விடியல்: நடந்த நிகழ்வுகளை வாசகர்களுக்கு சிறிது விளக்க முடியுமா?
சர்தாஜ்: நான் அப்பொழுது சென்னையில் இருந்தேன். இரவு 10.30 மணி அளவில் வீட்டில் எல்லோரிடமும் நலன் விசாரித்துவிட்டு சந்தோஷமாகத்தான் போனை வைத்தேன். ஆனால், 10.50 அளவில் மீண்டும் போன் வருகிறது. எனது தந்தை மற்றும் மகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக தங்கை போனில் கதறியதை அடுத்து நான் செய்வதறியாமல் குழம்பி போனேன். இறுதியாக எனது தந்தையின் இறுதி சடங்கில்தான் நான் கலந்து கொள்ள முடிந்தது. எனது தந்தை விஷயத்தில் இது ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? யாரை திருப்திப்படுத்த நடந்தது? என்று இன்று வரை புலப்படவில்லை. அவர் மத தலைவரோ சமுதாயத்தில் அந்தஸ்து பெற்றவரோ கிடையாது. சாதாரண கூலித் தொழிலாளி. மாட்டை அறுத்தார் என்ற பொய்யை கூறி அவரை கொலை செய்ய வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை.
விடியல்:ஊடகங்கள் இந்த நிகழ்வை சமூக பொறுப்புணர்வுடன் அணுகினார்களா? அல்லது ஒரு சார்பு நிலையை கடைபிடித்தார்களா?
சர்தாஜ்: ஊடகங்களின் பொறுப்பை இந்த இடத்தில் இரண்டாக பிரிக்கலாம். ஒன்று நடந்த சம்பவத்தை சமூக பொறுப்புணர்வுடன் மக்கள் மன்றத்தில் கேள்வியாக வைத்து ஆட்சியாளர்களிடம் நீதியை கோரினார்கள். இதனை நாம் மறுக்க முடியாது. நாட்டின் ஒரு ஓரத்தில் நடைபெற்ற நிகழ்வை ஒட்டுமொத்த நாட்டிற்கும் கொண்டு சென்றது ஊடகங்கள்தான். அதே சமயம் சில ஊடகங்களும் சமூக வலைதளங்களும் தவறான செய்திகளையும் வெளியிட்டனர். எனது தந்தை மாட்டை திருடியதாகவும் திருப்பி கேட்க சென்ற இடத்தில் தகராறு ஏற்பட்டு அதில் அவர் கீழே விழுந்து இறந்ததாகவும் எழுதினர். இது போன்ற இன்னும் சில கற்பனை கதைகளும் எழுதப்பட்டன. ஆனால் அன்றைய தினம் திட்டமிட்ட ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. எனது தந்தை மட்டுமின்றி இன்னும் சில முஸ்லிம்களும் தாக்கப்பட்டுள்ளனர். எனவே, நியாயமாக நடந்து கொள்ளும் ஊடகங்கள் மத்தியில் பொய்களை பரப்பும் சில ஊடகங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்பதை நான் வேதனையோடு பதிவு செய்கிறேன்.
விடியல்: கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை முஸ்லிம்கள் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தார்கள். ஆனால், சிறுபான்மையினரையும், தலித்களையும் பாதுகாப்பதில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தவறி விட்டார் என்று எடுத்துக் கொள்ளலாமா?
சர்தாஜ்: இந்த கேள்விக்கு எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. எனக்கு அரசியல் தெரியாது. நான் அந்த பக்கம் போக விரும்பவில்லை. மனிதாபிமான அடிப்படையில் உத்தர பிரதேச முதல்வர் பல்வேறு உதவிகளை எங்களுக்கு செய்தார். ஆனால், மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் எங்களை மனிதர்களாக கூட பார்க்கவில்லை. மாறாக, மத்திய அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறிய வார்த்தைகள் இன்னும் கொடுமையானது. ஒருபடி மேலே போய் பிரதமர் இந்த சம்பவத்தை துரதிஷ்டவசமானது என்று கூறி நிறுத்தி கொண்டார். எனவே, அரசியல்வாதிகளின் இந்த விஷயத்தில் நடந்து கொண்ட விதம்; கொடுமையானது. அநீதியானது.
விடியல்: காலம் காலமாக அதே ஊரில் வாழ்ந்து வருகிறீர்கள். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பகை ஏதும் இல்லாத சூழலில் இத்தகைய கொலைவெறி தாக்குதல் எப்படி நடந்தது?
சர்தாஜ்: இஸ்லாமியர்களும் இந்துக்களும் இங்கு பரம்பரை பரம்பரையாக ஒரு தாய் மக்களாக அந்நியோன்யமாக வாழ்ந்து வருகிறோம். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் வாழ்கின்ற இடத்தில் வெறும் முப்பது முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன. எனக்கு தெரிந்து ஒரு சிறு பிரச்சனை கூட இது நாள் வரை வந்தது கிடையாது. அந்த அளவிற்கு மிக நெருக்கமாக இரு சமூக மக்களும் பழகி வருகிறோம். ஆனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இங்குள்ள சூழ்நிலை சற்று மாற்றம் அடைவதை காண முடிந்தது. சில இளைஞர் தீவிர இந்து மனோபாவம் கொண்டவர்களாக மாறிவிட்டனர். இதில் என்னுடைய நண்பர்களே இருந்தனர். ஆனால், அவர்களே எனது தந்தையை இப்படி செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
விடியல்: உங்கள் கிராமத்தின் பெரும்பான்மையான இந்து சமூக மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? இந்த நிகழ்வை எப்படி பார்க்கிறார்கள்?
சர்தாஜ்: எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களில் அநேகம் பேர் இதனை கண்டிக்கிறார்கள். ஆனால் சம்பவம் நடைபெற்ற போது ஒரு சிலரை தவிர யாரும் தட்டிக் கேட்க முன்வரவில்லை. காரணம் எதிரணியின் பிரச்சாரம் மதம் சார்ந்தததாக இருந்தது. அவர்கள் புனிதமாக கருதக்கூடிய பசுமாட்டை அறுத்து வைத்திருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை அம்மக்கள் ஏனோ நம்பி விட்டார்கள். அந்த அளவிற்கு பிரச்சாரம் வெறியூட்டப்பட்டது. கோவில்களில் மணி அடித்து அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதனை அம்மக்கள் நம்பிவிட்டனர். ஒரு கணம் சற்று நிதானமாக யோசித்து அப்படி நடந்திருக்குமா, அதற்கான வாய்ப்பு இருக்கிறதா. எப்படி மாட்டை கொண்டு வந்தார், எங்கு வைத்து அறுத்தார் என்கின்ற கேள்விகளை அவர்கள் தங்களுக்குள் எழுப்பி இருந்தால் பிரச்சாரம் செய்த கும்பலின் உண்மை முகம் வெளிப்பட்டிருக்கும். ஆனால்,அதற்குள் எல்லாம் நடந்து விட்டதே.
அப்படியே மாட்டிறைச்சி வைத்திருந்தாலும் இப்படிதான் கொலை செய்ய வேண்டுமா? விசாரிக்க சென்ற இடத்தில் கீழே விழுந்து விட்டார் என்கிறார்கள். அப்படி என்றால் கம்பு, கட்டை, கடப்பாறை, ஈட்டி,மண்வெட்டி ஏன் எடுத்துச் செல்ல வேண்டும்? எனது தந்தையின் உடம்பில் காயங்களே இல்லாத இடம் கிடையாது. எல்லா வகையான ஆயுதத்தையும் பயன்படுத்தி அவரை கொலை செய்துள்ளனர். அதேபோல எனது சகோதரன் டேனிஷையும் பல இடங்களில் வாட்களால் வெட்டி உள்ளனர். வீட்டிலுள்ள தையல் மிஷினை கொண்டு தலையில் அடித்திருக்கிறார்கள். அவர் இன்று வரை அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். அந்தளவிற்கு வெறி அவர்கள் கண்ணை மறைத்துவிட்டது. எனது சகோதரனின் நண்பர்கள் சிலரும் இந்த கூட்டத்தில் இருந்தனர் என்பதுதான் இதில் வேதனையான விஷயம்.
விடியல்: உத்தர பிரதேச முஸ்லிம்களின் நிலை எப்படி உள்ளது?
சர்தாஜ்: இந்தியாவில் அதிகமான முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியில் இரண்டாவது இடத்தில் உத்தர பிரதேசம் உள்ளது. ஆனால், கல்வியிலும், பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் மிக மிகப் பின்தங்கிய நிலையிலேயே இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆண்களே கல்வி கற்றவர்களாக இல்லாத நிலையில் பெண்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. எனவே, முஸ்லிம்களின் மிக முக்கிய தேவையாக இப்போது கல்வி இருக்கின்றது. அதனை கொண்டு அரசியல் அறிவையும் உலக அறிவையும் மார்க்க அறிவையும் அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இன்றைக்கு உள்ள முஸ்லிம்களிடத்தில் மார்க்கமும் இல்லை. கல்வியும் இல்லை.
விடியல்: மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
சர்தாஜ்: சில அரசியல்வாதிகள் தங்கள் பொறுப்புகளை மறந்து வார்த்தைகளை கொட்டுகிறார்கள். இதனால்,அவர்களுக்கு அரசியல் லாபம் கிடைக்கலாம். என்னைப் பொறுத்தவரை இன்றைக்கும் வேற்றுமையில் ஒற்றுனை என்ற சிந்தனையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கோடான கோடி இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதர மனப்பான்மையோடுதான் பழகிக் கொண்டு இருக்கிறார்கள். தீவிர மதவாத போக்கை மேற்கொள்ளும் அரசியல்வாதிகள்தான் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள். இதில் அப்பாவிகள் பலியாக அரசியல்வாதிகள் பயனடைகின்றனர். இதில் எனது தந்தையின் மரணம் இறுதியாக இருக்கட்டும் என்பதே எனது ஆசை.
பேட்டி: நியாஸ், பதிவு : அஹமது நவவி
நன்றி: முகநூல் முஸ்லிம் மீடியா
No comments:
Post a Comment