Translate

Saturday, 7 November 2015

ஆரியர் செய்த அக்கிரமம்- அறிஞர் அண்ணா



டாக்டர் அத்பேத்கரும் மற்றும் இன்று தீண்டப்படாதவர்கள் என்று அழைக்கப்படும் ஏனையோரும் இந்தியப் பூர்வகுடிகளின் சந்ததிகளே. ஆதிகாலத்தில், அந்தப் பூர்வகுடி மக்களே நாட்டுக்கு, அதிபதிகளாக சுதந்திர வாழ்வு நடத்தி வந்தார்கள். அவ்வாறு வாழ்ந்து வந்த இந்தியப் பூர்வகுடி மக்கள், பிற்காலத்து வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு கூட்டத்தாருக்கு அடிமைப்பட்டு சுதந்திரத்தையும், மானத்தையும் இழந்து மிருகங்கள் அனுபவிக்கும் சாமானிய சுதந்திரங்களுமில்லாமல் உயிர்ப்பாரம் தாங்கும் படி நேர்ந்திருக்கிறது. இது போன்ற சம்பவத்தை உலக சரித்திரத்திலேயே காண முடியாது.

குடி புகுந்த ஆரியர்கள் பூர்வகுடிகளை விட பளபளப்பான வர்ணமுடையவர்களாயிருந்தனர். எனவே, வெள்ளையர்களான ஆரியர்கள் கறுப்பர்களான அதி இந்தியர்களை விட உயர்ந்தவர்கள் என ஒரு ஐதீகம் ஏற்பட்டது. அன்று முதற்கொண்டே வர்ணபேதக் கொடுமை ஆரம்பமாயிற்று. வர்ணபேதக் கொடுமையினால் இந்தியாவைப் போல் கஷ்டப்படும் நாடு உலகத்திலேயே வேறு இல்லை என்று சொல்லலாம். ஆரியர்கள் ஆதிஇந்தியர்களைச் சந்தித்தபோதே அவர்களுக்கு `கறுப்பர்கள்’ என்ற இழிபெயரைச் சூட்டினார். போர்க்கடவுளான இந்திரனை ஒரு ஆரிய வீரன் பாராட்டிப் புகழ்வதைக் காண்க.

ஆரியர் சட்டத்துக்குக் கீழ்ப்படியாதவர்களைத் தண்டித்து கறுப்பர்களை மனுவுக்கு அடிமைப்படுத்தி மற்றும் நூற்றுக்கணக்கான உதவிகள் புரிந்து இந்திரன் ஆரியர்களைக் காப்பாற்றினான். (ரிக் வேதம் முதல் மண்டலம் 30-வது மந்திரம் 8-வது ஸ்லோகம்.)

ஆரியர் கொடுமை

ஆரியர்களுக்கும் ஆதி இந்தியர்களுக்கும் நடைபெற்ற போரைப் பற்றியும் ஆரியர் செய்த பற்பல கொடுமைகளைப் பற்றியும் வேதங்களில் பல குறிப்புகள் காணப்படுகின்றன. வெள்ளை ஆரியர்கள் கறுப்புப் பூர்வ குடிகளை எவ்வளவு குரூரமாக இம்சித்தார்கள் என்பதைக் கீழ்வரும் உதாரணங்களால் ஒருவாறு யூகித்துக் கொள்ளலாம்.

1. "ஓ! உலகம் போற்றும் இந்திரனே! ஸுஷ்ரூவனை எதிர்த்த இருபது கறுப்பு அரசர்களையும் அவர்களது அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றியொன்பது படைகளையும் நீ உன் தேர்சக்கரத்துக்கு இரையாக்கி நசுக்கிக் கொன்று ஆரியர்களுக்கு உதவி புரிந்தாய்..!"
(ரிக் வேதம் மண்டலம் 1, மந்திரம் 53. ஸ்லோகம் 9)

2. "ஓ! இந்திரனே! பிப்ரு மிருகய அசுர அரசர்களை ஆரிரிய மன்னனான விதாதின் புத்திரன் ரிஜீஷ்வனுக்கு அடிமைப் படுத்தினாய்! ஐம்பதினாயிரம் கறுப்புப் படைகளை செயித்தாய். முதுமை உயிரை மாய்ப்பது போல் அனேக கோட்டைகளையும் பாழாக்கினாய்.!"
(ரிக் வேதம் மண்டலம் 4 மந்திரம் 16 ஸ்லோகம் 18)

3. "ஆரிய அரசன் தாபிதியின் நன்மைக்காக முப்பதாயிரம் தாசர்களை உன் மந்திரச்சக்தியினால், ஓ! இந்திரனே! யமனுலகுக்கு அனுப்பினாய்.!"
(ரிக் வேதம் மண்டலம் 4 மந்திரம் 30 சுலோகம் 21)

4. "தீரனான இந்திரனே! உன் வலை பிரம்மாண்டமானது, மஹா பலாட்டியமானது, ஆயிரக்கணக்கானவர்களைச் சிக்க வைக்கும் ஆற்றலுடையது, ஒன்று, பத்து, நூறு, ஆயிரமாகப் பெருகும் சக்தியுடையது. அத்தகைய வலையில் தாசப் படையைச் சிக்க வைத்து நூற்றுக்கணக் கான ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கானவர்களைக் கொன்றாயே.!"
(அதர்வண வேதம் தாண்டம் 8 மந்திரம் 8 ஸ்லோகம் 7)

மேலே கூறிய உதாரணங்களால் ஆதிஇந்தியர்கள் லட்சக்கணக்காகக் கொல்லப்பட்டதையும் சித்திரவதை செய்யப்பட்டதையும் ஊகித்து அறிந்து கொள்ளலாமல்லவா? எஞ்சிய ஆதி இந்தியர்கள், மீது ஆரியர்கள் கொண்டிருந்த வெறுப்பும், வஞ்சகமும் அம்மா பெரிது! பெரிது!!

கீழ் வருவன ரிக் வேதம் 7-வது படலம் 104-வது மந்திரத்திலும் அதற்கான வேதம் கண்டம் 8, 4வது ஸ்லோகத்திலும் காணப்படுகின்றன.

ஸ்லோகம் 1
"இந்திரனே ஸோமனே ராட்சகர்களை எரி, எரி! நசுக்கு, நசுக்கு! இடவனாந்திரங்களில் ஒன்று நூறாய் பெருகிவரும் அந்தக் கூட்டங்களை அடக்கு, அடக்கு! பின்னப்படுத்து, மடையர்களை அக்னி சுவாலையால் சுட்டுப் பொசுக்கு, வதை செய்! துண்டு துண்டாக வெட்டு!"

ஸ்லோகம் 2
"இந்திரனே, ஸோமனே, அரக்கக்கூட்டத்தை, துரோகிகளை, தீமையில் உருவானவர்களை, அக்னி குண்டத்தில் வைத்து, நீர் பானையில் வேகவைப்பது போல் அவித்துக் கொல்! துரோகிகளான அந்த பச்சை மண்ணைத் தின்னும் அரக்கர்களை மீளாநரகத்தில் தள்ளி இம்சிப்பாயாக!"

ஸ்லோகம் 3
"குகைகளிலும் வனாந்திரங்களிலும் அந்த சண்டிகளை கீறி, பிளந்து அரித்து சித்திரவதைச் செய்! இருண்ட காடுகளில் மறைந்து கிடக்கும் அவர்களுக்கு ஒரு உதவியும் செய்யாதே! அந்த வனாந்திரங்களில் அவர்கள் மீளாமல் போவார்களாக. பயங்கர பலத்தால் அவர்களை அடக்கி ஒடுக்குவீர்களாக!"

ஸ்லோகம் 4
"ஓ இந்திரனே, ஓ ஸோமனே. மேல் மண்டலத்திலிருந்து கொடியவர்களை கீழே சொரிவீர்களாக! அதிலிருந்து ஆயிரக்கணக்கான ஆரியர் கிளம்புமாறு கருணை புரிவீர்களாக! தினமும் பெருகிவரும் இந்தக் கூட்டங்களை எதிர்ப்பதற்காகவே வானிலிருந்து லட்சக்கணக்கான அஸ்திரங்கள் தோன்றும்படியாக செய்வீர்களாக!"

ஸ்லோகம் 11
"அசூரர்கள் ஒழிக! பிள்ளை குட்டிகள் நசிக்க! பிற்கால சந்ததிகள் அசூரக் கூட்டங்களை விழுங்கி விடட்டும்."

- திராவிட நாடு, 29-11-1942


[][][]

No comments:

Post a Comment