Translate

Thursday, 25 September 2014

இந்த மாமனிதரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்..!



நீங்கள் ஒரு நாத்திகராக இருக்கலாம்; அல்லது கடவுள் நம்பிக்கையைப் பற்றி கவலைப்படாதவராக இருக்கலாம்; அல்லது இன்று இவ்வுலகில் நிலவும் பல மதக் கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றுபவராக இருக்கலாம்; நீங்கள் ஒரு பொதுவுடைமைவாதியாகவோ, ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரக் கொள்கையில் ஆர்வமுடையவராகவோ விளங்கலாம்; நீங்கள் யாராக இருந்தாலும் சரி, உங்களது மதம் மற்றும் அரசியல் கொள்கை எதுவாக இருப்பினும் சரி, உங்களது தனிப்பட்ட மற்றும் சமூக பழக்க வழக்கங்கள் எப்படி இருந்தாலும் சரியே, நீங்கள் அவசியம்..


இந்த மாமனிதரைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்..!


இந்த மாமனிதரைப் பற்றித் தான் பிரித்தானியக் கலைக்களஞ்சியம் (Encyclopedia Britannica), “மதத் தலைவர்கள் அனைவரிலும் தலை சிறந்த வெற்றியாளர்..!” என்று புகழ்கிறது.




[][][]



உலகப் புகழ் வாய்ந்த அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா, http://en.wikipedia.org/wiki/George_Bernard_Shaw  “அந்த மாமனிதர் இன்று நம்மிடையே இருப்பாரானால், இன்று மானிட நாகரீகத்தையே அழித்திட முனைந்திருக்கும் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பதில் வெற்றி கண்டிருப்பார்,,!’’ என்று இந்த மாமனிதரைப் போற்றுகிறார்.



உலகில் தோன்றிய மனிதர்கள் அனைவரையும் விட இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் ஒரு அறநெறியைப் போதித்தார்; ஓர் அரசை நிறுவினார்; ஒழுக்க மாண்புகளின் அடிப்படையில் ஒரு நாட்டை உருவாக்கினார்; எண்ணற்ற சமூக, அரசியல் மாற்றங்களுக்கு வித்தூன்றினார்; தாம் அறிவுறுத்திய கொள்கைகளை நடைமுறைப் படுத்த ஒரு வலுவான, நிலையான சமுதாயத்தை நிறுவினார்; மனித சிந்தனைகளையும், போக்கையும் புரட்சிமயமாக்கி புதிய சகாப்தத்தை உருவாக்கினார்.

அந்த மாமனிதர் தாம் முஹம்மது (ஸல்) அவர்கள்.!

ஆம்; அவர்கள் தாம் மிகக் குறுகிய காலமாகிய இருபத்திமூன்று ஆண்டுகளில் மாபெரும் சாதனைகளைப் புரிந்து பலரும் புகழும் பெருமை உடையவரானார்கள். அவர்கள் கி.பி. 571-ஆம் ஆண்டு அரேபியா நாட்டில் பிறந்தார்கள். தம்முடைய அறுபத்திமூன்று ஆண்டு வாழ்வு காலத்திற்குள் மக்கள் அனைவரையும் சிலைவணக்கத்தினின்றும் விடுவித்து ஒரே இறைவனை வணங்கும் உன்னத நிலைக்கு உயர்த்தினார்கள். சூது, மது, மாது ஆகியவற்றில் மூழ்கிக் கிடந்த அம்மக்களை அவற்றினின்றும் நீக்கிப் பண்பும் பக்தியும் உடையோராய் மாற்றினார்கள்; சட்டத்தையும் அரசையும் விரும்பாத அவர்களின் வாழ்வை, ஒழுங்கும் கட்டுப்பாடும் உடைய வாழ்வாக மாற்றினார்கள். இத்தகைய முழுமையான சமூக மாற்றத்தை உலக வரலாறு அதற்கு முன்பும் கண்டதில்லை; பின்பும் கண்டதில்லை.

நமது காலத்தின் தலை சிறந்த சரித்திர ஆசிரியர் ‘லாமார்டின்’ அவர்கள் மனித மேன்மையின் சிறப்பைக் குறித்து கூறுகிறார்;

“உயர்ந்த லட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி, ஆகிய இம் மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் ஒப்பிட எவருக்குத் தான் துணிச்சல் வரும்.?

புகழ்மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள்; அவர்கள் செய்ததெல்லாம் இவைத் தாம்.! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்து விட்ட உலகாதயக் கோட்டைகளைத் தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முஹம்மத் அவர்களோ போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள், அரசவம்சங்கள், ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றிக் கொள்ள வில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான உள்ளங்களையும் ஈர்த்தார்கள். வழிபாட்டுத் தளங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துக்களையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும், ஆன்மாக்களையும், ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களைப் பதித்தார்கள்.

வெற்றியின் போது அவர்கள் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத் தன்மை, தாம் ஏற்றுக் கொண்ட கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக் கொண்ட அவரது உயர் நோக்கம், ஆழ்ந்த விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டுமென்ற குறுகிய எண்ணம் கொள்ளாமல் உலகப் பற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவர்களின் முடிவில்லாதத் தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடன் அவர்கள் நடத்தி வந்த மெஞ்ஞான உரையாடல்கள், அவர்களின் மரணம், மரணத்திற்குப் பின்னரும் அவர்கள் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர்கள் ஓர் ஏமாற்றுக்காரர் என்றோ, மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிடவில்லை. மாறாக, சமயக்கொள்கை ஒன்றை நிலைநாட்டிட அவர்களுக்கிருந்த மனோ உறுதியைத் தான் பறை சாற்றுகின்றன.

அவர்களுடைய இந்த சமயக் கொள்கை இரண்டு அடிப்படைகளை கொண்டது. ஒன்று இறைவனின் ஒருமை; மற்றொன்று இறைவனின் ஸ்தூலப் பொருளற்றத் தன்மை; முந்தியது இறைவன் என்றால் என்னவென்று எடுத்துரைக்கின்றது. பிந்தியது இறைவன் என்னவாக இல்லையென்பதை தெரிவிக்கின்றது. ஒன்று தவறான கடவுள்களைத் தனது பலத்தால் தூக்கியெறிகின்றது; மற்றொன்று பிரச்சார துணையுடன் ஒரு புதியக் கருத்தை உருவாக்க விழைகின்றது.

தத்துவப் போதகர், சொற்பொழிவாளர், இறைத்தூதர், சட்டநிபுணர், மாபெரும் போர்வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப் பூர்வமான கொள்கைகள், நம்பிக்கைகளை நிலைநாட்டியவர்,  மாயைகள், கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கைவழி நாகரீகத்தை உருவாக்கியளித்த மாமேதை, ஒரே ஆன்மீக தலைமையில் இருபது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர் தான் முஹம்மத் அவர்கள்.!”

(Lamartine, Historie de la Turkquie, Paris, 1854, Vol II, pp 276-277) 




[][][]


“அவர் ஒரே நேரத்தில் சீசரும் போப்’பும் ஆவார்; ஆனால் அவர் போப்’பின் பகட்டுகள்,ஆடம்பரங்கள் ஏதுமில்லாத போப் ஆவார். சீசரின் பாதுகாப்புப் படைகள் ஏதுமில்லாத சீசர் ஆவார்.
தயார் நிலையிலுள்ள இராணுவமோ,நிலையான, நிர்ணயமான வருமானமோ இல்லாமல் (மக்களின் உள்ளங்களையும் பெரும் நிலப்பரப்பையும்) வெறும் இறைவனின் இசைவாணையை, தெய்வீக அனுமதியை மட்டுமே துணையாகக் கொண்டு ஆட்சி புரிந்ததாகக் கூறிக்கொள்ளும் உரிமை, மனித வரலாற்றில் எவராவது ஒருவருக்கு இருக்குமானால், அவர் முகம்மது நபி அவர்களே ஆவார்; ஏனெனில் ஆட்சியதிகாரம் செலுத்திடத் தேவையான கருவிகள், துணைச் சாதனங்கள் ஏதுமில்லாமலேயே (ஆன்மீக மற்றும் உலக) அதிகாரங்கள் அனைத்தையும் அவர் பெற்றிருந்தார்..!”

(By Bosworth Smith, Mohammad and Mohammadanism, London 1874, Page # 92)





[][][]


உலக மேதாவிகள் ஏதாவது ஒன்றிரண்டு துறைகளிலேயே உயர்ந்து நிற்கக் காண்கின்றோம். ஆனால் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் உன்னத நிலையில் வாழ்ந்து காட்டிய தனிப்பெரும் பெருமை அண்ணலாரையே சாரும். மேலும் அந்தத் தலைவர்களின் வாழ்வும் அறிவுரைகளும் காலப்போக்கில் மங்கி விட்டன. அவர்களுடைய பிறப்பும் வளர்ப்பும், வாழ்வும் வாக்கும், சொல்லும் செயலும் பற்றிய பல்வேறு கருத்துக்களும், கற்பனைகளும், புரட்டல்களும் நிலவுகின்றன. ஆகவே அவர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு இன்றைய மனிதன் தன் தனிப்பட்ட வாழ்வையும் கூட்டு வாழ்வையும் அமைத்திட இயலாதவனாய் திக்கற்று இருக்கின்றான்.

இந்த மாமனிதருடைய தனிப்பட்ட வாழ்வு, சமூக வாழ்வு, பொது வாழ்வு, அவர்களுடைய சொல், செயல் அனைத்தும் மிகவும் நுணுக்கமாக அவர்களுடைய தோழர்களால் குறிக்கப் பெற்றுள்ளன. அவை அணுவளவும் மாற்றமின்றி இன்றும் நமக்குக் கிடைக்கின்றன. இந்த மாமனிதர் குறித்துப் பாதுகாக்கப்பட்ட இவ்விவரங்கள் (வரலாற்றுக் குறிப்புகள்) உண்மையானவை; சரியானவை என்று அவர்களைப் பின்பற்றுபவர்கள் மட்டுமல்ல; விருப்பு, வெறுப்பற்ற நிலையில் விமர்சிப்பவர்களும், திறந்த மனத்துடன் ஆராயும் அறிஞர்களும் அவை சரியானவை தான் என்று சான்று பகர்கின்றனர்.

YOUNG INDIA-வில் முஹம்மது நபி அவர்களின் பண்பைக் குறித்து மகாத்மா காந்தி கூறுகிறார்;

“மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச் சிறந்த வாழ்க்கையைப் பற்றி அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்டபோது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன் எப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மைப் பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்துக் கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக்காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன.எல்லாத் தடைகளையும் வெற்றிக் கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தாம் காரணமே தவிர வாள்பலம் அல்ல.!”

(YOUNG INDIA, quoted in The Light, Lahore, for 16th September 1924, MAHATMA GANDHI.)






[][][]


“Heros And Hero worship” எனும் நூலில் வரலாற்று ஆசிரியர் தாமஸ் கார்லைல் வியக்கிறார்;

“சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது தனி முயற்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுகளுக்குள்ளேயே நாகரீகம் மிகுந்த-பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறு தான் அவரால் உருவாக்க முடிந்ததோ.!”


(Thomas Carlyle, Heros And Hero worship) 





[][][]


கொள்கையளவில் அவர்கள் தந்த தத்துவத்தைக் காண்போம்; மனித வரலாறு அறிந்த மத, சமூக, அரசியல் தத்துவங்கள் யாவுமே அவர்கள் தந்த கொள்கை(இஸ்லாம்)க்கு இணையாக அமையவில்லை. அது மதச் சார்பற்றக் கொள்கையாக இருந்தாலும் சரியே; அல்லது சமூகம், அரசியல் சார்ந்த கொள்கையாக இருந்தாலும் சரியே, விரைந்து மாறிவரும் இவ்வுலகில் ஏனைய கொள்கைகள் தம்முள் மாற்றம் கொள்கின்றன. ஆனால் அண்ணலாரின் வாழ்க்கைநெறி (இஸ்லாம்) மட்டுமே கடந்த ஆயிரத்திநானூறு ஆண்டுகளாக அணுவளவும் மாறவில்லை. அதுமட்டுமின்றி மனித சிந்தனை,செயல்களில் ஏற்பட்டு வரும் ஆக்கப்பூர்வமான, ஆரோக்கியமான மாற்றங்களில் இஸ்லாம் தன்னுடைய செல்வாக்கையும் சாயலையும் படியச் செய்யும் சக்திமிக்கதாய் உள்ளது.

இப்பொழுது அக்கொள்கைகள் செயலுருவில் மலர்வதைப் பார்ப்போம்; உலகில் தோன்றிய சிந்தனைச் சிற்பிகள் தம் தத்துவங்களைச் செயலாக்கி, அதன் பலனைத் தம் வாழ்நாளில் காணக் கொடுத்து வைக்கவில்லை. ஆனால் இம்மாமனிதர் தம் அருமையான தத்துவங்களை அறிவுறுத்தியதோடு அன்றி தம் வாழ்நாளிலேயே அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தினார்கள். அவர்களுடைய மரணத்தின் போது அவருடைய அறிவுரைகள் யாவும் நன்கு பயிற்சி பெற்ற பல்லாயிரக்கணக்கான மாந்தர் பின்பற்றக்கூடிய வாழ்க்கை நெறியாக மலர்ந்தன. அம்மனிதர்களில் ஒவ்வொருவரும் அன்னாருடைய அறிவுரைகளின் செயலுருவாகத் திகழ்ந்தனர். வேறு எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும், எந்த ஒரு அரசியல், சமூக, மத, திட்டமோ, தத்துவமோ, கோட்பாடோ இத்தகைய வியத்தகு முழுமையான சாதனையைக் கண்டதுண்டா.?

இஸ்லாத்தின் கொள்கைகளைப் பற்றி எட்வர்ட் கிப்பன் மற்றும் சைமன் ஓக்லே எழுதுகின்றனர்;

“‘ஓரிறைவனையும் இறைத்தூதர் முஹம்மதையும் நான் நம்புகிறேன்.!’ என்பது இஸ்லாத்தின் மிக எளிமையான, அடிப்படைக் கொள்கையாகும். இறைவனைப் பற்றிய அறிவார்ந்த சிந்தனையை எந்த சிலையாலும் குறைத்திட முடியாது. நபியின் மாண்புகள் மனிதப் பண்புகளுக்கு உகந்தது. அவருடைய வாழ்வும், வாக்கும் அவருடைய தோழர்களின் சமயமாக பரிணமித்தது.!”

(Edward Gibbon and Simon Ocklay, History of the Saracen Empire, London 1870, p 54)





[][][]


முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு மனிதரேயன்றி வேறல்லர். ஆனால், ஓர் உயர்ந்த குறிக்கோளுக்காக உழைத்த மனிதர். ஒரே இறைவனை வணங்குமாறு மனித குலத்தை அழைப்பதும், இறைகட்டளையின் அடிப்படையில் நேர்மையான, சத்திய வாழ்வை மேற்கொள்ள மக்களுக்கு கற்பிப்பதும் அவர்களின் புனித இலட்சியங்களாகும். அவர்கள் தம்மைத் தாமே ஓர் இறைத்தூதராக, இறையடிமையாக பிரகடனப் படுத்தினார்கள். அவர்களுடைய ஒவ்வொரு செயலும், நடவடிக்கையும் இதனை மெய்ப்பிக்கும் வகையிலேயே அமைந்திருந்தது.

இந்தியாவின் புகழ்பெற்ற பெண் கவிஞர் சரோஜினி நாயுடு, முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இஸ்லாத்தின் சமத்துவக் கொள்கையைப் பற்றி குறிப்பிடுகிறார்.

“ஜனநாயகத்தைப் போதித்து, செயல்படுத்திய முதல் மதம் இஸ்லாம். மஸ்ஜிதில் நாளொன்றுக்கு ஐவேளை பாங்கொலி எழும்போது தொழுகையாளர்கள் அனைவரும் ஆண்டி முதல் அரசன் வரை ஓரணியில் நின்று பணிந்து கூறுகின்றனர்; இறைவன் மட்டுமே மிக உயர்ந்தவன்; இஸ்லாத்தின் இந்த ஒருமைப்பாட்டை, மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே என நிருபிக்கும் பண்பைக் கண்டு நான் வியப்புறுகிறேன்..!’’

(Sarojini Naidu, Ideals of Islam, Wide speeches & writings, Madras, 1918, pp 169)




[][][]




புகழ்பெற்று வாழ்ந்தவர்களின் வாழ்வை ‘தெய்வீகமாக்கும்’ முயற்சியில் உலகம் என்றைக்கும் சளைத்ததில்லை. அவர்களின் இலட்சியமும் இதனால் கற்பனை கலந்த கதையாக மாறிவிடும். சரித்திரப் பூர்வமாகப் பார்க்கையில் முஹம்மது (ஸல்) அவர்களின் சாதனையில் பத்தில் ஒரு பங்கைக் கூட இவர்கள் சாதித்ததில்லை. இருப்பினும், முஹம்மது (ஸல்) அவர்கள் தம்மைக் கடவுள் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ, கடவுளின் மகன் என்றோ கூறிக்கொள்ளவில்லை. மாறாக, தாம் ஒரு சாதாரண மனிதர்; மாந்தர் அனைவரையும் சத்தியப் பாதையின்பால் அழைக்கவும், அவர்களுக்கு முழுமையான வாழ்வுநெறியின் முன்மாதிரியாக அமையவும் இறைவனால் நியமிக்கப்பட்ட ஒரு தூதர் என்றே அவர்கள் கூறினார்கள். 

மைக்கேல் ஹெஜ் ஹார்ட், மனிதகுல மேம்பாட்டிற்காக பங்காற்றிய சிறப்புக்குரியவர்களின் தொகுப்பை எழுதும்போது விவரிக்கிறார்;

‘’உலகின் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக முஹம்மதை நான் தெரிவு செய்தது, சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ்சார்ந்த மற்றும் சமயச் சார்பற்ற வட்டத்தில் உலகின் மாபெரும் வெற்றியை பெற்றவர், மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே..!’’

(M.H.Hart, The 100 ! A Ranging of the most influential persons in History, New York, 1978, PP.33)





[][][]


ஆயிரத்திநானூறு ஆண்டுகள் கழிந்த பின் இன்றும் அவர்களுடைய வாழ்வும் வாக்கும் குறைக்கப்படாமலும் கூட்டப்படாமலும் எந்தவித மாற்றமுமின்றி நமக்கு அப்படியே கிடைக்கின்றன. மனித சமுதாயத்தின் பெரும் பிரச்சனைகளை அப்போதனைகள் அன்று தீர்த்து வெற்றிக் கண்டதைப் போலவே, இன்றும் தீர்க்கும் வல்லமை வாய்ந்தவையாய் இருக்கின்றன. இதுவே வாய்மையாய் யாம் உலகிற்கு மொழியும் கூற்றாகும். வரலாற்றை ஆராயும் ஒவ்வொருக்கும் தென்படும் தவிர்க்க முடியாத முடிவும் அதுவாகும்.

அறிவும் ஆர்வமும் வாய்ந்த நீங்கள், செய்ய வேண்டியதெல்லாம் இவ்வளவுதான்; சற்று நிதானித்து, உங்களை நீங்களே வினவிக் கொள்ள வேண்டும். ‘இந்த கூற்றுக்கள்’ எல்லாம் உண்மைதானா.? இந்த அசாதாரணமான, புரட்சிகரமான சாதனைகள் உண்மையில் நடைபெற்றனவா.? அவை உண்மையாயிருப்பின் இம்மாமனிதரை நான் உள்ளபடி அறிந்திருக்கின்றேனா.?’ என்று. 

இன்று வரையிலும் நீங்கள் அவர்களை அறிந்துக் கொள்ளவில்லை என்றால், இனியும் நேரத்தை வீணடிக்காமல் அவர்களைப் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள். அதற்கு உங்களுக்கு அதிக நேரமும் சக்தியும் தேவைப்படாது. அன்றியும், உங்களுடைய இந்தத் தூய முயற்சி உங்கள் வாழ்வில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கும் ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்து விடலாம்.!

வாருங்கள்.! வியக்கத்தக்க இம்மாமனிதருடைய வாழ்வைப் பயில நாம் முற்படுவோம். இவரைப் போன்ற எந்தவொரு மனிதரும் இம்மண்ணுலகில் வாழ்ந்ததேயில்லை. அவருடைய வாழ்வையும் முன்மாதிரியையும் பின்பற்றுவோமேயானால் நம் வாழ்விலும் பெரும் திருப்பம் ஏற்படும். உன்னதமிக்க ஒரு புத்துலகம் உருவாகும். 

இறைவன் அண்ணலார் மீது சாந்தி மழை பொழிவானாக..! 


(நன்றியுடன்.. World Assembly of Muslim Youth (WAMY), RIYADH. K.S.A. பரப்புரையின் மொழியாக்கம்.)


[][][]


No comments:

Post a Comment