கூண்டிலடைபட்ட பஞ்சவர்ணக்கிளிக்கு, பழமுதிர்சோலை, பசும்புற்றரைக் கடுத்த பரிமளச்சாலை, பழைய கட்டடத்தின் சாளரம், தளிர், பூ, செங்கனி, ஆகியவற்றின்மீது தானே கருத்து இருக்கும்! சிறகை அடித்தடித்து கூண்டுக்குள் பறந்துவிழும் தத்தை நித்தநித்தம் தான் பிடிபடுமுன் குலவிய இன்பக்காட்சிகளைக் காணவேண்டுமே என்பதை எண்ணியே எங்கும் கொவ்வைக் கனியும் சுவைமிகு பண்டமும் தந்து, பாவையர் அதனெதிர் நின்று முல்லைச்சிரிப்புடன் கொஞ்சிடினும், கிளியின் கருத்து அந்தக்காட்சியிலே இலயிக்காது, பழய நினைவுகொண்டு பதறும், துடிக்கும், விடுதலை என்றோ என்று ஏங்கும். துஷ்டமிருகங்களோ கூட்டிலடைபடினும், காட்டிலே உலவிக்கண்டபடி போரிட்டு, இரத்தத்தைக்குடித்து வெறி பிடித்தாடியதை எண்ணியும், எதிரே தோன்றுவோர்மீது பாய்வதற்கின்றி பாழான இரும்புக்கம்பிகள் தடை செய்கின்றனவே என்று கலங்கியும் பற்களைக்காட்டி வாலைச்சுழற்றி அடித்து, வளைந்தும் நிமிர்ந்தும் ஓடியும் உலவியும், தமது குரூரகுணத்தையே காட்டும். தையலர் மகிழ்ந்திடும் தத்தையும், மானிடர் மருண்டிடும் கொடுமை செய்யும் துஷ்டமிருகங்களும் இங்ஙனம் கூண்டிலடைபட்டபோது இருக்கும். நரியின் நிலை எனில்! கூண்டிலிருக்கையில் தந்திரத்தால், வஞ்சணையால், தான் வலிவுள்ள மிருகங்களையும் ஏய்த்து பாடுபடாது ருசியுள்ள இறைச்சியை உண்டு மகிழ்ந்ததை எண்ணி ஏக்கமுற்று, சூதும் பசியும் சுடர்விடும் கண்களுடன், பரமசாதுபோல் பாசாங்கு செய்து கொண்டு, “என்னை ஏனோ வீணாகச் சிறையிலேயிட்டீர்கள். நான் என்ன கொடுமை செய்யவல்லேன். எளியேனைச் சற்றே வெளியே விடுமின்” என்று கெஞ்சுவதுபோல், கூண்டுக்கு வெளியே நிற்போரை நோக்குவதைக் காணக்கூடும். சிறையிலே அடைபட்ட மிருகங்களின் சிந்தனையும் செயலும் இருக்கட்டும், மனிதர்களின் நினைப்பும் நடவடிக்கையும் எப்படி இருந்திருக்கும்.
அமாவாசை! சிறுதூறலும் பெய்கிறது! அந்த நேரத்திலே, சிறையிலே இருக்கும் கருப்புக்குல்லாவின் கவனம், தோட்டத்தில் புகுந்து, தூறல் சந்தடியோடு கலந்து சுவரேறிக் குதித்து, கன்னமிடும் செயலிலேதானே போகும்! முடிச்சவிழ்ப்பவனோ, தூறல் வந்து விட்டதால் துரிதமாக நடந்து வீடு செல்வோமென்று செல்வோரைப் பின்தொடர்ந்து மெல்ல மோதி, முடிச்சை அவிழ்க்க இது சரியான சமயம் என்ற எண்ணமே கொள்வர். கியற்கைதிகளோவெனில், “அடுத்த ஆறாம் மாதம் விடுதலை, அதற்கடுத்த ஆறாம் மாதம் ஜில்லாபோர்டு மெம்பர்ஸ்தானம் நமக்குத்தான் கிடைக்கும்” என்ற மனப்பால் குடிப்பர்! மாஜி மந்திரிகள், மீண்டும் மந்திரிகளாகும் மார்க்கம் வகுப்பர்! மாசு நீக்கிக்கொள்ள மக்களிடமிருந்து தலைமறைவாகச் சின்னாட்கள் இருந்துவிட்டால், மீண்டும் புகழுடன் விளங்கலாம் என்று எண்ணுபவருண்டு. இந்த ஆறுமாத காலத்திலே, இன்னின்னாரைப் பிடித்து இத்தனை இத்தனை “கண்டிராக்டுகளை” எடுத்துப் பணம் திரட்டிவிட்டிருப்போமே, அது கெட்டுவிட்டதே என்று மனக்குறைபட்ட மகானுபவர்கள் எனக்குத் தெரியும். மருந்துக் கடை நிலைமை, மளிகைக்கடை நிலைமை, புத்தக வியாபார நிலைமை, புதுக்கம்பெனி நிலைமை முதலிய வற்றினைப்பற்றியே எண்ணிக்கொண்டு, பாரதமாதா, சுயராச்யம், காங்கிரஸ், முதலியவற்றைப்பற்றியும் எண்ணாதிருந்த எத்தனையோ காங்கிரஸ் சிறைபுகுந்தோரைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சிலர், சிறைச்சாலையைப், படிப்பகமாக்கியுள்ளனர். ஆச்சாரியார், இராமாயணத்தைப் படித்துப்படித்து ரசித்தது அங்கு தான். பெரியார் ஜஸ்டிஸ் கட்சிக்குத் தமது வேலைத்திட்டத்தைத் தயாரித்தது சிறைச்சாலையிலேதான். புதிய பாஷைபயில, புதிய புத்தகம் படிக்க, புது உறவுகொள்ள, புதுப்பழக்கம்பெற, பலருக்குச் சிறைச்சாலை, ஆரம்பப்பள்ளியாக இருந்திருக்கிறது. சிறைச் சாலையிலே இருந்து, உலகுக்கு நன்மையும், நம்மவர் உள்ளத்திற்கு மகிழ்ச்சியும் தரும் உன்னதமான காரியத்தை ஒருவீர இஸ்லாமியத் தோழர் செய்தது பற்றிய சிறு குறிப்பை முஸ்லீம்லீகின் ஆங்கில வாரத்தாளாகிய டான் பத்திரிகையிலே நான் படித்துப் பரமானந்தமடைந்தேன். நீங்களும் மகிழ்வீர்கள் என்றே அதனையும் அது எழுப்பும் எண்ணங்களையும் உங்களுக்குக் கூறுகிறேன்.
டேராடன் சிறை, 22-8-1941.
அன்புள்ள அட்லி அவர்களே!
இத்துடன் இணைத்துள்ள கடிதத்தைத் தாங்கள் படித்துவிட்டு, சர்வதேச சமதர்ம சங்கத் தலைவரும், பெல்ஜிய நாட்டுப் பிரமுகரும், தற்போது பிரிட்டனில் உள்ளவருமான தோழர் காமிலி ஹ்யூஸ்மான்ஸ் அவர்களிடம் சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பிரிட்டிஷ் சர்க்கார், மிஸ்டர் அமெரி, ஜனாப் ஜின்னா ஆகியவர்களின் நிலைமையை உள்ளபடி தெளிவாக்க இதனைத் தெரிவிக்கிறேன். இந்தியாவிலுள்ள தனித்தனி பிரதேசங்களும் தத்தமக்கு ஏற்றதான அரசியல் அமைப்பை ஏற்படுத்திக்கொள்ள அனுமதிப்பதே, இந்தியப் பிரச்சனையைத் தீர்க்கும் வழியாகும்.
இங்ஙனம்
மகமத் அப்துஸ் சத்தார் கெயிரி
1941ஆம் ஆண்டு, ஆகஸ்ட்டு மாதம் 22ந் தேதி டேராடன் சிறைச்சாலையிலே, மேற்படி கடிதத்தை எழுதினார் ஜனாப் மகமத் அப்துஸ் சத்தார். அவர் பேராசிரியர், பலநாட்டு மனவளமறிந்தவர், சமதர்மி. எம்.ஏ. பிஎச்.டி, பட்டம் பெற்றவர், ஐரோப்பாவுக்குச் சென்றிருந்து நேரடியாக அம்மக்களின் நினைப்பையும், நிலைமை யையும் கண்டறிந்தவர். சமதர்மத்தின் பொருட்டே சிறைபுகுந்தவர். சிந்தனையைச் சிறைச்சாலை என்ன செய்யும்? இரும்புக் கம்பிகள், இருதயத்தை மாற்றிவிடாதன்றோ! சிறைப்பட்ட சிலர், வெளியே உள்ள மக்கள், விஷமப் பிரசாரமெனும் வெஞ்சிறையில் கிடந்துழலுவதுகண்ட உளம் வெதும்பி, இக்கடிதத்தை விடுத்தார்.
ஜனாப் ஜின்னா பேசும் பாகிஸ்தான், ஓர் பிரிட்டிஷ் சிருஷ்டி! என்று ஆச்சாரியார் உள்பட காங்கிரஸ் வாதிகள் அனைவரும் கர்ஜனை புரிகின்றனர். பத்திரிகைகளோ, இந்த விஷமத்தனமான பொய்யை, அலங்காரத்தோடு வெளியிட்டு, ஆணவத்தோடு ஆர்ப்பரிக்கின்றன. பாமர மக்களோ, பாகிஸ்தான் பிரிட்டிஷ் சூழ்ச்சிதான் போலும் என்று கருதி மனம் புழுங்குகின்றனர். ஜனாப் ஜின்னாவை, நாக்கைப் பறையாக்கி நடமாடும் பேர்வழிகள் தூற்றுகின்றனர். இத்தகைய இரைச்சல் வெளியே! உள்ளே, சிறையில் இருந்த ஜனாப் சத்தாருக்கு, இந்த இழிந்த பிரசாரம் எரிச்சலை உண்டாக்கிற்று. ஜனாப் ஜின்னாமீது வீண்பழி சுமத்துபவர்மீது கோபம் கொதித்தது. பிரிட்டிஷார் சிருஷ்டித்தது இந்தப் பாகிஸ்தான் திட்டம் என்ற பெரும் புளுகு பேசிடுவோரின் போக்கிரித்தனத்தைப் போக்க விரும்பினார். அதற்காகவே இரு கடிதங்கள் விடுத்தார். ஒன்று பெல்ஜிய நாட்டவரும் பிரபல சமதர்மியுமான காமிலி ஹ்யூமான்ஸ் என்பாருக்கு. மற்றொன்று, அந்தக் கடிதத்தை அவரிடம் சேர்க்குமாறு மிஸ்டர் சி.ஆர். அட்லி அவர்களைக் கேட்டுக்கொண்டு எழுதப்பட்டது. அட்லி அவர்களுக்கு அனுப்பிய கடிதமே நான் முதலில் குறிப்பிட்டது. அத்துடன் இணைக்கப் பட்டிருந்ததும், காமிலிக்குத் தரப்பட வேண்டுமென்று குறிக்கப் பட்டதுமான மற்றோர் கடிதத்தின் சாரத்தைக் கீழே காணவும்.
* * *
அன்பரே! ஹியூஸ்மான்ஸ்!
இருபத்துநான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தவோர் சம்பவத்தைத் தாங்கள் நினைவில் நிறுத்தியிருக்கிறீரோ யாதோ நானறியேன்.
கடந்த ஜெர்மன் சண்டையின்போது, சமாதானம் ஏற்படு மென்ற எண்ணம் எழுந்தபோது, சர்வதேச சமதர்மிகள் கூட்டம் ஸ்டாக்கோம் நகரிலே நடைபெற்றது. அது போது நீரே, அந்தச் சமதர்மிகள் கழகத்தின் பொதுக்காரியதரிசியாக இருந்தீர். 1917ம் ஆண்டு. செப்டம்பரோ அக்டோபரோ, நினைவில்லை. இந்திய நாட்டபிமானிகள் கழகத்தினரான இரு இந்தியர்கள், உம்மைக் கண்டு கலந்துரையாடினர். நீர், அவர்கள் பேச்சை அக்கறையுடன் கேட்டுவிட்டு, ""உமது கருத்தைத் தெளிவாக, எழுதிக்கொள்வது" என்றுரைத்தீர். சின்னாட்களுக்கெல்லாம், நீர் கேட்டபடியே, அவர்கள், இந்தியப் பிரச்னையைத் தீர்க்க வழி யாது என்பதுபற்றி எழுதித் தந்தனர்.
இந்தியாவை; முஸ்லீம் இந்தியா இந்து இந்தியா என்று இரண்டு அரசுகளாகப் பிரித்து அமைக்கவேண்டும் - என்பதே அவர்கள் எழுதித்தந்த திட்டம். தாங்கள் அதுபோது அந்தத் திட்டத் தைக்கண்டு ஆச்சரியமுற்றீர். நினைவிற்கு வரும் என்று நம்புகிறேன்.
இந்தியாவைப் பிரித்து வைத்து ஆளவேண்டும் என்ற சூட்சிகரமான கருத்தோடு, பாகிஸ்தான் திட்டத்தைப் பிரிட்டிஷார், ஜனாப் ஜின்னாவுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்று இங்கு பேசப்பட்டு வருகிறது, இது ஓர் அபாண்டம், பெரும் புளுகு!
இதனைத் தாங்கள் விளக்கிவிட்டால், வீணாக வளர்ந்துள்ள ஒரு தப்பபிப்பிராயம் அகற்றப்பட்டுவிடும்.
இங்ஙனம்
அப்துஸ் சத்தார்
இந்தக் கடிதத்தை மிஸ்டர் அட்லி படித்துவிட்டு, தோழர் காமிலிக்கு அனுப்பிவிட்டு, கீழ்க்காணும் கடிதத்தை ஜனாப் அப்துஸ் சத்தாருக்கும் அனுப்பினார்.
11 டவுனிங் தெரு
ஒயிட்ஹால்
5-1-1942
அன்புள்ள பேராசிரியர் கெயிரி அவர்களே!
தோழர் காமிலி ஹ்யூஸ்மான்ஸ், தங்களுக்கும் தங்கள் சகோதரருக்கும் அனுப்புமாறு இக்கடிதத்தை எனக்கு அனுப்பியுள்ளார். பெற்றுக்கொள்க.
இங்ஙனம்
சி.ஆர். அட்லி.
* * *
மிஸ்டர் அட்லிமூலம், ஜனாப் அப்துஸ் சத்தாரிக்கு தோழர் காமிலி அனுப்பிய கடிதம் இதோ, காணவும்.
லண்டன்
5, ஹொபார்ட்பிளேஸ்
30-12-1941.
எனதருமை மந்திரியாரே,
இந்தியப் பிரதிநிதிகள் இருவர் விடுத்த கடிதத்தை எனக்கு அனுப்பினமைக்கு வந்தனம். அவர்கள் இருவரும், என்னைச் சந்தித்துப்பேசியது எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. பிரன்ச்சு மொழியில் நான், அவர்கள் குறிப்பிடும் ஸ்டாக்கோம் மாநாடு பற்றி எழுதியுள்ள புத்தகத்தில் 407-408ம் பக்கங்களில், அவர்கள் பேச்சு, திட்டம் ஆகியவற்றின் சுருக்கத்தைக் காணலாம்.
இந்தியாவை முஸ்லீம்நாடு. இந்து நாடு என்று இரு பிரிவுகளாக்க வேண்டும் என்றுதான் அவர்கள் திட்டத்திலே கண்டிருக்கிறார்கள். அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது உண்மையே.
நான் அந்தத் திட்டத்தைக்கண்டு ஆச்சரியமடைந்ததாக அவர்களுக்குத் தோன்றிற்று, ஆனால் நான் ஆச்சரியமடையவில்லை. நான், இந்தப் பிரச்னை, ஐரோப்பாவில் காணப்படும் சில பிரச்னையோடு, ஒப்பாக இருப்பதைக்கண்டு மட்டுமே ஆச்சரியமுற்றேன்.
அவர்களின் அறிக்கையைக் கண்டால்போதும், பாகிஸ்தான் பிரிட்டிஷ் சிருஷ்டி அல்ல என்பதைத் தெரிந்துகொள்ள. இந்த என் அறிக்கை, வீணாக வளர்ந்துள்ள தப்பெண்ணத்தைப் போக்குமென்று நம்புகிறேன்.
இந்தக் கடிதத்தை என் வாழ்த்துடன், அன்பருக்கு அனுப்பவும்.
இங்ஙனம்,
காமிலி ஹ்யூஸ்மான்ஸ்.
இருபத்திநாலாண்டுகளுக்கு முன்பு, அலைகடல்கள் தாண்டி, ஐரோப்பாக்கண்டத்திலே, அறிஞர்கள் முன்னிலையில், பாகிஸ்தான் திட்டத்தைப் பிரேரபித்த இரு முஸ்லீம் வீரர்களில் ஒருவர்தான், ஜனாப் ஜின்னாவின்மீது காங்கிரசார் சுமத்தும் வீண்பழியைக்கண்டு மனம் துடித்து, உண்மை வெளிவரட்டும் என்பதற்காக, மிஸ்டர் அட்லிக்கும் காமிலி ஹ்யூஸ்மான்சுக்கும் கடிதமெழுதினார். ஸ்டாக்கோமில் சர்வதேச சமதர்மிகள் மாநாட்டில் 1917ல் பிரேரேபிக்கப்பட்ட பாகிஸ்தானை இன்னமும் எதிர்க்கவும், அது பிரிட்டிஷ் சூழ்ச்சி என்றுரைக்கவும் முன்வரும் மரமண்டைகளுக்கு இந்தச் செய்தியை, மெள்ள மெள்ளவாகிலும் விளக்கிக் கூறுங்கள் தோழர்களே! யாரோ ஒரு சாயபு, கொரானிலே பாகிஸ்தானுக்கு ஆதாரம் இல்லை என்றுரைத்தாராம், அவருக்குக் கூறுங்கள், அவரைவிட தெளிவாக கொரானைப்படித்து, இஸ்லாத்தையும் உணர்ந்து முஸ்லீம் இன முன்னேற்றத்திலே அக்கரையுங் கொண்ட அறிஞர்கள் கூறும் ஆதாரம், பாகிஸ்தான், என்பதை!
இருவிழிகளும் கெட்டு, இஸ்லாமியரின் எழில் குன்றிவிட்டதே என்பதனால் மனஅமைதியுங்கெட்டு, பட்டுவரும் மரம்போல் இருந்த ஷா ஆலம், அதற்கு முன்பிருந்த அவரது மூதாதையர், முடிதரித்துச் ஜொலித்ததை எண்ணி, ""எவ்வளவு உச்சியில் இருந்தது பிறைக்கொடி! எவ்வளவு கீழே தாழ்ந்துவிட்டது இன்று" என்று ஏங்கி, தூங்குகையில் கனவுகண்டு கலங்கியிருப்பாரன்றோ. அதுபோல், ஷா ஆலமும் இன்றில்லை, ஆளும் இடமே இல்லையே என்று இன்று எட்டுக்கோடிக்கு மேற்பட்ட இஸ்லாமியத் தோழர்கள் ஏங்கித் தவிக்கின்றனர். இதனை அறியாது, பாகிஸ்தான் திட்டத்தை எதிர்ப்பது பேதைமை, பாதகம், அறிவீனம், ஆணவம்! இந்தக் கெட்ட குணங்களின் கூட்டுச் சரக்கு வெகுவிரைவிலே குப்பைக் கூடைக்குச் சென்றே தீரும், இதிலே சந்தேகம் வேண்டாம். இந்துக்கள் வேறு, முஸ்லீம்கள் வேறு என்ற கருத்தே காந்தியாருக்குக் கசக்கிறதாம்! இருவரும் ஒரே இனமாம்! உண்மையிலேயே இக்கருத்து, காந்தியாருக்கு இருக்குமேயானால், அவரது முதல் புதல்வன் ஹீராலால் காந்தி, இஸ்லாம் புகுந்தபோது, ஏன் அவ்வளவு கொதித்தார், குதித்தார், குளறினார்! இஸ்லாமியரானதும், ஏன் காந்தியார், காயவேண்டும். இஸ்லாமியர்மீது எவ்வளவு துவேஷமும், வெறுப்பும், கோபமும் இருந்தால், தன் மகன், முஸ்லீம் மார்க்கத்தைத் தழுவியதும் காந்தியார் தத்தோம் என்றாடி, தகாது, கூடாது என்று எதிர்த்திருப்பார் என்பதை எண்ணிப் பாருங்கள். இந்துவும் முஸ்லீமும் ஒரே இனமானால், ஏன், வட நாடு, இந்து முஸ்லீம் கலக இரணகளமாக இருக்கிறது? ஏன் இன்றும், இந்து உணவுச்சாலைகளிலே முஸ்லீம் வடநாட்டிலே நுழைய முடிவதில்லை? ஏன் இன்றுவரை, ரயில்வே நிலையங்களிலே, இந்துசாயா (டீ) முஸ்லீம்சாயா (டீ) என்று தனித்தனியாக விற்கப்படுகிறது! இந்துப்பானி (தண்ணீர்) முஸ்லீம் பானி (தண்ணீர்) என்று ஏன் தண்ணீர் தருவதிலேகூடப் பேதம் காட்டப்படுகிறது? இந்தக் ""கண்கண்ட கடவுள்" ""அரையாடை அண்ணல்" ""அந்தராத்மாவின் அன்பர்" ""முனிபுங்கவர்" வாழும் வார்தாவிலேகூட இந்த வக்கிர புத்தி காட்டுகிறார்களளே, அது ஏன்? இவர்களைக் கேட்டால், பதில்கூற வக்கு இல்லை! அத்தகைய அதிகாரம் பெற்றுள்ள காந்தியார், ஏன் இந்தப் பேதத்தைப் போக்க முன்வரவில்லை. கையாலாக வில்லையா! கருத்து இல்லையா! ஏனய்யா, என்னால் இந்து முஸ்லீம் ஒற்றுமையை ஏற்படுத்தமுடிய வில்லை என்று இருகையை விரித்துக் கூறிவிட்டவர், இன்னமும், இந்து வேறு முஸ்லீம் வேறு அல்ல என்று சொல்கிறார், இது பொருந்துமா என்றுதான் கேட்கிறேன். இந்துவும் முஸ்லீமும் ஒன்றாக வாழவேண்டும் என்பதற்காக அக்பர் எவ்வளவோ அரும்பாடு பட்டார். ரஜபுத்திர ரமணிகளை மணஞ்செய்து கொண்டது மட்டுமல்ல. ரஜபுத்திர வீரர்களுக்குத் தர்பாரில், பலப்பல பொறுப்பான பதவிகள் தந்தார், படைத்தலைவர்களாக்கினார். கண்டபலன் என்ன? மொகலாய மன்னர்கள் சற்றுச் சோர்ந்து களைத்து உட்கார்ந்தால் போதும். இந்து சிற்றரசர்களும், சீமான்களும், மதாசிரியர்களும் கிளம்பி, கலகம் குழப்பம் விளைவித்து, மொகலாய அரசைக் கவிழ்க்கவே முயற்சித்து வந்தனர். இராமதாசர் என்ற பார்ப்பன குரு, சிவாஜி என்ற மராட்டிய மன்னரை மொகலாயர்மீது ஏவியது ஏன்? ஆங்கலி ஆட்சி ஏற்பட்டதும், இந்துக்கள் அந்த நிழலின்கீழ் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டத்தானே பாடுபட்டு வந்தார்கள் - வருகிறார்கள். இந்துக் கூட்டம், முஸ்லீம்களை எவ்வளவோ தூற்றிக்கொண்டு வருகிறதே, காந்தியார், ஒரு வார்த்தை இதைத் தடுக்கக் கூறினாரா! ஏன், பாமரரைப் பதைக்க வைக்கும் பாதகக் கூட்டத்தைக் காந்தியார் தட்டிக் கொடுக்கிறார். இவைகளைக் கேட்டால், கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. ஆகவேதான், இனி இத்தகைய ஆட்சியிலே இருக்கமுடியாது என்று முஸ்லீம்கள் கூறிவிட்டனர். ஏன் அதை எதிர்க்கிறார்கள்? எதிர்த்து இந்த ஏமாளிகள் காணப்போவதென்ன! இந்துக்கூட்டமோ, எண்ணாயிரம் பிளவு, ஏழாயிரம் இழிவுகளைத் தாங்கிக்கொண்டு பலப்பல வகுப்பு, வகுப்புக்குள் வகுப்பு, பல குலம், என்று சின்னாபின்னமாகி இருக்கிறது. இந்து மார்க்கமோ, இன்னதென்று வரையறுத்துக் கூறமுடியாத குப்பைமேடு! அதிலே நெளிகின்றன புராணங்கள் எனும் புழுக்கள்! இந்தக்கூட்டம், ஏகதெய்வம், ஒரே நபி, ஒரே கொரான் கொண்டு, மேட்டுப்பாளையத்திலே இருந்தாலும் மெக்காவில் இருந்தாலும் ஒரே ஒற்றுமையுடன் விளங்கும் வீரக் கூட்டமான இஸ்லாமியரையா எதிர்க்கமுடியும்! முயல் கூட்டங்கள் முகாமிட்டு புலிக்கூட்டத்தைப் போருக்கழைப்பதுபோன்றதன்றோ இது. நாட்டின் நிலைமையை நன்குணரின், இத்தகைய நினைப்புகளைக் கைவிட்டு, நாட்டிலே உள்ள வீரமரபினரின் விரோதத்தைக் கிளப்பாமல் ஆரியர் இருப்பர். இன்றும் ஏதோ தங்களின் சூதும் வாதும் சூழ்ச்சியும் செல்லுபடியாகும் என்று கருதினால் ஏமாற்றமே அடைவர். வீர இனங்களாகிய இஸ்லாமியரும் திராவிடரும் விழித்துக்கொண்டனர், இனி அவர்கள் இலட்சியத்தைப் பெறும்வரை ஓயமாட்டார்கள். கடல் அலையைக் கைத்தடி கொண்டு தாக்கியவர்கள் காங்கிரசார், தமது பத்திரிகைகளில் இனிச்செல்லாது உமது செல்லா சாத்திரங்கள்! விலகி நில்லுங்கள், விடுதலைப் போர் கிளம்பிவிட்டது! பந்திக்கு முந்துவீர், படை எனிலோ பயந்தோடுவீர், சூது செய்யவல்லீர், சூரர் எதிர்ப்படின் சுலோகமுரைக்க அறிவீரேயன்றி சூளுரைக்கவுமறியீர், ஏன் வீணில், நெருப்புடன் விளையாடுகிறீர், என்று நான் எச்சரிக்கிறேன்.
சிறைச்சாலையிலே இருந்து சீலர்கள் வெளியிட்ட உண்மை, பாகிஸ்தான் என்ற கருத்து 24 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தது என்பதை விளக்கிவிட்டது. இன்று அந்தப் போர்வீரன், 24 வயதுள்ள வாலிபன், வெளியே வருகிறான், வீறுகொண்டு! அவன் கண்டது என்னை? எங்கும் முஸ்லீம்களின் உணர்ச்சி! அந்த வீரவாலிபனைக் கைலாகு கொடுத்து வரவேற்று, ‘ஆற்றல் படைத்த தோளுடைய அருமை தோழா! அஞ்சாநெஞ்சு படைத்த குமாரா! பஞ்சாபும் சிந்தும், எல்லையும் வங்கமும், எங்கும் உனது எழிலாட்சி எழச்செய்வேன்," என்று ஜனாப் ஜின்னா கூறிவிட்டார்.
""இதோ காணீர் உமது ரட்சகனை! கேளீர் இவன் புகழை! இவன் கோரி கில்ஜி, லோடி, சையத், மொகல், ஆகிய நமது பரம்பரையிலு தித்தவன்! பாராளும் திறம்படைத்தவன்! படைக்கஞ்சான், பயங்கொள்ளான், பச்சை இரத்தம் பரிமாறவும் தயங்கமாட்டான். இந்தப் பாகிஸ்தான் வீரனுக்கு உமது வணக்கத்தைக் கூறுவீர்" என்று ஜனாப் ஜின்னா, முஸ்லீம்களுக்குக் கூறிவிட்டார். முஸ்லீம்களும், தமது கனவு நனவு ஆகும் காலம் பிறந்துவிட்டதென்று களித்து, தோள்கட்டி, கச்சையை வரிந்து கட்டிக்கிளம்பத் தயாராகிவிட்டனர்! ஆரியனே நீ தயாரா போருக்கு? முடியுமா உன்னால்! உன் சரிதத்திலே உண்டா, வீரத்துக்குச் சான்று. கிடையாது! முடியாது! எனவே, உன் நிலையை உணர்ந்து சற்றே விலகியிரும் பிள்ளாய் என்று ஆரியருக்கு நான் அறிவுறுத்துகிறேன். கேட்டால் பிழைப்பர், இல்லையேல் கெடுவர். இரண்டில் எது தேவையோ அதை அவர்கள் கேட்கட்டும்!
(திராவிடநாடு - 7.6.1942)
[][][]
No comments:
Post a Comment