களும், சென்னை பாஜக தலைமையகம் முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டமும் நடைபெற்றது. அதே போல கேரளத்திலும் நடந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு மாட்டிறைச்சி அரசியலை கண்டித்தும், பிரதமர் மோடியின் கள்ள மௌனத்தை கண்டித்தும் மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இந்திய விமானப்படை தலைமையகம் கூட தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தது.

இந்நிலையில் முசாபர் நகர் கலவரத்திற்கு பிறகு இந்த கலகத்தையும் தூண்டிவிட்ட, ‘மாட்டுக்கறி சாப்பிடுவது என் தாயை சிறுமைப் படுத்துவதற்கு சமம்’ என்றும் கூறி வந்த உத்திரபிரதேச பாஜக MLA சங்கீத் சோம், அல் தூவா எக்ஸ்போர்ட் எனும் மாட்டிறைச்சி நிறுவனத்தை ஆரம்பித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தவன் என்பதை  ஹிந்துஸ்தான் டைம்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. பசு தடையுள்ள மாநிலங்களில் மலிவாக மாடுகளை வாங்கி, அறுத்து, இறைச்சியாக ஏற்றுமதி செய்து சம்பாதிக்கும் இந்த கயவர்களைத் தானே இந்த நாட்டு மக்களும் நம்புகிறார்கள்.? இரட்டைவேடமிடும் இந்துத்துவ சாக்கடைகளுக்கு துணை போகிறார்கள்...?
   

@@@@@@

இந்து மதவெறியுடன் இந்துத்துவாவைத் திணித்துவரும் இந்துத்துவா கும்பல் அரியணை ஏறினப்பிறகு தொடர்ச்சியாக சுதந்திர சிந்தனைகளை, மதச்சார்பற்ற சமத்துவக்கருத்துகளை ஏற்க முடியாமல், பகுத்தறிவாளர்களை, சிறுபான்மையினரை நாடெங்கும் குறி வைத்து தாக்கி அச்சுறுத்துவதும், வெவ்வேறு இயக்கங்களின் முகமூடியுடன் வந்து கொல்லுவதும், அதற்கு ஆளும் கட்சியை சேர்த்த பாராளுமன்ற உறுப்பினர்களே, மந்திரிகளே வக்காலத்து வாங்குவதும் எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக பிரதமராக இருக்கும் மோடி, வாய் மூடி மௌனம் சாதிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

M.M.பஷீர் என்ற மலையாள எழுத்தாளர் மாத்ருபூமி பத்திரிகையில் எழுத்தச்சனுடைய ராமாயணம் பற்றி பத்து கட்டுரைகள் எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் நன்கு அறியப்பட்ட இலக்கிய விமர்சகர். மூன்று கட்டுரைகள் வெளியான நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் தபால் மூலமாகவும், பிறகு போன் மூலமாகவும் வரத் தொடங்கியது. உடனே கட்டுரை எழுதுவதை நிறுத்தும்படி உத்திரவு வந்தது. எழுத்தாளர் இலக்கியத்தை விட தன்னுடைய உயிர் பெரியதென்று தீர்மானித்து எழுத்தை மூட்டை கட்டி விட்டார்.

பெருமாள் முருகன் என்ற தமிழக எழுத்தாளர் ‘மாதொருபாகன்’ என்ற நாவல் எழுதினார். அவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர். திருச்செங்கோடு பகுதியில் ஒரு சில மக்கள் மத்தியில் நிலவி வந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட நாவல் அது. அந்த நூல் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து சிலர் கலகத்தை தூண்டி விட, ‘ஒரு குறிப்பிட்ட சாதியை குறி வைத்து அந்த நாவலில் அவமானப் படுத்தியிருக்கிறார்’ என்று போராடத் தொடங்கினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அவரும் அந்த அதே சாதியை சார்ந்தவர்தான். அவர் அந்த சாதிய சக்திகளுக்கு என்ன விளக்கம் கொடுத்தும் பயனில்லை. ‘பொது அமைதி கெடும்’ என்பதன் பெயரில் ரெவின்யு அதிகாரிகளும் காவல் துறை அதிகாரிகளும் பெருமாள் முருகன் மீது நிர்ப்பந்தம் கொடுத்து, மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கினார்கள். ‘இனி எந்த கதையும் எழுத மாட்டேன். எந்த இலக்கியப் படைப்பிலும் ஈடுபட மாட்டேன்..!’ என்று சரணாகதி கடிதம் எழுதிக்கொடுத்து விட்டு சொந்த ஊரான திருச்செங்கோட்டையிலிருந்தே வெளியேறி விட்டார். அவரை தோப்புக்கரணம் போடச் சொல்லாத ஒன்றுதான் பாக்கி.! அவர் இதுவரை எழுதி வெளியாகி புத்தகச்சந்தையில் விற்பனையில் இருக்கும் எல்லா நூல்களையும் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார். ஆக, இன்று எந்த நாவலை., எந்த சிறுகதையை யார் எழுதவேண்டும் எப்படி எழுதவேண்டும் என்பதை காவல்துறையினரும் அரசு இயந்திரமும் சாதி,மதவெறியர்களின் ஏவல்களுக்கேற்ப தீர்மானிக்கும் நிலை நம் கண்முன்னே வந்துவிட்டது.

கர்நாடகாவை சேர்ந்த யு.ஆர்.ஆனந்தமூர்த்தி என்ற ஞானபீட விருது பெற்ற,புகழ் மிக்க கன்னட மொழி எழுத்தாளர். 2014 ஆகஸ்ட் மாதம் இறந்தார். ஐந்து கன்னட மொழி அறிஞர்களில் அவரும் ஒருவர். மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தவர். அவர் சமயநல்லிணக்கம் பற்றியும், மதவெறியால் உண்டாகும் தீமைகள், கலகங்கள் பற்றியும் தீர்க்கமான கருத்துகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளியிட்டிருக்கிறார். இத்தகைய அவரது சமரச கருத்துக்களை சகித்துக்கொள்ள முடியாத இந்துத்துவா கும்பல் அவரது வீட்டின் முன் அவர் இறந்தன்று ஒன்றுகூடி, அவரது மரணத்தை பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். வீட்டினுள் சவம் கிடக்கும் போது வெளியே மரணத்தைக்கொண்டாடும் காட்டுமிராண்டித்தனத்தை என்னவென்பது. அதனை தடுக்கக்கூட சட்டத்திற்கு திராணியில்லாமல் போனது.   

மகாராட்டிர மாநிலத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான இயக்கத்தை நடத்தி வந்தவரும், பகுத்தறிவாளருமாகிய நரேந்திர தபோல்கர் 20.8.2013 அன்று பூனாவிலும், 20.2.2015 அன்று இடதுசாரி கம்யூனிஸ்ட் தலைவர், பகுத்தறிவாளர். கோவிந்த் பன்சாரேயும் இருசக்கர வண்டியில் வந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவரை அங்குள்ள காவல்துறை இது தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை. இந்துத்துவமயமாக்கப்பட்டு விட்ட அரசு இயந்திரம் நினைத்தால் தான் எவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கும் போலும்.! சிவசேனா தலைவர் பால்தாக்கரே இறந்தபோது நடத்தப்பட்ட கடையடைப்பை குறித்து தன்னுடைய கருத்தை டிவிட்டரில் தெரிவித்த ஒரு பெண் அடுத்த 2 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார். மூன்று நாள் காவலில் படாத பாடும்பட்டார். அப்பொழுது காவல்துறை மின்னல்வேகத்தில் செயல்பட்டு கைது செய்ததையும் அந்த பெண்ணுடைய ஜனநாயக உரிமையான ஜாமீனுக்கு வாதாட கூட வழக்கறிஞர்கள் தயங்கினார்கள் என்பதையும் எண்ணிப் பார்த்தால், இந்த அரசுகள் யாரை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்பது விளங்கும்.  

சென்ற ஆகஸ்ட் 30ம் தேதி கர்நாடகாவில் தார்வார் நகரத்தில் கன்னடஅறிஞர் எம்.எம்.கல்பர்கி அவருடைய வீட்டில் காலை 8மணிக்கு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அதே மூன்று துப்பாக்கிக்குண்டுகள். அதே இரண்டு இளைஞர்கள். அதே மோட்டார் பைக். அதாவது மூன்று கொலைகளும் ஒரே முறையில் நிகழ்த்தப்பட்டது. முன்னது இரண்டும் தெருவில். கல்பர்கி மட்டும் வீட்டில் கொல்லப்பட்டார். இதுதான் வேறுபாடு. எம்.எம்.கல்பர்கி என்ற எழுபத்தெட்டு வயது கன்னட மொழி அறிஞர், கன்னட மொழி இலக்கியத்துறையில் பணீயாற்றியவர். கல்வெட்டு ஆய்வாளர். 40க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். ஹம்பி பல்கலைக்கழக துணைவேந்தராகப் பணி செய்தவர். இவர் நாத்திகர் அல்ல. வீரசைவ சமயத்தைச் சேர்ந்தவர். சமய சீர்திருத்தவாதி. உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர். இது தொடர்பாக அவ்வப்பொழுது தீவிரமான கருத்துக்களை பேசிவந்தார், பல பத்திரிகைகளில் எழுதி வந்தார். மறைந்த ஞானபீடவிருது பெற்ற எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் நண்பரான கல்புர்கி தொடர்ந்து மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்துகளைப் பேசி வந்தார். இதுமட்டுமில்லாமல் கர்நாடகாவில் மூட நம்பிக்கைக்கு எதிராக வலுவான சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தார்.

இதனால் கோபம் கொண்ட பஜ்ரங்தளம், விஸ்வ ஹிந்து பரிஷத், ராம் சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டன. தார்வாட் மாவட்டம் கல்யாண் நகரில் உள்ள கல்புர்கியின் வீட்டின் முன்பாக திரண்ட இந்துத்துவா அடிப்படை வாதிகள் கல்வீசி தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டலை அப்பொழுதே விடுத்திருந்தனர். மிரட்டியபடியே கொன்றனர்.

உயர்சாதி அரசியல் ஆதாயத்திற்காகவே இந்துமதத்தை வளைத்தும் ஒடித்தும் இந்துத்துவா சித்தாந்தத்தை உருவாக்கிய பார்ப்பன-பனியா வெறியர்கள், அந்த சித்தாந்தத்திற்கு எதிரான மாற்றுக் கருத்தை சொந்த மதத்துக்காரன் கூறினாலும் அவனை போட்டுத் தள்ளுகிற மோசமான நிலைதான் இன்றைக்கு நாட்டில் தீவிரமாக நிலவி வருகிறது. இது எங்கு போய் முடியுமென்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

கல்பர்கி கொலை செய்யப்பட்ட சில மணி நேரத்துக்குப்பிறகு, ஒரு இந்துத்துவ தீவிரவாதி, ‘தற்பொழுது எம்.எம்.கல்புர்கியைக் கொன் றுள்ளதாகவும், விரைவில் மற்றொரு பகுத்தறிவாளரான கே.எஸ்.பகவான் கொல்லப்பட இருப்பதாகவும்’ டிவிட்டரில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த, கொலைக்குற்றப் பின்னணி கொண்ட ஒருவன் பதிவிட்டான். ‘புவித் ஷெட்டி கருட புராணா Bhuvith Shetty (@GarudaPurana)’ என்ற கணக்கில் பதியப்பட்ட அந்த கொலைவெறி கூச்சலின் பேரில், அப்பதிவு குறித்து காவல்துறையினர் உடனடியாக கவனம் செலுத்தி எம்.எம்.கல்புர்கி கொலை வழக்கில் அவனை குற்றவாளியாக இணைத்து விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று பலரும் டிவிட்டரில் கர்நாடக காவல் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த டிவிட்டர் பதிவை அடுத்து இடதுசாரி சிந்தனையாளர்கள், முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் எம்.எம்.கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்துத்துவா அமைப்புகள் இருப்பதை சுட்டிக் காட்டி கடும் கண்டனப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.     

இதனையடுத்து புவித் ஷெட்டியின் டிவிட்டர் கணக்கு காணமுடியாத வகையில் காணாமல் போய் விட்டது. ஆனாலும் அவனது டிவிட்டர் பதிவுகள் ஏற்கெனவே மற்றவர்களால் பகிரப்பட்டு கண்டனங்கள் பதிவாகி உள்ளன. தற்பொழுது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் பகவான், கல்புர்கி போல் மைசூரு பல்கலைக் கழகத்தின் பணி ஓய்வு பெற்றவர். இவர் இந்து மதத்தையும், பஜ்ரங்தள் போன்ற இந்து மத வெறி அமைப்புகள் குறித்தும் விமர்சனம் செய்து வருபவர். விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவரான விஸ்வேஸ்வர தீர்த்தசாமி எனும் சாமியாரை இந்து வேதங்கள் குறித்து பொது மேடைகளில் விவாதிக்கத் தயாரா? என்று பகவான் சவால் விட்டு அழைத்ததைத் தொடர்ந்து, அவர் இந்துமதத்தை விமர்சிப்பதாக கூறி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை எதிர்கொண்டு வருபவர்.

இவ்வாறு இந்துத்துவ தீவிரவாதிகளால் மதவெறி தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்படும் எழுத்தாளர்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கும்பட்சத்தில், சமீபத்தில் நிகழ்ந்த மாட்டிறைச்சி அரசியல் படுகொலையாலும் மனம் நொந்துப் போன நாட்டின் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், தங்களது சாகித்ய அகாடமி விருதுகளை ஆளும் மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்க தலைப்பட்டிருக்கிறார்கள். இதுபோன்ற இழிவான-மோசமான அவலநிலை முன்னெப்போதும் கடந்த அறுபத்தியெட்டு ஆண்டுகளாக இந்திய அரசாங்கத்திற்கு ஏற்பட்டதில்லை.    

நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து, கொலைகள் அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டி, தங்களது கண்டனங்களை தெரிவிக்கும் வகையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ்மிக்க எழுத்தாளர்களான நயன்தாரா சேகல், அசோக் வாஜ்பேயி, ரகுமான் அபாஸ், மலையாள பெண் எழுத்தாளர் சாரா ஜோசப் உள்ளிட்டவர்கள் சாகித்ய அகாடமி விருதை திருப்பிக்கொடுக்கப்போவதாக அறிவித்தார்கள்.

"நாடு முழுவதும் சுதந்திரமான சிந்தனையாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுவரும் நிலையில், சம்பிராதாயத்துக்காக மட்டும் இரங்கல் கூட்டங்களை சாகித்ய அகாடமி ஒருங்கிணைப்பது போதுமானது அல்ல. எனவே, சாகித்ய அகாடமியின் அனைத்து உறுப்புகளின் உறுப்பினர் பதவியையும் துறக்கிறேன்.

இது ஒரு அரசியல் சார் நிகழ்வு என்று மட்டுமே நீங்கள் நினைத்தீர்கள் என்றால். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். என்னைப் போன்ற எழுத்தாளர்களர்களுக்கு சமீபத்தைய நிகழ்வுகள் சுதந்திரமாக சிந்தித்து, எழுதி, வாழ்வதற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே தோன்றுகிறது. விவாதங்களை ஒடுக்க அதன் ஆதாரங்களை நிர்மூலமாக்குவது ஜனநாயக நெறியாகாது.

இதுவரை சாகித்ய அகாடமி எனக்கு அளித்த கொடைகள் அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ஆனால், ஒரு பொறுப்புள்ள குடிமகனாக, மனசாட்சியுடைய எழுத்தாளனாக என்னால் சாகித்ய அகாடமி பொறுப்புகளில் தொடர முடியாது. எனவே உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் என்னை விலக்கிக்கொள்கிறேன்" என்று கடும் கண்டனத்துடன் எழுத்தாளர் சச்சிதானந்தம் அவர்களும் தனது மதிப்புமிக்க பொறுப்பை துறந்தார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு சாகித்ய விருது பெற்று மலையாள எழுத்தாளர் சுபாஷ் சந்திரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இன்னும் ஓரிரு நாட்களில் சாகித்ய அகாடமி நல்லதொரு முடிவு எடுக்காவிட்டால் நான் பெற்ற சாகித்ய விருதை திருப்பி அளிக்கலாமா என முடிவு செய்துள்ளேன்" என்றார்.

சிறுகதை எழுத்தாளர் பி.கே.பாரக்கடவு, சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பதவியை தான் உடனடியாக ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.

இலக்கிய விமர்சகர் கே.எஸ்.ரவிக்குமாரும், சாகித்ய அகாடமி பொதுக்குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக. எழுத்தாளர் சசி பாண்டே சாகித்ய அகாடமி குழுவிலிருந்து விலகினார். நாட்டில் பெருகி வரும் சகிப்புத் தன்மையற்ற போக்குக்கு அகாடமி மவுனம் சாதிப்பதை விமர்சித்து அவர் தனது பொறுப்பை உதறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு ஆட்சிக்கட்டில் ஏறிய இந்துத்துவ மதவாத சக்திகளால் நாடு மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. மகாத்மா காந்தி கொலைக்குப் பிறகு வாலை சுருட்டிக் கொண்டிருந்த சங்பரிவாரங்கள், பாபர் மசூதி இடிப்பை இரும்பு கரம் கொண்டு தடுக்கத் தவறியதன் காரணமாக எழுச்சி பெற்று, நாடு இந்த இழிநிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இடிக்கப்பட்ட பாபர் மசூதியை பலரும் முஸ்லிம்களின் வணக்கத்தளமாகத் தான் பார்த்தார்கள். ஆனால் இந்த நாட்டின் பன்முகத் தன்மைக்கு, இறையாண்மைக்கு உண்டான அழிவாக, நாசமாக யாரும் கருதவில்லை. அவ்வாறு கருதி தடுத்திருந்தால், இன்றைக்கு இந்த அளவுக்கு அவமானங்கள் நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்காது.


SOURCES:

Dadri lynching


மூடநம்பிக்கைக்கு எதிராக பேசியதால் பயங்கரம்: மூத்த கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சுட்டுக் கொலை - இந்துத்துவா அடிப்படைவாதிகளிடம் விசாரணை


நேற்று நரேந்தர தபோல்கர் & கோவிந்த பன்சாரே இன்று எம்.எம்.கல்புர்கி நாளை நாம்


கல்புர்கி படுகொலையை தொடர்ந்து கன்னட எழுத்தாளர் பகவானுக்கு தொடரும் கொலை மிரட்டல்: வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு


வைகோ அறிக்கை


No comments:

Post a Comment