Translate

Saturday, 7 November 2015

இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்! -வினவு.


மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம்.. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்.

மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம்இதற்காக 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரக்யா சிங், சுனில் ஜோஷி, பாரத் ரித்தேஷ்வர் ஆகியோருடன் சேர்ந்து நான் திட்டமிட்டேன்அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால், அதனைத் தடுக்கவும் இந்துக்களை அச்சுறுத்தவும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதுசம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில்ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான்…”

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி  அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்.

***
கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரின் முஸ்லிம்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தன. 2007 நவம்பர் 11-ஆம் தேதியன்று ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவில் ரம்ஜான் நோன்பு காலத்தில் குண்டுகள் வெடித்தன. 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் டெல்லிக்கும் பாகிஸ்தானின் லாகூருக்குமிடையே ஓடும் சம்ஜவ்தா விரைவு வண்டியில், அரியானா மாநிலத்தின் பானிபட் அருகே குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து மே மாதத்தில் ஆந்திராவின் தலைநகர் ஐதராபாத்தின் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. மலேகான் நகரில் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதியன்று மீண்டும் குண்டுகள் வெடித்தன. இக்குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயமடைந்தார்கள்.
இப்படி ஒவ்வொரு முறையும் குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம், பார்ப்பன முதலாளித்துவ ஊடகங்கள் இதற்கு முஸ்லிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்று எவ்வித விசாரணையுமின்றி குற்றம் சாட்டின. 2007-ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் கசூரி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்த போது, சம்ஜவ்தா விரைவு வண்டியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தியா-பாகிஸ்தானிடையே நல்லுறவு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இஸ்லாமியத் தீவிரவாதிகள் இக்குண்டு வெடிப்பை நடத்தியதாக பார்ப்பன முதலாளித்துவ ஊடகங்கள் சகட்டு மேனிக்குக் குற்றம் சாட்டின. இது ஹூஜி மற்றும் லஸ்கர்-இ-தொய்பா ஆகிய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களின் சதி என்று அமெரிக்காவும் கூறியது.
இக்குண்டு வெடிப்புகள் குறித்து ஆரம்ப விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே போலீசையும் துணை ராணுவப் படைகளையும் ஏவி முஸ்லிம் குடியிருப்புகளை அரசு சுற்றி வளைத்தது. சட்டப்படியும் சட்டவிரோதமாகவும் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொடிய சித்திரவதைக்கு ஆளாயினர். அவர்களது இளமையும் எதிர்காலமும் நொறுங்கிப் போயின. பயங்கரவாதி என்ற அவமானத்தோடு, அவர்களது குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டு கையறு நிலையில் தவித்தன. குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டோரின் குடும்பங்களைப் போலவே, குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாகப் பொய்க்குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட அப்பாவிகளின் குடும்பங்களும் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
***
கடந்த 2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின் நான்டெட் நகரில் வெடிகுண்டுகள் தயாரித்தபோது விபத்து நடந்து ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் இருவர் மாண்டனர். ஐந்துபேர் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பார்ப்பன பயங்கரவாதிகள் 21 பேரை மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு அதிரடி போலீசு அடுத்தடுத்து கைது செய்து ஔரங்காபாத் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இருப்பினும், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவர்களுள் 11 பேரை விடுவிக்க எத்தணித்தது. இதை எதிர்த்து உள்ளூர் முஸ்லிம்கள் போராடியதோடு, சி.பி.ஐ. விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீண்ட இழுபறிக்குப் பிறகே, சி.பி.ஐ.யின் விசாரணை தொடங்கியது.
சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்த வெடிபொருளை முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித் கள்ளத்தனமாக ஜம்முவிலிருந்து வாங்கிக் கொடுத்ததற்கான அறிகுறிகள் கிடைத்தன. மலேகான் குண்டு வெடிப்பிலும் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இக்குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சேசிஸ் எண்ணைக் கொண்டு, அது அகில பாரத வித்யார்த்தி பரிசத் எனும் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்து, பின்னர் அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங்கினுடையது என்பதை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு சிறப்புப் போலீசுப்படைத் தலைவரான ஹேமந்த் கார்கரே கண்டறிந்தார். கடந்த 2008-ஆம் ஆண்டில் பிரக்யா சிங் கைது செய்யப்பட்டாள்.
அவளைத் தொடர்ந்து முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித், ஜம்முவில் சாரதா பீடம் என்ற பெயரில் ஆசிரம் நடத்தி வந்த தயானந்த் பாண்டே மற்றும் மலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட 11 பேரை ஹேமந்த் கார்கரே கைது செய்தார். பிரக்யா சிங்கை விசாரணை செய்த போது, ம.பி.யைச் சேர்ந்த சுனில்ஜோஷி, ராமச்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அசீமானந்தா, பாரத் ரித்தேஷ்வர் முதலானோர் முக்கிய சதிகாரர்கள் என்பது தெரிய வந்தது. விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 2008, நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கார்கரே பலியானார். இதற்கிடையே சுனில்ஜோஷி இந்துவெறி பயங்கரவாதிகளாலேயே கொல்லப்பட்டான். மற்றவர்கள் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.
மலேகான் மற்றும் சம்ஜவ்தா எக்ஸ்பிரசில் வெடித்த குண்டுகள் ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்தவையாக இருந்ததால்இக்குண்டு வெடிப்புகளில் இந்துவெறி பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரணையை மேற்கொண்டது. தயானந்த் பாண்டேயின் கணினியிலிருந்து கிடைத்த 37 உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இவையனைத்தும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இவர்கள் திட்டமிட்டதை நிரூபித்துக் காட்டின. இதனடிப்படையில், கடந்த 2010-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்.-இன் முழுநேர ஊழியரான சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார்  கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டான். ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18-ஆம் தேதியன்று டெல்லி வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்குக் கொண்டுவரப்பட்ட அசீமானந்தா, இக்குண்டுவைப்புகளில் ஈடுபட்டது நாங்கள்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். போலீசாரின் முன்னிலையில் பெறப்படும் வாக்குமூலங்களை விட, நீதிபதி முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் சட்டப்படி உறுதியான ஆதாரங்களாகியுள்ளதால், குண்டுவைப்பு பயங்கரவாதச் செயல்களில் இந்துவெறி ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டிருப்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது.
மே.வங்கத்தைச் சேர்ந்த நாப குமார் எனப்படும் அசீமானந்தா, 1977-இல் ஆர்.எஸ்.எஸ்-இன் முழுநேர ஊழியனாகி மே.வங்கத்திலும் பின்னர் அந்தமானிலும் ஆர்.எஸ்.எஸ்.-இன் பரிவாரங்களில் ஒன்றான வனவாசி கல்யாண் ஆசிரமத் தலைவராகப் பணியாற்றியுள்ளான். பின்னர் 1997-இல், இவன் குஜராத்தின் டாங் மாவட்டத்தில் ஷப்ரிதாம் என்னும் ஆசிரமத்தை  நிறுவிக் கொண்டு சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் எதிராக ஆத்திரமூட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தான். இவன் குஜராத் முதல்வர் மோடி, ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான சுதர்சன், மோகன் பாகவத் ஆகியோருக்கு நெருக்கமானவன். பயங்கரவாதிகளின் சித்தாந்த குருவான இவன்தான் அஜ்மீர், ஐதராபாத், மலேகான் முதலான இடங்களில் குண்டுவைக்க இலக்குகளைத் தீர்மானித்து வழிகாட்டியுள்ளான். 2008-இல் பெண் சாமியாரான பிரக்யா சிங் கைது செய்யப்பட்ட பிறகு, அசீமானந்தா தப்பியோடி தலைமறைவாகிவிட்டான். கடந்த 2010 நவம்பர் 19-ஆம் தேதியன்று அரித்துவாரில் பதுங்கியிருந்தபோது சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டான்.
தன்னோடு இக்குண்டுவைப்பு சதியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். மத்தியக் கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார், மத்தியப் பிரதேச ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான (பிரச்சாரக்) சுனில் ஜோஷி, இந்தூர் மாநகர ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான சந்தீப் டாங்கே, மூத்த ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான ராம்ஜி, தேவேந்திர குப்தா, மேல்மட்ட உறுப்பினரான சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோஹித், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான யோகி ஆதித்யானந்த், குஜராத்தின் விவேகானந்தா சேவா கேந்திரத்தின் பாரத் பாய், அந்த அமைப்பின் மாநில அமைப்பாளரான டாக்டர் அசோக், முக்கிய பிரமுகர்களான லோகேஷ் சர்மா, ராஜேஷ் மிஸ்ரா, ஜம்முவைச் சேர்ந்த சாரதா பீட சாமியார் தயானந்த் பாண்டே ஆகியோரின் பெயர்களையும் அவன் வாக்குமூலமாக அறிவித்துள்ளான். யாருடைய தூண்டுதலோ, நிர்ப்பந்தமோ இல்லாமல், எவ்வித அச்சமுமின்றி சுய நினைவோடுதான் இந்த வாக்குமூலத்தை அளிப்பதாகவும் அவன் தெரிவித்துள்ளான்.
ஐதராபாத்தின் சன்சல்குடா சிறையில் அசீமானந்தா அடைக்கப்பட்டபோது, அந்தச் சிறைக் கொட்டடியில் அவனுடன் இருந்த கைதியான கலீம் என்ற இளைஞர், வயதில் மூத்தவரான அவனுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, உணவு எடுத்து வந்து கொடுப்பது முதலான பல உதவிகளைச் செய்துள்ளார். ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பையொட்டி கைது செய்து சிறையிடப்பட்ட அப்பாவி இளைஞர்தான் கலீம். குண்டு வைத்த அசீமானந்தா, தன்னால் ஒரு அப்பாவி முஸ்லிம் இளைஞன் சிறையில் வதைபடுவதைக் கண்டு வருந்தியதாகவும், மனசாட்சி உலுக்கியதாகவும், அதற்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில் உண்மைகளை வாக்குமூலமாக அளிப்பதாகவும் தெரிவித்துள்ளான்.
இப்பயங்கரவாதச் சதித் திட்டத்தில் முக்கியமானவனாகிய சுனில் ஜோஷி, கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பரில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களாலேயே கொல்லப்பட்டான். இக்குண்டுவெடிப்பு வழக்கில் மேலிருந்து கீழ்மட்டம் வரை சங்கிலித் தொடர்போல பலர் கைதாகி வருவதால், ஆர்.எஸ்.எஸ். தலைமை தனது விசுவாச ஊழியனையே கொன்றொழிக்க உத்தரவு பிறப்பித்திருக்க வாய்ப்புள்ளது. இதேபோன்ற நிலைமை தனக்கும் ஏற்படும் என்பதாலும், முஸ்லிம் இளைஞரால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியும் சேர்ந்துதான் அசீமானந்தாவை ஒப்புதல் வாக்குமூலத்துக்குத் தள்ளியிருக்க வேண்டும்.
கடந்த டிசம்பர் 20-ஆம் தேதியிட்டு அசீமானந்தா, இந்திய அரசுத் தலைவிக்கும் பாகிஸ்தான் அதிபருக்கும் பாவமன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளான். அதில், அஜ்மீர், மலேகான், ஐதராபாத், சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்தியவர்களில் நானும் ஒருவன் எனக் குறிப்பிட்டுள்ளான். ஐதராபாத்தின் சஞ்சலகுடா சிறையிலிருந்து அவன் எழுதிய இக்கடிதங்கள் இப்போது ஊடகங்களில் பகிரங்கமாகியுள்ளது.
***
பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் அசீமானந்தாவைச் சித்திரவதை செய்து கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், இந்துத்துவப் பயங்கரவாதம் என்ற அவதூறு கிளப்பப்படுவதாகவும் வழக்கம் போலவே கூச்சலிடுகின்றன. ஆனால் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமின்றி, வலுவான தடயவியல் ஆதாரங்களும் சி.பி.ஐ. விசாரணையில் கிடைத்துள்ளன. புதுப்புது அமைப்புகளை திட்டமிட்டு உருவாக்கி, இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளை அத்தகைய அமைப்புகளின் பெயரால் நடத்தி வருவதை ஆர்.எஸ்.எஸ். ஒரு உத்தியாகக் கொண்டு இயங்கி வருவதும் இப்போது நிரூபணமாகியுள்ளது.
ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நோக்கியா செல்போனும் அதிலுள்ள வோடபோன் சிம் கார்டும் குண்டு வைக்கப்பட்ட இடத்தில் கிடைத்துள்ளன. இது, குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் அடிக்குமாறு செய்து அதன் மூலம் மின் இணைப்பு பெற்று குண்டுகளை வெடிக்கச் செய்யும் அதிநவீன தொழில்நுட்ப முறையாகும். இதேபோன்ற செல்போன் மூலமாக குண்டுகளை வெடிக்கச் செய்யும் முறையில்தான் சம்ஜவ்தா விரைவு வண்டியிலும் குண்டு வெடித்துள்ளது. மெக்கா மசூதியில் 6.53 வாட்ஸ் திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டது. அதே வகையான பேட்டரிகள்தான் சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குண்டுக்கான வார்ப்பு இரும்பு உலோகமும் ஒரே மாதிரியாக இருந்துள்ளன. இத்தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில்தான் இக்குண்டுவெடிப்புகள் அனைத்திலும் ஒரு இந்துவெறி பயங்கரவாத கும்பல் ஈடுபட்டுள்ளதென புலனாவுத் துறையினர் அறுதியிட்டனர்.
செல்போன்கள் வாங்கப்பட்ட இடமும், வாங்கிய நபரின் பெயர் பாபுலால் யாதவ் என்பதும், போலியான ஆவணங்களைக் கொடுத்து இதேபெயரில் 11 சிம் கார்டுகள் வாங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தன. பாபுலால் யாதவ் வாங்கிய செல்போன்களின் குறியீட்டு எண்ணை வைத்து அவற்றில் நான்கு செல்போன்களை ராஜஸ்தானிலுள்ள ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்கள் பயன்படுத்தி வருவதை வைத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூலமாக பாரத் ரித்தேஷ்வர் உள்ளிட்ட இதர சதிகாரர்கள் சிக்கினர்.
இவர்கள் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் முதலான பிற மாநிலங்களிலிருந்தும் இப்பயங்கரவாதச் செயல்களுக்கு ஆட்களைத் திரட்டியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். மட்டுமின்றி அதன் பரிவாரத்தைச் சேர்ந்த பஜ்ரங்தள், விசுவ இந்து பரிஷத், அபிநவ் பாரத், ஜெ வந்தேமாதரம், வனவாசி கல்யாண் ஆசிரமம் முதலானவற்றிலிருந்தும் ஆட்களைப் பொறுக்கியெடுத்து மூன்று குழுக்களை உருவாக்கினர். இதன்படி, ஒரு குழு நிதி ஏற்பாடுகளையும் வாகன ஏற்பாடுகளையும் செய்யும். அடுத்த குழுவெடிகுண்டுகளையும் தேவையான சாதனங்களையும் ஏற்பாடு செய்யும். கடைசியாக உள்ள குழு, குண்டு வைப்புகளில் ஈடுபடும். ஒரு குழுவினருக்கு மற்ற குழுவினர் பற்றித் தெரியாது. இதனால் ஒருவர் கைது செய்யப்பட்டாலும் மற்ற குழுவினர் பற்றித் தெரியாது. இந்தச் சதித் திட்டத்துடன்தான் இப்பயங்கரவாதக் கும்பல் இயங்கியது என்பதும் இப்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி, 2002-இல் குஜராத் பயங்கரவாதப் படுகொலைகளைத் தொடங்கிவைத்த கோத்ரா எம்.எல்.ஏ.வான ஹரேஷ் பட்டுக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலையில், டீசல் வெடிகுண்டுகளும் பைப் வெடிகுண்டுகளும் தயாரிக்கப்பட்டு குஜராத் பயங்கரவாதப் படுகொலையின்போது இந்துவெறி பயங்கரவாதிகளுக்கு விநியோகிக்கப்பட்டன என்பதும்சபர்கந்தா மாவட்ட விசுவ இந்து பரிசத்தின்  தலைவரான தவால் ஜெயந்தி பட்டேலின் கல்குவாரியில் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிகுண்டுகள் ஏராளமாகத் தயாரிக்கப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதும் ஏற்கெனவே ஆதாரங்களுடன் நிரூபணமாகியுள்ளது. மேலும், கடந்த 2007-ஆம் ஆண்டில் தெகல்காவார இதழ் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பார்ப்பன பாசிச பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறியாட்டத்தையும், இந்துவெறி பயங்கரவாதிகளிடையே ஊடுருவி அந்தக் கொடூரங்களை அரங்கேற்றியவர்களின் வாயிலிருந்தே மறுக்க முடியாத ஒப்புதல் வாக்குமூலங்களையும் ஆதாரங்களுடன் வெளியிட்டது. கடந்த 2007-ஆம் ஆண்டு தென்காசியில் நடந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் இந்து முன்னணி கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் என்பதும் நிரூபணமாகியுள்ளது.
உண்மைகள் அம்பலமானபோதிலும்ம.பி.யில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்ததால் இந்துவெறி பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. நெருக்கடிகள் அதிகரித்த பின்னரே ம.பி. போலீசு வேறு வழியின்றி இந்துவெறி பயங்கரவாதிகளில் சிலரைக் கைது செய்தது. அஜ்மீர், மெக்கா மசூதி விசாரணைகளில் உண்மைகள் வெளிவந்துள்ள போதிலும், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் போலீசார் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆந்திராவிலும் ராஜஸ்தானிலும் அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் வதைக்கப்பட்ட பின்னர், அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பாகிய போதிலும், வேறொரு பொய்வழக்கு சோடித்து அவர்களை மீண்டும் சிறையிலடைத்து வதைத்தது, இம்மாநிலங்களின் போலீசு.
இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.-இன் பயங்கரவாதம் அடுத்தடுத்து வெளியான போதிலும், ஒருசில ஆங்கில ஊடகங்கள் மட்டுமே இவற்றை வெளியிட்டுள்ளனவே தவிர, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் அவை திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், தீவிரவாதிகள் என்றாலே முஸ்லிம்களும் நக்சல்பாரிகளும்தான் என்ற கருத்து ஊடகங்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இந்த அடிப்படையிலேயே போலீசும் அதிகார வர்க்கமும் ஒருதலைப்பட்சமாக அணுகுகின்றன. மதச்சார்பற்றவர்களாகக் கூறிக்கொள்ளும் இந்து’’க்களே கூட ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் இரகசிய குண்டுவைப்புகள் மூலம் அப்பாவி பொதுமக்களைக் கொல்லும் பயங்கரவாதச் செயல்களில் இறங்க மாட்டார்கள் என்றே இன்னமும் கருதுகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும், பல்வேறு சாட்சியங்கள், தடயவியல் ஆதாரங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் வாயிலாக தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்படவில்லை. தண்டிக்கப்படவும் இல்லை. உண்மைகள் அடுத்தடுத்து வெளிவந்துள்ள போதிலும், எந்த ஓட்டுக் கட்சியும் இதுகுறித்து வாய்திறப்பதுமில்லை. இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதாலும், இந்நாட்டின் அரசியலமைப்பு முறையின் பிரிக்கமுடியாத அங்கமாக இந்துத்துவம் கோலோச்சுவதாலும் அரசும் ஓட்டுக்கட்சிகளும் ஊமையாகி நிற்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்று நிரூபணமாகியிருப்பது மட்டுமல்ல; நாட்டுக்கும் மக்களுக்கும் பேரபாயமாகிவிட்ட இப்பயங்கரவாத கும்பலை கடுமையான நடவடிக்கைகள் மூலமாகவோ, சட்டரீதியாகவோ, ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் வெற்றிகள் மூலமாகவோ வீழ்த்திட முடியாது என்பதும் இப்போது நிரூபணமாகியுள்ளது. பார்ப்பனியத்தால் இந்து எனும் பெயரில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்றிணைத்துப் போராடுவதும், இக்கொடிய பயங்கரவாத மிருகங்களை அம்பலப்படுத்தி மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதும், நேருக்குநேராக நின்று எதிர்த்து முறியடிப்பதும் மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளின் அவசர அவசியக் கடமையாகியுள்ளது.
_______________________________________

தனபால், புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2011
COPIED FROM:
http://www.vinavu.com/2011/02/03/on-saffron-terror/


No comments:

Post a Comment