Translate

Thursday 23 June 2016

இறை நம்பிக்கையுள்ளவர் வைத்தியம் பார்க்கலாமா.?

கேள்வி: 

[நபியே] நீர் கூறும்; "அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை. ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு. அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்." [திருக்குர்ஆன் 
10:49]

இப்படித்தானே உங்கள் அல்லாஹ் சொல்கிறான்.? பிறகு ஏன் உங்க தவணையை நீட்டிக்க விரும்புகிறீர்கள்.? ஏன் உங்கள் நோய்க்கு வைத்தியம் செய்கிறீர்கள்.? 


  =================================================


பதில்: 

ஒரு முஸ்லிமை பொறுத்தவரை உலக வாழ்க்கையில் அனைத்தும் சோதனை. பசியும், தாகமும், இதர உபாதைகளும், நோயும் இன்னபிற அனைத்தும் சோதனை. அருளப்படும் செல்வங்களும் சோதனை.. அதன் இன்பங்களும் சோதனை. இதன் மூலம் மனிதன் எவ்வாறு செயல்படுகிறான் என்பதை இறைவன் பார்க்கிறான். 
மனிதன் 
தன்னுடைய நன்மைக்காக எத்தனை  தான் முயன்றாலும் இறைவனது நாட்டத்தின் படியே  எதுவும் நடக்கும். அவனது வல்லமையை மனிதனுக்கு புரிய வைக்கவே இந்த இறை வசனம்.   


பசி வந்தால் இறைவனிடம் 'பிரார்த்தனை மட்டும் செய்.!' என்று இஸ்லாம் எங்கும் சொல்லவில்லை.. பிரார்த்தனையும் செய்ய வேண்டும். அது தொடர்பாக எடுக்கப்படும் முயற்சிகள் யாவும் பயன் தர.! அத்துடன், இறைவன் மீது நம்பிக்கை கொண்டு, நேர்மையான முறையில் உழைத்து பொருளை சம்பாதிக்க வேண்டும். அவ்வாறு தூய்மையான முறையில் பெறப்பட்ட அதனை பிறருக்கும் கொடுத்து நாமும் உண்ண வேண்டும் என்றே இஸ்லாம் பணிக்கிறது. 

தாகத்திற்கான தண்ணீரை பெற, படைத்த இறைவனை பிரார்த்தித்தால் மட்டும் போதாது.. அவன் கை-கால்கள் எனும் கருவிகளை உங்களுக்கு வழங்கியிருக்கிறான்.. பிரார்த்தித்தால் மட்டும் போதுமென்றால் எதற்காக அந்தக் கருவிகளை இறைவன் வழங்க வேண்டும்..?

கிணற்றை நோண்டு.. தண்ணீரை அவன் தருவான் என்பதே இஸ்லாமிய நம்பிக்கை. 

இந்த உலகின் நிலையாமையை மனதிலிருத்தி.. இந்த வாழ்க்கை ஒரு சோதனை என்பதை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப காரியங்களை ஆற்ற வேண்டும். அது தான் இஸ்லாம். 

திருக்குர்ஆன் 2:155:  'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள்,உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! 

திருக்குர்ஆன் 
2:156-157:    '(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.'

வாழ்க்கையில் எதிர்படும் எந்தவொரு சோதனையையும் இறை நம்பிக்கையுடன் நேர்கொண்டால் அது அவனுக்கான நன்மையாகவே அமையும் என்பதுவே இஸ்லாம். 

“சோதனைக்கு உள்ளான ஒருவர் இறைவன் இட்ட கட்டளைப்படி இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்) என்று கூறியபின் இறைவா, நான் படும் துன்பத்திற்கு கூலி வழங்குவாயாக, நான் இழந்ததை விட மேலானதைக் கொண்டு இதற்க்கு பகரம் வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்தால் அவருக்கு இறைவன் மேலானதை வழங்குவான்” (நூல்: முஸ்லிம்) 

“ஒரு அடியான் நோய்வாய்ப்பட்டு அவனை விசாரிக்க வருவோரிடம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பானாயின், இறைவன் “என் அடியான் மீது எனக்கு கடமை இருக்கிறது. அவனை நான் இறக்க வைப்பின் அவனை சொர்க்கத்தில் நுழைய வைப்பேன். அவனை நான் குணப்படுத்தினால் அவனுடைய சதையை விட சிறந்த சதையையும் அவனுடைய இரத்தத்தை விட சிறந்த இரத்தத்தையும் மாற்றி அவனுடைய தீமைகளை அவனை விட்டும் அப்புறப்படுத்தி விடுவேன்”என்று கூறுவான். (நூல் : முஅத்தா)

ஆகவே ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் நோய்வாய்படுவதும் ஒரு சோதனையே.அந்த சோதனையின் போது இறைநம்பிக்கையுடன் பொறுமை காப்பதும்.. அதற்குண்டான வைத்தியம் செய்வதும்.. நிவாரணத்திற்காக இறைவனை பிரார்த்திப்பதும் தான் இஸ்லாம் காட்டும் ஆன்மிகம்.

“மருத்துவம் செய்யுங்கள்! ஏனெனில் மரணம் என்ற நோயைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்தை உருவாக்கியுள்ளான்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)

“ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

“அல்லாஹ் நோயையும் அதற்குரிய மருந்தையும் உருவாக்கியுள்ளான். ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. எனவே நீங்கள் மருத்துவம் செய்யுங்கள்! ஆனால், இறைவனால் தடை செய்யப்ட்ட பொருளின் மூலம் மருந்துவம் செய்யாதீர்கள்! “என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அபூதாவூத்


[][][]

No comments:

Post a Comment