Translate

Saturday 12 March 2016

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர்








அறிமுகம்


1857ல் நடந்த சிப்பாய் புரட்சி இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக அந்த புரட்சியில் ஈடுபட்ட, தலைமை தாங்கியவர்களின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.

டில்லி செங்கோட்டையில் நடைபெற்ற இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான விசாரணை பற்றி 1948ஆம் ஆண்டு பண்டித ஜவஹர்லால் நேரு ஒரு புத்தகம் எழுதினார். “இதே செங்கோட்டையில் 90 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது குற்றவாளியாக நிறுத்தப்பட்டவர், இந்தியாவின் கடைசி மொகலாயச் சக்கரவர்த்தி” என்று அவர் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். 1857ம் ஆண்டு நடந்த சிப்பாய்ப் புரட்சிக்கு ஆதரவளித்ததாக அந்தச் சக்கரவர்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டது.

இப்படி இந்திய விடுதலைப்போரில் பெரும் பங்காற்றி அதன் காரணமாகவே தண்டிக்கப்பட்டு சிறைச்சாலையிலேயே மரணமடைந்த மாவீரன் பகதூர்ஷாவின் 150வது நினைவு ஆண்டில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

இவ்வருடத்தின் துவக்கத்தில் ஜனவரி மாத இதழில் 2012ம் ஆண்டை பேரரசர் பகதூர் ஷாவின் 150 நினைவு ஆண்டாக கொண்டாடுமா இந்திய அரசு.? என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 15 இந்தியாவின் சுதந்திர தினத்தை பேரரசர் பகதூர்ஷா வின் 150வது நினைவு ஆண்டு என்ற நினைவலைகளுடன் கொண்டாடப்பட வேண்டும் என்ற சிந்தனையுடன் அன்னாரின் வாழ்க்கையை ஆதாரங்களுடன் வரலாற்று ஆவணமாக பதிவு செய்கின்றோம்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை பேரரசர் பகதூர் ஷா ஜாஃபரின் வாழ்க்கையும், வரலாறும்:

“சூரியன் எங்கள் ஆட்சிப் பரப்பில் மறைவதே இல்லை” என்று இறுமாப்பு கொண்ட ஏகாதிபத்திய இங்கிலாந்தின் ஆட்சியையே இந்தியாவிலிருந்து வேரொடு சாய்த்து விட முனைந்தது 1857ல் பேரரசர் பகதூர் ஷாவால் தலைமையேற்று நடத்தப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர். ஆங்கிலேய ஆட்சியின் குரல்வளையை நெறித்து அதன் உயிர் தொண்டைக் குழிக்குள் அடைந்து திணறுமளவு எண்பத்தி இரண்டு வயது முதிய பேரரசர் பகதூர் ஷா அவர்கள் தாக்குதல் தொடுத்தார். இந்தியாவில் ஹிந்துக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும், மன்னர்களும் பேரரசர் பகதூர் ஷா அவர்களின் தலைமையில் கீழ் ஒன்றிணைந்து சுதந்திரப் போரில் பங்கெடுத்தனர்.

பேரரசர் அவர்களின் வாழ்க்கையையும், தேசத்திற்காக அவர் செய்த தியாகத்தையும் நினைவு கூற வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகன் மீதும் கடமையாகும்.

பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர் அவர்களின் பரம்பரையும், பிறப்பும்:

மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கானின் வம்சாவழியைக் கொண்ட தைமூர் (1370-1405) என்ற இஸ்லாமிய பேரரசர் மத்திய ஆசியாவையே தன் ஆட்சிப் பகுதியாக கொண்டு அரசாண்டவர்.

அவரின் சீர்மிகு வம்சத்தில் தோன்றிய பேரரசர் பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை இந்தியாவில் (1526-30) நிறுவினார். அத்தகைய பேரரசர்களை கொண்ட பெரும் வம்சத்தில், அக்டோபர் 24ம் நாள், 1775ல் அடிமை இருளை விரட்டும் பேரொளியாக பேரரசர் அபு ஜாஃபர் சிராஜுத்தீன் முஹம்மது பகதூர் ஷா ஜாஃபர் அவர்கள் பிறந்தார்கள். இவரது தந்தை இரண்டாவது அக்பர் ஷா மற்றும் தாய் இந்திய ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த லால்பாய் ஆவார்கள். எனவே இவரது பிறப்பு இந்திய மண்ணோடும், கலாச்சாரத்தோடும் பின்னிப் பிணைந்த ஒன்றாகும்.

இவர் கல்வி ஞானத்தில் சிறந்தவராகவும், பாரசீகம், உருது, அரபி, பஞ்சாபி மற்றும் பிராஜ் மொழிகளில் பாண்டித்தியம் பெற்று அம்மொழிகளில் பல நூற்களையும் எழுதியுள்ளார். மேலும் இவர் மாபெரும் கவிஞராகவும், பல்வேறு கவிதைகளையும் எழுதியுள்ளார் இன்றும் இவரது கஜல் தொகுப்புகளான கவிதை நூல்கள் மேதைகளால் போற்றிப் புகழப்படுகின்றன.

இவரது அரசவை கல்விமான்களாலும், கவிஞர்களாலும் நிரம்பியிருந்தது. அன்றைய பெருங் கவிகளான காலிப், ஜாக் போன்றவர்கள் அரசவையை அலங்கரித்தனர்.

இளமையும், வாழ்க்கை முறையும்:

இளமை காலங்களில் வேட்டையாடுதல் போன்ற வீர விளையாட்டுகளில் பெரும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். முதுமை காலங்களில் கூட இப்பழக்கத்தை விடாது கை கொண்டிருந்தார். இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். இதற்கென தன் அரண்மனையில் தனிப் பரிசோதனைக் கூடமே அமைத்திருந்தார்.

1857 புரட்சி முடிவுற்ற பின் ஆங்கிலேயர் இவரது அறையில் செல்வமிருக்கும் என்று கொள்ளையிட முற்பட்ட போது அங்கு கண்ணாடிக்குப்பிகளில் பதப்படுத்தப்பட்ட மூலிகைகளும், மருந்துகளும் தான் அவர்களை வரவேற்றன.

இவருக்கும் கட்டிட கலையின் மீதும் தனிக் காதலிருந்தது. இவர் கட்டிய ஜாஃபர் மஹால் போன்ற சிறந்த கலைநயமிக்க கட்டிடங்கள் இந்திய கட்டக் கலைக்கு பெருமை சேர்த்தன.

ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வமுடையவராகவும், சூஃபிகளின் ஆன்மீக வழிமுறையை பின்பற்றி உலக ஆடம்பரங்களில் இச்சையின்றி, எளிமையை கடைபிடிப்பவராகவும், இறைவனை நேசிப்பதில் பேரார்வம் கொண்டவராகவும் இருந்தார். இவ்வான்மீக பலன் தான் பின்னாளில் மாபெரும் ஆங்கிலேயே சாம்ராஜ்யத்தை எதிர்க்கும் துணிவை அவருக்கு தந்தது.

அரசவையில் ஏதேனும் முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் தனிமையிலிருந்து இறைவனை வழிபட்டு அவனிடம் பிரார்த்தித்து அவனது உதவியை கோருவார். பின்பு மனம் திருப்தியடைந்த பின்பே அரசில் முக்கிய முடிவுகளை அறிவிப்பார்.

இவர் உலகில் எந்தளவு பற்றற்று இருந்தார் எனில் 1857 புரட்சியின் தலைமை தேடி வந்து இந்தியாவின் அனைத்து மக்களும், செல்வமும் இவரின் தலைமையின் கீழ் வந்த சமயத்தில் இவர் இப்படி கூறினார்;

“அரியாசனத்தின் மீதோ, பணத்தின் மீதோ எனக்கு துளியும் காதலில்லை. நான் இவ்வுலகில் ஒரு ஃபக்கீரைப் போன்றவன்.

கல்வியின் தலைநகரம் தில்லி:

பேரரசர் பகதூர் ஷா ஆட்சியில் தில்லி கல்வியில் இந்தியாவின் தலைநகரமாக விளங்கியது. இந்தியர்களை குறித்து தவறாகவே எழுதும் கர்னல் வில்லியம்ஸ்மன் கூட இவ்வுண்மையை ஒப்புக்கொண்டு இப்படி உரைக்கின்றார்.

“முகமதியர்களை விட கல்வியில் பேரார்வம் கொண்டு விசாலமாக கற்கும் சமூகம் உலகில் சில மட்டுமே. நமது இளைஞர்கள் கல்லூரிகளில் கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளின் வாயிலாக இலக்கணம், பேச்சுத்திறமை மற்றும் தர்க்கக் கலைகளை கற்பது போல். இங்கு மாணவர்கள் அரபி மற்றும் பாரசீக மொழிகளில் இக்கலைகளை கற்கின்றனர்.

ஏழு வருடத்திற்கு பின்பு மதரஸா மாணவன் தான் கல்வி பயின்றதன் அடையாளமாக, மேற்கூறிய அனைத்துக் கலைகளையும் தலைக்குள் நிரப்பிய நிலையில் பட்டம் பெற்றதன் அடையாளமாக தலைப்பாகை அணிகிறான். இந்த இளம் ஆலிம் நமது ஆக்ஸ்போர்டு பல்கலை கழக மாணவனுக்கு இணையானவன். எல்லாவற்றையும் விட இவர்கள் கற்கும் கல்வி வாழ்க்கை முழுவதும் தேவைப்படும் ஒன்றாகும்.”

இப்படி எதிரிகள் கூட அன்றைய கல்வியின் மகிமையை உணர்ந்து போற்றுமளவு இருந்தது. இத்தகைய கல்விதான் ஆலிம்களை இந்தியாவெங்கும் சுற்றுப் பயணம் செய்து ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய மக்களை கிளர்ந்தெழச் செய்யத் தூண்டியது. இதன் விளைவை உணர்ந்ததால் தான் புரட்சிக்கு பின்பு வெள்ளையர்கள் மதரஸா பாடத்திட்டத்தையே திருத்தி அமைத்து அதனை உயிரோட்டமின்றி செய்தனர்.

1857ல் முகலாய அரசின் நிலை:

கி.பி. 1526ம் ஆண்டு பேரரசர் பாபர் முகலாய ஆட்சியை இந்தியாவில் தோற்றுவித்தது முதல் அவ்வரசு சிறிது சிறிதாக வளர்ச்சி கண்டு பேரரசர் அவுரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் வடமேற்கு மாகாணம், மத்திய இந்தியா வட மற்றும் தென்னிந்தியா என்று மாபெரும் நிலப்பரப்பை தன் ஆட்சிப்பகுதியாக கொண்டிருந்தது.

ஆங்கிலேயர் கிழக்காசியாவில் வாணிபம் செய்ய “கிழக்கிந்திய கம்பெனி” என்ற நிறுவனத்தை துவங்கி முகலாய பேரரசிடம் அனுமதி பெற்று வாணிபம் செய்து வந்தனர். ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் முகலாய பேரரசரை சந்திக்க வந்தால் தலைசாய்த்து மரியாதை செய்வது மரபாக இருந்தது. ஆங்கிலேயர் தம் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாணயம் அச்சடிக்கும் போது முகலாய பேரரசின் உருவத்தை பொறித்துத்தான் அச்சடித்தனர்.

ஆங்கிலேயர், தங்களின் நயவஞ்சக மற்றும் சூழ்ச்சிப் பண்பால், முஸ்லிம் நவாப்கள் மற்றும் பிற இந்திய சிறு அரசர்கள் மத்தியில் இருந்த கருத்து வேற்றுமைகள் மற்றும் முரண்பாடுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி ஒவ்வொரு ஆட்சியாளராக வீழ்த்தி தம் எல்லையை விரிவு படுத்தினர்.

இந்த நிலையில் 1765ஆம் ஆண்டு வங்காளத்தில் நடைபெற்ற (பக்கம் 3) போருக்கு பின்பு முகலாய அரசர் “ஷா ஆலம்” அவர்கள் ஆங்கிலேயருக்கு முதன் முறையாக அவர்களின் ஆட்சிப் பகுதியில் முகலாய அரசுக்கு கட்டுப்பட்டு வரி வசூலிக்கும் அதிகாரத்தை வழங்கினார்.

அதற்கு பின்பு அவர்கள் தாங்கள் பேரரசருக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதையே மறந்து சர்வதேச சட்டத்திற்கு எதிராக நயவஞ்சகத்தால் தம் எல்லையை விரிவுபடுத்தினர்.

அவுரங்கசீப் பின் மறைவுக்கு பிறகு தொடர்ச்சியான மராத்திய போர்களாலும், நவாப்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல்களாலும் பலவீனப்பட்டிருந்த முகலாய அரசு ஆங்கிலேயரின் நயவஞ்சகத்தையும், நவீன போர் முறையையும் எதிர்கொள்ள முடியாமல் தில்லிப் பேரரசு என்பது செங்கோட்டைக்குள்ளாக சுருக்கப்படடிருந்தது.

இச்சூழலில் தான் பேரரசின் இழந்த பெருமையை மீட்கும் முகமாகவும், இந்தியாவின் விடுதலைக்காகவும் முதல் சுதந்திரப் போரை வழி நடத்தினர்.

நீதியும், ஆட்சியும்:

பகதூர் ஷா அவர்கள் நீதியில் நிலைத்திருப்பவராகவும், மென்மையான இதயங்கொண்டவராகவும் இதே சமயம் அநீதியை காணும் பொழுது தன் சக்திக்குட்பட்டு அதனை தடுப்பவராகவும் இருந்தார். அநீதி இழைப்பது சொந்த மகனே என்றாலும் தண்டிக்க தவறியதில்லை.

1852ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பகதூர் ஷா அரசவையில் வழக்கொன்று சமர்ப்பிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் பேரரசரின் ஒன்பதாவது மகனான மிர்சா சிஜ்ரி சுல்தான் ஆவார். குற்றம் என்னவெனில் அவர் தன் மனைவியை அடித்தது.

கோபத்துடன் மகனை அழைத்து தன் மகன் என்றும் பாராமல் அரசவையில் வைத்து 2 அல்லது 3 முறை கடுமையாக அடித்தார். உடனே மிர்சா கிஜ்ரி மன்னரிடம் மன்னிப்புக் கோரி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு மீண்டும் அவ்வாறு நிகழாது என்று வாக்குறுதி அளித்த பின்பே மன்னர் அடிப்பதை நிறுத்தினார். பின்பு மகனை கடுமையாக எச்சரித்து மீண்டும் இவ்வாறு மனைவியிடம் கடுமையாக நடக்காது அவளுடன் நன்முறையில் இல்லறம் நடந்த ஆணையிட்டார்.

இப்படி பேரரசர் தன் மகனையே தண்டித்த பின்பு அவரது அரசில் எவருக்கேனும் பெண்களை துன்புறுத்த மனம் வருமா?

மத நல்லிணக்க நாயகன் பேரரசர் பகதூர் ஷா:

பேரரசர் பகதூர் ஷா அவர்கள் இந்தியாவின் அனைத்து மத,மொழி, இன மக்களையும் அரவணைத்துச் செல்பவராகவும், அவர்களின் பாதுகாவலராகவும் திகழ்ந்தார். இவரது மதநல்லிணக்கத்திற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக இச்சம்பவத்தை நினைவு கூறலாம்.

1857 ம் ஆண்டு பேரரசரின் தலைமையை ஏற்று 80,000த்திற்கும் அதிகமான சிப்பாய்கள், ஜிஹாதிகள் மற்றும் சிவிலியன் மக்கள் தில்லியில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வந்தனர்.

அச்சமயம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இஸ்லாமியரின் தியாகத்திருநாளான “ஈதுல் அல்ஹா” வரவிருந்தது. புரட்சிப் படையில் இஸ்லாமியரும், இந்துக்களும் கலந்து ஒற்றுமையுடன் போராடி வந்தனர்.

இந்துக்கள் பசுக்களை தெய்வமாக வணங்குபவர்கள். இஸ்லாமியர்கள் தியாகத்திருநாளில் படைத்த இறைவனுக்காக ஆடு, மாடு மற்றும் ஒட்டகங்களை பலி கொடுப்பார்கள். இந்நிலையில் தியாகத்திருநாளில் மாடுகள் பலி கொடுக்கப்பட்டால் அது ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்தும், மேலும் பொது எதிரியை எதிர்த்து ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடும் இச்சமயம் நமக்குள் வகுப்புக் கலவரம் மூண்டால் அது எதிரிகளுக்கு சாதகமாக அமைந்திடும் வாய்ப்புகள் இருந்தது.

அச்சமயம், சிலர் டெல்லி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பு பசுக்களை பலியிடப்போவதாகவும், அதனை தடுப்பவர்களை கொல்ல முனைவதாகவும் தகவல் பேரரசரை எட்டியது. மேலும், உயர் ஜாதி ஹிந்து சிப்பாய்கள் சிலர் மாட்டிறைச்சி வியாபாரம் செய்ததாக ஐந்து பேரை கொன்று விட்டனர் என்ற தகவலும் கிடைத்தது. இத்தகைய குழப்பமான சூழலில் பேரரசர் இப்படி ஒரு அரச உத்தரவைப் பிறப்பித்தார்.

“தில்லியில் மாடுகள் வெட்டப்படுவது மட்டுமல்ல, அவ்விறைச்சியை உண்பதையும் தடை செய்தார். தேச விடுதலைக்காக நாம் பேராடும் இவ்வேளையில் பிளவு ஏற்பட்டால் அது நம்மை பலவீனப்படுத்தி எதிரியை பலப்படுத்திடும் மேலும் இவ்வுத்தரவை எவரேனும் மீறுவார்கள் என்றால் அவர்கள் பீரங்கி முன்னால் நிறுத்தப்பட்டு சுடப்படுவார்கள். மேலும் இவ்வுத்தரவு 6 மணி நேரத்திற்குள் அமல்படுத்தப்படும்” என்றார்.

பல்லாயிரக்கணக்கான முஜாஹிதுகள் ஆயுதங்களோடு புரட்சிக்காக தில்லியில் குழுமியிருந்த போதும் தங்கள் சக போராளிகளான இந்துச் சிப்பாய்களின் மத உணர்வு புண்பட்டுவிடக்கூடாது என்று தங்களுடைய மத வழிபாட்டில் விட்டுக் கொடுத்துப் போனது இந்திய வரலாற்றில் அவர்களின் சகிப்புத்தன்மைக்கும், பேரரசர் பகதூர் ஷாவின் மத நல்லிணக்க ஆட்சிக்கும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகவும் தற்கால இந்துத்துவவாதிகளின் பொய் பிரச்சாரங்களை தவிடு பொடியாக்கும் விதமாகவும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

வகுப்பு கலவரம் ஏற்படும், அதனை பயன்படுத்தி நாம் போரில் வென்றுவிடலாம் என்று பகல் கனவு கண்ட ஆங்கிலேய போர்த் தளபதி தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் இப்படி குறிப்பிடுகின்றார்.

“நல்ல முரண்பாடு, முகமதியர்கள் தங்களின் நம்பிக்கைக்காக போராடுகிறார்கள். ஆனால் அவர்களின் தியாகத்திருநாளில் முகமதிய பேரரசரின் ஆட்சியில் ஒருவர் கூட பசு பலி கொடுக்க அனுமதிக்கப்படவில்லை”

திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட புரட்சி:

சிலர், குறிப்பாக இந்துத்துவ பின்னணி கொண்ட வரலாற்றாசிரியர்கள் முதல் இந்திய சுதந்திர எழுச்சி தானாக எழுந்த ஒன்றென்றும், இஸ்லாமிய ஆலிம்கள் எவரும் அதற்கு காரணமில்லை என்று வரலாற்றை திரிப்பது மட்டுமல்லாமல் பேரரசர் பகதூர் ஷாவிற்கோ அல்லது அவரின் குடும்பத்தினர்க்கோ அதில் பங்கில்லை என்கின்றனர்.

ஷா வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் காலம் தொட்டு, அவரால் தோற்றுவிக்கப்பட்ட “மதரஸா இரஹிமிய்யா” கல்விச் சாலையை வழிநடத்திய அவரின் மகன் அப்துல் அஜீஸ் (ரஹ்), அவரின் சீடர் செய்யது அஹ்மது ஷஹீது (ரஹ்), என்று தில்லியின் அறிஞர்கள் ஒரு நூற்றாண்டு காலமாகவே வெள்ளையருக்கு எதிராக மக்களை கிளர்ந்தெழ தூண்டினர்.

மேலும் 1857 புரட்சிக்கு முன்பாக ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே (1852) ஆலிம்கள் இந்தியாவெங்கும் மாறுவேடத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிக்கு வித்திட்டனர்.

இதனை மோப்பம் பிடித்த தில்லி ஆங்கிலேய காவல்துறை மற்றும் உளவாளிகள் ஆங்கிலேய தலைமை நீதிபதி திரு. மெட்கல்புக்கு அறிக்கை அனுப்பினர். அவ்வறிக்கையில் ஆலிம்கள் மற்றும் முஜாஹிதுகள் ஆகியோரின் இரகசிய பணிகள் குறித்தும், தில்லியில் அவர்கள் கூடும் இடங்கள் குறித்தும், இந்தியாவெங்கும் பிற புரட்சியாளர்ளுடன் அவர்களின் தொடர்புகள் குறித்தும் குறிப்பிட்டிருந்தது.

மேலும் இவர்களின் அறப்போருக்கு பொருளுதவிகள் செய்து வந்த தில்லியிலுள்ள பெரும் வணிகரான ஷேக் ஹுசைன் பக்ஷ் என்பவர் மீது புகார் அளித்தனர். இத்தகவலின் அடிப்படையில் வெள்யைர் அதிகாலை நேரங்களில் சந்தேகப்படும் இடங்களில் திடீர் சோதனையிட்டும் ஆயுதங்களை கைப்பற்றியும் ஆலிம்களையும் பிற முஜாஹிதுகளையும் கைது செய்தனர்.

மேலும் பேரரசர் பகதூர் ஷா அவர்களின் மகன்களான மிர்சா முகல், அபுபக்கர் மற்றும் கிஜிரி சுல்தான் ஆகியோர் புரட்சிக்கு முன்பே ஆங்கிலேய படையில் பணியாற்றும் இந்திய சிப்பாய்களுடன் தொடர்பேற்படுத்தி புரட்சிக்கு திட்டமளித்தனர்.

எனவே ஆலிம்கள், முஜாஹிதுகள், பேரரசர் பகதூர் ஷா அவர்களின் குடும்பத்தினர் புரட்சியை திட்டமிட்டு கட்டமைத்தது மட்டுமில்லாமல் அதற்கு குறிப்பிட்ட கால நேரத்தையும் குறித்திருந்தனர் என்பதே உண்மை.

இதனால் தான் புரட்சி தோற்கடிக்கப்பட்ட பின்பு ஆங்கிலேயர் பேரரசர் ஜாஃபர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளில் முதன்மையானது ஆங்கிலேய அரசை வீழ்த்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் ஆரம்பம் முதல் இரகசியமாக கடைபிடித்தனர் என்றும், அது ஆசியா முழுவதும் தொடர்பு கொண்டிருந்தது என்பதாகும்.

புரட்சிக்கு வித்திட்ட காரணங்கள்:

அ) ஆங்கிலேயர் இந்திய தேசத்திற்கு எதிரானவர்கள்:

இந்தியர்கள் ஆங்கிலேயரின் மதம் மற்றும் கலாச்சாரத்தை இறுதி வரை ஏற்றுக் கொள்ளவில்லை. அதே போல் 200 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் வாணிபம் மற்றும் ஆட்சி நிர்வாகம் நடத்திய போதும் ஆங்கிலேயர் இந்திய கலாச்சாரத்தோடு இணையவேயில்லை. அவர்கள் இந்தியரை அடிமைகளாகவே பாவித்தனர்.

முகலாயரும் அந்நிய தேசத்திலிருந்து வந்தவர்கள் தான். ஆனால் அவர்களின் வருகைக்கும் ஆங்கிலேயரின் வருகைக்கும் பெரிய வேறுபாடு உண்டு.

“முகலாயர்கள் இந்தியாவை ஆள்வதற்காக படையெடுத்து வந்தனர். பேரரசர் பாபர் தில்லியை ஆண்டு வந்த இப்ராஹீம் லோடியை வீழ்த்தி முகலாய ஆட்சியை நிறுவினார். ஆனால் ஆங்கிலேயர் வாணிபம் செய்வதற்காக இந்தியாவிற்குள் வந்து தம் நயவஞ்சகத்தனம் மற்றும் சூழ்ச்சியால் இந்தியாவை அடிமைப்படுத்தினர்.

முகலாயர்கள் மங்கோலிய வம்சத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் இந்தியாவிற்கு வருகை புரிந்த பின்பு இந்திய மண்ணோடும், கலாச்சாரத்தோடும் கலந்து போயினர். இந்திய பெண்களை திருமணம் செய்தும், இந்திய உணவு, உடை, பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொண்டனர். பேரரசர் பகதூர் ஷா அவர்களின் தாய் லால் பாய் கூட இந்திய ராஜ்புத் வம்சத்தை சேர்ந்தவர்கள்தான்.

இப்படி புதிய இந்திய தலைமுறை உருவாகியது. அது முழுக்க இந்திய தன்மை கொண்டதாகவும், இந்திய கலாச்சாரத்தோடு ஒத்துப் போகும் தன்மை கொண்டதாகவும் இருந்தது. இதனால் தான் இந்தியர் ஆங்கிலேயரை அந்நியராக எண்ணியது போல் முகலாயரை எண்ணவில்லை அதன் காரணமாகவே இந்துச் சிப்பாய்கள் மற்றும் அரசர்கள் 1857ல் இந்திய விடுதலைப் புரட்சிக்கு பேரரசர் பகதூர் ஷாவை தங்களின் புரட்சிப் போராட்டத்திற்கு தலைவராக மனமுவந்து ஏற்றனர்.

இது தான் அன்றைய உண்மை நிலை. ஆனால், இன்று இந்துத்துவ பாசிச இயக்கங்கள் ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை குலைக்கும் விதமாக முகலாயரை மட்டுமின்றி முகமதியர் அனைவரையுமே அந்நியர் போல் வரலாற்றைத் திரித்துக் கூறுகின்றனர். ஆனால் இவர்களின் மூதாதையர்கள் பேரரசர் பகதூர் ஷாவை தங்களின் தலைமையாக ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் அவரின் கட்டளைக்கு கீழ்படிந்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டனர்.

ஆ. அரசியல் காரணங்கள்

டல்ஹௌசி பிரபுவால் கொண்டு வரப்பட்ட “நாடு இழக்கும் கொள்கை” இந்திய அரசர்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. வாரிசின்றி மரணிக்கும் மன்னனின் நாட்டை ஆங்கிலேயர் பிடுங்கிக் கொண்டனர்.

இராணுவத்தில் ஆங்கிலேய, இந்திய சிப்பாய் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பாரபட்சம் காட்டப்பட்டது. இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட உயர் பதவி சுபேதார் ஆகும். அந்த உயர்ந்த பதவிக்கு வழங்கப்ட்ட ஊதியம் புதிதாக படையில் சேர்ந்த ஆங்கிலச் சிப்õபாயின் ஊதியத்தை விடக் குறைவாக இருந்தது.

1856ம் ஆண்டு லார்டு கானிங் “பொதுப் பணிப்படைச் சட்டம்” அமல்டுத்தினார் தேவைப்பட்டால் இந்திய சிப்பாய்கள் கடல் கடந்து சென்று போரில் ஈடுபட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. இச்சட்டம் மேலும் 1857ம் ஆண்டு புதிய ரக என்ஃபீல்டு துப்பாக்கிகளுக்கு கொழுப்பு தடவிய புதிய தோட்டாக்கள் சிப்பாய்களுக்கு வழங்கப்பட்டது.

பொதுவாகவே கடினமான கொழுப்புகள் பன்றி அல்லது பசுவின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்டுவதால் அதனை பற்களால் கடித்து தோட்டாவின் மேலுறையை அப்புறப்படுத்த ஆங்கிலேயத் தளபதிகள் ஆணையிட்டதற்கு கீழ்ப்படிய இந்தியச் சிப்பாய்கள் மறுத்துவிட்டனர். அது தங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானதாக கருதினர்.

புரட்சி எரிமலை வெடிக்கின்றது

1857ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் மீரட்டின் 3ம் காலாட் படைப் பிரிவு கொழுப்பு தடவிய தோட்டாக்களை பயன்படுத்த மாட்டோம் என்று மறுத்துவிட்டது. எனவே அப்படைப்பிரிவின் சிப்பாய்களை கைது செய்து ‘மே’ ஒன்பதாம் தேதி கட்டளைக்கு கீழ்படிய மறுத்த சிப்பாய்களுக்கு பத்து வருட கடுங்காவல் தண்டனை வழங்கி சிறையில் அடைத்தனர்.

புரட்சிக்கு தலைமை தாங்கிய ஆலிம்கள் மற்றும் அரசர்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக இந்தியாவெங்கும் ஒரே நேரத்தில் புரட்சி தொடங்குவதற்கு மே 31 ம் தேதி திட்டமிட்டு நிர்ணயித்திருந்தனர். ஆனால் மீரட்டில் சிப்பாய்களுக்கு 10 வருடம் தண்டனை கொடுக்கப்பட்டதால் அப்படைப்பிரிவு கோபம் கொண்டு மே 11ம் தேதியே ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சி தொடங்கியது.

சிப்பாய்கள் ஆயுதக்கிடங்கை கைப்பற்றி ஆயுதங்களை கைப்பற்றி, தங்களை அடிமை போல் நடத்திய ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை கொன்றொழித்து தில்லிக்கு அணிவகுத்தனர். இவ்வாறாக மீரட்டில் புயல் கரையை கடந்து தில்லி நோக்கி நகர்ந்தது.

புரட்சியில் ஆதாயம் தேடும் புல்லுருவிகள்

இந்தியச் சிப்பாய்கள் கொழுப்பு தடவிய தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த நிகழ்வு இந்தியாவெங்கும் இருந்த படைப்பிரிவுகளில் பெரும்பாலானவற்றில் நிகழ்ந்தது. இங்கு நாம் இந்துத்துவ உயர் சாதிப் பார்ப்பனர்களின் ஒரு பொய் கூற்றை இனம் கண்டு கொள்வது அவசியமாகும்.

வி.டி. சாவர்க்கர் (காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்) எழுதிய “1857 இந்திய சுதந்திரப் போர்” என்ற புத்தகத்தில் 1857ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி வங்காளத்திலுள்ள பாரக்பூர் என்ற இடத்தில் பிராமண சிப்பாயான மங்கள் பாண்டே என்பவர் கொழுப்பு தடவிய தோட்டாவைப் பயன்படுத்த எதிர்த்து தனது அதிகாரிகளை சுட்டு காயப்படுத்தினார். அவரை ஆங்கிலேயர் கைது செய்து தூக்கிலிட்டனர் இச்சம்பவம்தான் புரட்சிக்கே வித்திட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை மையமாக கொண்டே ஹிந்தி மொழியில் “மங்கள் பாண்டே” என்றும் ஆங்கிலத்தில் “தி ரைசிங்” என்றும் திரைப்படங்கள் வெளியாகி வரலாற்றை திரிக்க முயல்கின்றன.

இது குறித்து மாபெரும் வரலாற்று ஆசிரியரான அறிஞர் வில்லியம் டேல்ரிம்பிள் தனது நூலில் இப்படி விளக்குகின்றார்.

“மங்கள் பாண்டே நிகழ்வு புரட்சிக்கு வித்திட்டது என்பது சற்றும் பொருத்தமற்றது. அந்த நிகழ்வு நடந்தது மார்ச் 29ல் ஆனால் புரட்சி தொடங்கியதோ இரண்டு மாதம் கழித்து மே 11, 1857ல் ஆகும். உண்மையிலேயே மங்கள் பாண்டேயை தூக்கிலிட்டது தான் சிப்பாய்களை புரட்சி செய்ய தூண்டிதெனில் அவர்கள் ஏன் மங்கள் பாண்டேவை தூக்கிலிட்ட வங்காளத்திற்கு சென்று பழி வாங்காமல் ஆயுதங்களுடன் தில்லி சென்று பேரரசர் பகதூர் ஷாவை புரட்சிக்கு தலைமை தாங்க அழைத்தனர்?”

மேலும் புரட்சி ஐந்து மாதம் தில்லியில் மையம் கொண்டிருந்தது. ஆனால் எவரும் மங்கள் பாண்டே குறித்து பேசியதாகவோ எழுதியதாகவோ சான்றுகளில்லை.

எத்தனையோ தாழ்த்தப்பட்ட இந்திய சிப்பாய்கள் இத்தேசத்திற்காக உயிர் நீத்துள்ளனர். ஆனால் ஒரு பார்ப்பன சிப்பாய் தூக்கிலிடப்பட்டது தான் புரட்சியையே தூண்டியது என்பது புரட்சியில் தாங்கள் மட்டுமே ஆதாயம் தேட முயற்சிக்கும் இந்துத்துவ பார்ப்பனிய உயர் ஜாதியினரின் திட்டமிட்ட சதியாகும்.

புரட்சிக்கு பேரரசர் தலைமை ஏற்பு மீரட்டிலிருந்து கிளம்பிய புரட்சிப்படை தில்லிக்குள் 1857, மே 11ம் தேதி திங்கட்கிழமை நுழைந்தது. அன்று முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானின் 16ம் நாளாகும். சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான போராட்டமான பத்ரு போர் ரமலானில் தான் நடைபெற்றது. அத்தகைய புனித மாதத்தில் இந்தியாவின் சுதந்திரப் புரட்சி தொடங்கியது.

இந்திய முஸ்லிம்களை புத்தெழுச்சி பெறச் செய்தது. தில்லியின் பாதுகாப்பு பொறுப்பிலிருந்த வெள்ளையர் அனைவரையும் கொன்று மதியத்திற்குள் தில்லியை வெள்ளையரின் நிர்வாக வளையத்திலிருந்து முற்றிலும் விடுவித்தனர். பின்பு பேரரசரின் அரண்மனைக்கு சென்று புரட்சிக்கு அவரின் ஆசியும் அனுமதியும் கோரி விண்ணப்பித்து இந்திய விடுதலைப் போருக்கு தலைமை தாங்க கோரினர். இது குறித்து ஆங்கிலேய விசாரணை பதிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“பேரரசர் தன் அரியாசனத்தில் அமர்ந்தவுடன், படைத்தலைவர்களும், சிப்பாய்களும் அவர் முன் ஒருவர் பின் ஒருவராக வந்து தங்கள் தலைகளை சாய்த்து அவரின் பொற்கரத்தை தங்கள் தலையின் உச்சியில் வைத்து ஆசி வழங்குமாறு கோரினர். பேரரசரும் அவ்வாறே புரட்சிக்கு தன் ஆசியை வழங்கி தலைமை ஏற்றார்.”

உலக வரலாற்றில் இது ஓர் அதிசய நிகழ்வு ஹிந்து மற்றும் அனைத்து மத மொழி மற்றும் இன இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஒரு முகமதிய அரசரிடம் ஆசி பெற்று அவரின் தலைமையின் கீழ் ஆங்கிலேயரை எதிர்த்து போராடியதும் புரட்சிக்காக தேச விடுதலைக்காக தன் இன்னுயிர் நீத்ததிலும் முகலாயர் எப்படி மத நல்லிணக்கத்துடன் ஆட்சி புரிந்தனர் என்பதிலும் அம்மக்கள் எவ்வளவு பரந்த மனப்பான்மையுடன் இருந்தனர் என்பதும் தற்கால தலைமுறையினருக்கு படிப்பினையாக உள்ளது.

புரட்சியின் நாயகன் மிர்சா முகல்

இந்திய விடுதலைப் போர் குறித்து அறியும் நாம் இப்புரட்சியின் முக்கிய கதாநாயகன் ஒருவரை குறித்து அறிவது அவசியம். அவர் பேரரசரின் ஐந்தாவது மகனான மிசர் முகல் மிர்சா முகலின் தாய் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் பரம்பரையில் தோன்றியவர் என்று வரலாறு பதிவு செய்துள்ளது அவரின் பெயர் “ஷரபுல் மஹல் சைய்யிதானி” என்பதாகும்.

உண்மையில் மிர்சா முகல் தான் புரட்சியை ஆரம்பம் முதல் இறுதி வரை வழி நடத்தியவர். புரட்சிக்கு முன்பே நாடெங்கிலுமுள்ள புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.

அதனால் புரட்சிப் படை தில்லிக்குள் நுழைந்தவுடன் தங்களின் பிரதான தலைமை தளபதியாக மிர்சா முகலை நியமிக்கும் படி பேரரசரிடம் விண்ணப்பித்து அவரை தங்களின் தலைமை தளபதியாக ஏற்றனர். புரட்சி குறித்து கிடைக்கப் பெற்றுள்ள ஆவணங்களில் மிகுதியானவை மிர்சா முகலின் ஆணைகள், தீர்ப்புகள் மற்றும் கடிதங்கள் தான் என்று வில்லியம் டேல்ரிடார்லிம்பிள் கூறுகிறார்.

இவர் தளபதியாக பதவியேற்றவுடன் முதன்மையாக அரண்மனைக் காவலர்கள் மற்றும் சிப்பாய்களை கொண்டு தில்லி மாநகரில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டினார்.

சிப்பாய்களுக்கு உணவு வழங்குவதற்காக நாடெங்கும் பணியாளர்கள் அனுப்பப்பட்டு உணவு சேகரிக்கப்பட்டு முறையாக வினியோகிக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள எல்லா அரசர்கள், நவாப்கள் மற்றும் இன, மொழி, மதத் தலைவர்களுக்கு கடிதம் எழுதி இந்திய விடுதலைப் போரில் பங்கு கொள்ள அழைத்தார். எல்லாவற்றிக்கும் மேலாக இறுதி வரை புரட்சியில் பங்கு கொண்டு ஷஹீத் ஆனார்.

ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையின் காவலர் பகதூர் ஷா:

இந்தியாவில் ஹிந்துமுஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படவிருந்த சமயங்களிளெல்லாம் உடனடியாக பேரரசர் அவர்கள் குறுக்கிட்டு அழகிய சமரச தீர்வை வழங்கினார்.

மே19 ம் தேதி தில்லியிலுள்ள மௌலவி ஒருவர் பள்ளிவாசலில் ஜிஹாதிய கொடி ஒன்றை ஏற்றி இப்புனிதப் போர் இஸ்லாமியருக்கு மட்டும் உரியது என்று சொந்தம் கொண்டாடினார். பேரரசர் உடனடியாக இக்கொடியை இறக்கச் செய்தார்.

இவ்விடுதலைப் புரட்சி ஆங்கிலேயருக்கு எதிராக ஹிந்து மற்றும் முஸ்லிம் அனைவரும் சேர்ந்து போரிடும் ஒன்றாகும். இது இஸ்லாமியருக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல, என்று தீர்ப்புச் செய்தார்.

இதே போல் மே 20 அன்று ஒரு மௌலவி பேரரசரை சந்தித்து தில்லியிலுள்ள இந்துக்கள் ஆங்கிலேயருக்கு உளவு தகவல்களை அளித்து மறைமுகமாக புரட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் அதனால் தில்லியிலுள்ள இந்துக்களுக்கு எதிராக போர் புரிய அனுமதி வேண்டினார். அதற்கு பேரரசர் கூறியதாவது.

“ஹிந்துக்களும், முஸ்லிம்களும் எனது இரு கண்கள் இவர்கள் இருவரும் இணைந்து இப்புரட்சியில் ஈடுபட்டால் மட்டுமே வெற்றி சாத்தியம். இப்புரட்சி முழுக்க ஆங்கிலேயருக்கு மட்டுமே எதிரானது. இது ஹிந்துக்களுக்கு எதிரான ஒன்றல்ல”

இன்று ஏகாதிபத்தியம், ஊழல், ஜாதி மற்றும் மதவாதத்திற்கு எதிராக போராடும் இந்திய தலைமுறையினர் மேற்கூறிய பேரரசரின் வழிமுறையை பின்பற்றினால் மட்டுமே வெற்றி சாத்தியம். மதவாதம் பேசி பிரிவினையை ஏற்படுத்தி வரும் இந்துத்துவ சக்திகளை மக்கள் ஒதுக்கினால் மட்டுமே வெற்றி நிச்சயம்.

போரிலும் மனித உரிமைக்கு போராடிய மாமன்னர்:

வெள்ளையருக்கு எதிராக பேரரசர் போர் தொடுத்திருந்த போதிலும் ஆங்கிலேய பெண்கள், குழந்தைகள் மற்றும் பலவீனமான 42 பேர்களை சிப்பாய்களிடமிருந்து காப்பாற்றி தன் அரண்மனை சமையல் அறைக்கு அருகில் மறைத்துக் காப்பாற்றி வந்தார்.

சில நாட்களுக்கு பின் இவ்விசயம் கேள்விப்பட்டு ஆங்கிலேயரால் பாதிக்கப்பட்டச் சிப்பாய்கள், பேரரசரிடம் வருகை புரிந்து உடனே 42 பேரையும் தங்களிடம் ஒப்படைக்குமாறு வேண்டினர். அவர்களை கொடுத்தால் நிச்சயம் கொலை செய்து விடுவர் என்று அஞ்சி பகதூர் ஷா மறுத்து விட்டார்.

ஆனால் ஆயுதமேந்திய சிப்பாய்கள் கோபம் தலைக்கேறி அவர்களை தராவிட்டால் பேரரசரின் பிரதமர் மற்றும் அரசவையில் சிலரை ஆங்கிலேயருக்கு உதவியதற்காக கொன்று விடுவதாக மிரட்டினர்.

இந்நிலையில் ஹிந்து மற்றும் முஸ்லிம் சிப்பாய்களை தனித்தனியாக பிரியுமாறு கட்டளையிட்டார் பேரரசர். பின்பு ஹிந்து மற்றும் முஸ்லிம் சிப்பாய்களிடம் “உங்கள் மதம் மற்றும் மார்க்கம் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகளை கொல்ல அனுமதிக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினர். சிப்பாய்கள் பதிலின்றி மௌனமாயினர். எனினும் சிறிது நேரத்தில் சிப்பாய்களுக்கு மத்தியில் ஒரு வதந்தி பரவியது.

அதாவது, இந்த ஆங்கிலேய கைதிகளை விட்டு விட்டால் பின்பு இவர்கள் நம்மை அடையாளம் காண்பித்து கொலை செய்யத் தூண்டுவர் அதனால் எவரும் மிஞ்சாமல் கொல்லப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர்.

இதனைச் கேட்டு பேரரசர் கண்ணீர் விட்டு அழுது அப்பாவிகளை கொல்ல வேண்டாம் என்று தடுத்தார். ஆனால் கோப வெறியில் இருந்த சிப்பாய்கள் அதற்கு செவி சாய்க்காது அவர்களை கொன்று விட்டனர். இது பேரரசருக்கு தீராத மனக்கவலையை உண்டு பண்ணியது. இதனால் புரட்சியின் இறுதி வரை பேரரசர் பாதிக்கப்பட்டிருந்தார்.

அன்று தில்லியில் குழுமியிருந்த 80,000த்திற்கும் அதிகமான சிப்பாய்கள் பேரரசரின் சொந்த படையை சேர்ந்தவர்கள் அல்ல. புரட்சிக்காக இந்தியாவெங்கும் இருந்து தில்லி வந்தவர்கள் ஆவர். எனவே ஆயுதமேந்திய அச்சிப்பாய்களை அவரால் தடுக்க இயலாமல் போனது. இது அவரின் உடல் மற்றும் மன நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது இப்படி போரிலும் மனித உரிமைக்கு போராடிய மாமனிதரானார் பேரரசர் பகதூர்ஷா.

புனித போராளிகளின் சாகசங்கள்.

அ. யுத்த தந்திரி பக்த் கான்

வடமேற்கு மாகாணத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு வந்த போராளி பக்த்கான் அவர்கள் தன் நண்பரான மௌலவி சர்ஃப்ராஜ் அலி அவர்களின் அழைப்பை ஏற்று தனது 400 முஜாஹிதுகளை கொண்ட படையுடன் புரட்சியில் பங்கு கொள்ள தில்லி வந்தார். இவரது வருகை மற்ற புரட்சி வீரர்களுக்கு புத்தெழுச்சி வழங்கியது. இவரது திறமை மற்றும் அனுபவத்தின் காரணமாக சிறிது காலம் ஒட்டுமொத்த புரட்சி படையின் பிரதான இராணுவ தளபதியாக பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

பக்த் கான் பிரதம தளபதியாக பதவியேற்றதும் புரட்சிப்படையை மூன்று பாகங்களாக பிரித்தார். தினமும் ஒரு படைப்பிரிவு கோட்டைக்கு வெளியே முற்றுகையிட்டுள்ள ஆங்கிலேய படைகளை தாக்க வேண்டும் இப்படி சூழற்சி முறையில் தினமும் ஆங்கிலேயரை தாக்கி பேரழிவை ஏற்படுத்தினார்.

ஆ. தற்கொலை படைப் போராளிகள்

இத்தாத் அலிகான் மற்றும் மௌலவி நவ்ஜிஸ் அலி ஆகியோரின் தலைமையில் 2000 முஜாஹிதுகள் எதிரியை சந்தித்து இறக்கும் வரை போராடுவோம் என்றும் இனி வீரமரணம் எய்தும் வரை உணவு கூட உட்கொள்ள மாட்டோம் என்றும் சபதம் செய்து அச்சபதத்திற்கு ஏற்ப இறுதிவரை போராடி ஷஹீதுகள் (வீரமரணம்) அடைந்து வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தனர்.

இ. பெண் போராளிகள்

புரட்சியின் ஒரு கட்டத்தில் எதிரிகளின் ஆயுத மழைக்கு அஞ்சி புறமுதுகிட்டு ஓடிய போது ராம்பூரில் இருந்து புரட்சியில் கலந்துகொள்ள வந்திருந்த இரண்டு முதிய இஸ்லாமிய பெண்கள் கையில் வாளேந்தி புறமுதுகிட்டு ஓடும் சிப்பாய்களை பார்த்து

“கோழைகளே! இதோ எந்த குண்டு மழைக்கு அஞ்சி நீங்கள் விரண்டோடுகின்றீர்களோ அதனை நோக்கி அச்சமின்றி நாங்கள் செல்கிறோம்.”

என்று சூளுரைத்து களம் சென்றனர். இதனைப் பார்த்து புறமுதுகிட்டு ஓடிய சிப்பாய்கள் நாணி தங்களின் தவறை உணர்ந்து மீண்டும் களம் திரும்பி போரிட்டனர். அப்பெண்மணிகள் குண்டு மழை பொழிந்த அக்களத்தில் புரட்சி வீரர்களை ஊக்கப்படுத்தியும் அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்களை கொண்டு வந்து கொடுத்தும் உதவி செய்தனர். போரின் முடிவில் ஒரு பெண் சிங்கம் சிறைப்பட்டது மற்றொருவர் குறித்து தகவலில்லை. அவர் வீரமரணம் அடைந்திருக்க வாய்ப்புண்டு.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப வீர முஜாஹிதுகளின் சாகசங்களில் நாம் பார்த்தது அணுவளவே.

இறுதி கட்டப் போர்

தில்லியை முற்றுகையிட்டிருந்த ஆங்கிலேயருக்கு தினசரி படைகளும் ஆயுதங்களும் மற்றும் உணவு பொருட்களும் வந்து குவிந்த வண்ணமிருந்தன. சீச்கியர்கள் சொந்த தேச மக்களுக்கு எதிராக ஆங்கிலேயருடன் கூட்டு சேர்ந்து அவர்களின் படையில் இணைந்து போராடினர்.

முற்றுகை ‘மே’ 18ல் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீண்டதால் புரட்சி படையினருக்கோ உண்ண உணவு கிடைக்கவில்லை. அரண்மனைக்கு வரும் குடிநீரை கூட தடுத்துவிட்டனர். மேலும் பீரங்கிப் படைகளை அதிகமாக வரவழைத்து அரண்மனையின் சுற்றுச் சுவர்களை தகர்த்தும், வெடி மருந்துகளால் செங்கோட்டையின் பிரதான வாயில்கள் அனைத்தையும் தகர்த்து தில்லிக்குள் நுழைய முற்பட்டனர்.

சிப்பாய்களுக்கு உணவு வழங்க பணமின்றி இறுதியில் பேரரசர் அரண்மனை குதிரைக் கடிவாளங்கள், நாற்காலிகள் மற்றும் சமையல் பாத்திரங்களை விற்று உணவு வாங்கி படை வீரர்களுக்கு வழங்கினார்.

எதிரிகள் கோட்டைச் சுவரை தகர்த்து முன்னேறுவதை அறிந்த மிர்சா முகல் மற்றும் பக்த் கான் ஆகியோர் தில்லி மாநகரையே ஆங்கிலேயருக்கு ஒரு பொறியாக மாற்றினர். தில்லியின் எல்லாப் புறமும் தடைகள், பதுங்கு குழிகள் மற்றும் பாதுகாப்பு வலையங்களை ஏற்படுத்தி எதிரி உள்ளே நுழைந்தால் வளைக்குள் சிச்கிய எலியாக அவர்களை நசுக்கிட திட்டமிட்டனர்.

இதனை அறியாமல் ஆங்கிலேய இராணுவம் “நிக்கல்சன்” எனும் கொடும் ராணுவ தளபதியின் தலைமையில் தில்லிக்குள் நுழைந்தனர். சிறிது நேரத்திற்குள் தன் தவறை உணர்ந்து கொண்டனர். எங்கிருந்து குண்டுகள் வருகின்றன என்று தெரியாதளவு குண்டு மழைகள் ஆங்கிலேயரை துளைத்தன.

ஆங்கில தளபதி நிக்கல்சன் விலாவில் குண்டு பாய்ந்து சரிந்தான். நிக்கல்சன் புரட்சி தொடங்கியது முதல் படை நடத்தி வந்த ஆலிம்களையும், சிப்பாய்களையும், அப்பாவி பொது மக்களையும் விசாரணையின்றி கொடூரமாக வழியெங்கும் சுட்டுக் கொன்றவன். ஒரு ஊரின் நுழைவாயிலில் பல்வேறு தூக்கு மரங்களில் பலர் தூக்கிலிடப்பட்டிருப்பதை வைத்து அவ்வூருக்கு நிக்கல்சன் வந்து சென்றதை ஆங்கிலேயரே அறிந்து கொள்வர். அத்தகைய தீய சக்தி ஒருவன் ஓர் இளம் இஸ்லாமிய படை வீரனால் வீழ்த்தப்பட்டான்.

நிக்கல்சனின் வீழ்ச்சி படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு ஆகியவை ஆங்கிலேய தலைமை தளபதி வில்சன் அவர்களை போரிலிருந்து பின் வாங்கி விடலாம் என்று முடிவு கொள்ளச் செய்தது. ஆனால் பிற படைத்தளபதிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டத்தை கை விட்டு தொடர்ந்து போர் புரிய முடிவு செய்தார்.

போராளிகள் தரப்பிலும் இழப்பு கடுமையாக இருந்தது. மறுநாள் ஆங்கிலேயர் தங்களின் படை பலத்தைக் கூட்டிக் கொண்டு புதிய கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி தில்லியில் ஓடும் நதியின் நிறம் சிவப்பாகுமளவு போராளிகளை கொன்று குவித்தனர்.

முஜாஹிதுகளுக்கு வாழ்வா சாவா எனும் மரணப் போராட்டம் எனவே மரணத்தை தேர்ந்தெடுத்து இறுதி வரை போராடி மறு உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வீரத்தியாகிகளாயினர்.

செப்டம்பர் மாதம் 19ம் தேதி 1857ம் ஆண்டு தில்லி வீழ்ச்சியுற்றது புரட்சி புகழுடன் தோற்றது.

தில்லியில் குருதிப் புனல்:

வெள்ளையர் தில்லிக்குள் நுழைந்தவுடன் கண்ணில் பட்ட அனைவரையும் கொன்று குவித்தனர். குச்சா சீலன் என்ற பகுதியில் மட்டும் 1400 பேரை ஒரே நேரத்தில் வெட்டிச் கொன்றனர்.

செப்டம்பர் 20ம் தேதி தில்லி ஜும்ஆ மஸ்ஜிதில் வெள்ளையர் வெற்றி நடனமாடினர். பேரரசரின் குடும்ப உறுப்பினர்கள் தேடித் தேடி வேட்டையாடப்பட்டனர்.

நவாப்கள் மற்றும் இளவரசர்கள் விசாரணையின்றி தூக்கிலிடப்பட்டனர். தில்லியை கொள்ளையிட்டு அதன் பொக்கிஷங்களை கவர்வதற்கு தனிப்படை நியமிக்கப்பட்டது. இவர்கள் அரண்மனை மட்டுமின்றி தில்லியின் அனைத்து வீடுகளிலும் புகுந்து சூறையாடினர்.

எல்லா வீதிகளின் ஓரத்திலும் தூக்கு மேடைகள் நிறுவப்பட்டு ஆலிம்கள் மற்றும் இளைஞர்கள் விசாரணையின்றி தூக்கிலிடப்பட்டனர். இப்படி கொலையை கலையாக செய்தனர்.

தில்லி புராதன பொக்கிஷமான செங்கோட்டை 90% இடிக்கப்பட்டது. புகழ் பெற்ற பள்ளிவாசல்களான ஃபதேஹ்பூரி மற்றும் ஜீனதுல் பள்ளிகள் ஏலத்தில் விற்கப்பட்டன. அதனை சுன்னாமாஸ் என்ற வணிகர் ஏலத்தில் எடுத்து தனது சர்க்கரை மண்டியாக பயன்படுத்தினார்.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வெளியேறினர். தில்லி முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டது பெண்களின் நிலையோ சொல்லி மாளாது. காலிப், பெண்களின் நிலை குறித்து இப்படி பதிவு செய்கிறார்.

“தில்லியின் பெண் முதியவளாக இருந்தால் விபச்சார தரகராகவும், இளையவளாக இருந்தால் விபச்சாரியாகவும் ஆக்கப்பட்டாள்” அவ்வளவு கற்பழிப்புகள், கொடுமைகள் இழைக்கப்பட்டன.

பேரரசரின் மகன்களில் சிறுவர்கள் இருவரை தவிர அனைவரும் கொல்லப்பட்டனர். பேரன்கள் மற்றும் உறவினர்களும் கொல்லப்பட்டனர் தேச விடுதலைக்காக முன்னின்று போராடியதால் பேரரசர் பகதூர் ஷா தன் ஆட்சி மகன்கள் மற்றும் செல்வங்கள் அனைத்தையும் தியாகம் செய்தார்.

பேரரசரின் கைதும், அநீதியான விசாரணையும்:

1857ம் ஆண்டு செப்டம்பர் இருபத்தி ஒன்றாம் நாள் ஹுமாயுன் கல்லறையில் வைத்து பேரரசர் ஹட்ஸன் என்ற ஆங்கிலேய அதிகாரியால் கைது செய்யப்பட்டார். அவருடன் கைது செய்யப்பட்ட மிர்சா முகல் மற்றும் இரண்டு இளவரசர்களை விசாரணையின்றி ஹட்ஸன் தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அவர்களின் நகைகளை அபகரித்து இறந்த உடல்களை நிர்வாணமாக்கி மக்களுக்கு காட்சிப் பொருளாக்கினான்.

பேரரசரை அவரின் அரண்மனையிலேயே ஒரு இருண்ட அறையில் சிறை வைத்தனர். அவர் மீது ராஜ துரோகம் புரட்சியாளர்களுக்கு தலைமை ஏற்றது மற்றும் படுகொலை நிகழ்த்தியது ஆகிய குற்றச்சாட்டை சுமத்தி இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு நடத்தினர்.

நான்கு மாதத்திற்கு பிறகு ஜுன் 27ம் தேதி 1857ம் ஆண்டு விசாரணை துவங்கி மார்ச் 9ம் தேதி முடிவுற்றது முடிவில் அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாக கூறி பேரரசர் பகதூர் ஷாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அத்தண்டனையை கழிக்க தகுந்த சிறைக்கு அவரை மாற்ற தீர்ப்புச் செய்தனர்.

முகலாய பேரரசர் பகதூர் ஷாவை கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவம் விசாரித்ததும், தண்டனை வழங்கியதும் சர்வதேச சட்டப்படியும் அன்று நடைமுறையில் இருந்த ஒப்பந்தங்களின் படியும் அநீதியாகும்.

ஏனெனில் 1599ல் இங்கிலாந்து பாராளுமன்றமும் ராணியும் தங்களின் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வியாபாரம் செய்வதற்கு மட்டுமே அனுமதி வாங்கியிருந்தனர். கிழக்கிந்திய கம்பெனி என்பது சட்டப்படி ஒரு வியாபார நிறுவனமே; மாறாக, ஓர் அரசோ அல்லது அரசாள உரிமை பெற்ற ஒன்றோ அல்ல.

1765 ம் ஆண்டு ஆகஸ்டு 2 ம் தேதியில் தான் பேரரசர் பகதூர் ஷாவின் பாட்டனர் ஷா ஆலம் அவர்கள் கிழகிந்திய கம்பெனிக்கு வங்காளத்தில் வரி வசூலிக்கும் உரிமையை வழங்கினார். அதுகூட தில்லி பேரரசுக்கு கீழ்ப்படிந்து தான் வரி வசூலிக்க அனுமதி தரப்பட்டது.

கிழக்கிந்திய கம்பெனி தன் நயவஞ்சகத்தால் நவாப்கள் மற்றும் இளவரசர்களை சூழ்ச்சியின் மூலம் வீழ்த்தி தன் நிலப்பரப்பை அதிகரித்தனர். எனவே கிழக்கிந்திய கம்பெனி செய்தது தான் இராஜ துரோகம், மேலும் ஒரு நாட்டின் அரசரை எப்படி ஒரு வணிக நிறுவனம் விசாரித்து தண்டனை வழங்க இயலும்?

மேலும் தேசமும் தேசத்தின் சொத்துக்களும் சட்டப்படி முகலாயனருடையது. எனவே பேரரசர் பகதூர் ஷா எப்படி இங்கிலாந்து நாட்டின் ராணிக்கு துரோகம் செய்ததாக இராஜ துரோக குற்றச்சாட்டு சுமத்த முடியும்?

இன்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தேசங்கள் ஈராக்கின் மீது படையெடுத்து சதாம் உசேனை தூக்கிலிட்டது எப்படி சர்வதேச சட்டப்படி குற்றமோ அதைவிட பன்மடங்கு குற்றம் வணிக நிறுவனம் ஒன்று ஒரு பேரரசருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் இன்று போல் அன்றும் இந்த கொடுங்கோலர்களை எவரும் தட்டிக் கேட்கவில்லை. முந்நூற்றைம்பது ஆண்டுகள் இத்தேசத்தை ஆண்ட முகலாயரின் ஆட்சி இவ்வாறு அநீதியால் அழிக்கப்பட்டது.

பேரரசரின் புரட்சியின் விளைவுகள்:

முஸ்லிம்கள் புரட்சியை முன்நின்று நடத்தியதால் இஸ்லாமிய சமூகமே ஆங்கிலேயருக்கு எதிரானதாக பார்க்கப்பட்டது மதரஸாக்கள் புரட்சியின் மையமாக செயல்பட்டதால் பல மதரஸாக்கள் மூடப்பட்டன. புரட்சிக்கு வித்திட்ட பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு அரபி மொழியை அர்த்தமின்றி ஓதுவதற்கு ஏற்ப பாடத்திட்டங்கள்  வடிவமைக்கப்பட்டன.

ஆங்கிலேய வரலாற்றாசிரியர்கள் முஸ்லிம் மன்னர்களை தீயவர்களாகவும் அந்நியர் மற்றும் படையெடுத்து வந்தவர்கள் என்ற கருத்தைப் புகுத்தி பல இந்துக் கோயில்களை இடித்ததாக வரலாற்றை திரித்துக் கூறி ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைத்தனர். 1857க்கு பின் எழுதப்பட்ட பல வரலாறுகள் ஆங்கிலேயரின் பிரித்தாலும் சூழ்ச்சியின் விளைவே! அதன் தாக்கம் தான் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வரை தொடர்ந்து இன்று வெளிப்படுகிறது.

அரசு வேலை வாய்ப்பு, இராணுவம் மற்றும் காவல்துறையில் முஸ்லிம்கள் முற்றாக தடை செய்யப்பட்டனர். எனினும் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான விதை இப்புரட்சியின் மூலம் விதைக்கப்பட்டது.

தேசப்பற்றை மக்களிடையே விழித்தெழச் செய்து தேசிய இயக்கங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நீக்கப்பட்டு இந்தியா நேரடியாக ஆங்கிலேய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியர் அடிமை வர்க்கமல்ல அடிமைத் தளையில் அவர்களை வெகுநாள் வைத்திருக்க இயலாது என்பதை ஆங்கிலேயர் இப்புரட்சியின் மூலம் உணர்ந்தனர்.

பேரரசரின் சிறைவாழ்வும் மரணமும்

பேரரசர் 1858ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். நான்கு ஆண்டுகள் தனது ஆயுள் தண்டனையை கழித்து 1862ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி தனது எண்பத்தி ஏழாவது வயதில் இந்திய தேசத்தின் முதல் விடுதலைப் போரின் நாயகன் ஓர் சிறைவாசியாக அந்நிய தேசத்தில் மரணித்தார்.

இந்திய தேசத்தின் பெரும்பகுதியை தனது ஆட்சிப்பரப்பாக கொண்டு ஆண்ட முகலாய வம்சத்தின் இறுதி பேரரசர் தன் தேசத்தின் விடுதலைக்காக போராடி அந்நிய தேசத்தில் ஓர் சிறைவாசியாக மரணித்தார்.

அன்று மாலையே அவரது புனித உடலை விரைவாக ஆங்கிலேய அதிகாரி டேவிஸ் எவருக்கும் தெரியாமல் அடக்கம் செய்து அவரது உடல் உடனடியாக அழிய வேண்டும் என்று சுண்ணாம்புக்கல் கொண்டு மண்ணறை மூடப்பட்டது.

மேலும் அவரது கல்லறையை எவரும் அடையாளம் கண்டு விடக்கூடாது என்று தரையோடு தரையாக சமதளமாக்கப்பட்டது. 1991ம் ஆண்டு பர்மா நகராட்சியினர் சாக்கடைப் பணிக்காக நிலத்தை தோண்டிய போது தான் பேரரசரின் உண்மையான மண்ணறையை அடையாளம் கண்டனர்.

அவரின் உடலை விரைவாக மக்கிப்போகச் செய்த ஆங்கிலேயரால் அவர் விதைத்த புரட்சிப் போரின் சிந்தனையை இத்தேச மக்களிடமிருந்து அழிக்க முடியவில்லை. அதனால் தான் 1940களில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வெள்ளையருக்கு எதிராக இந்திய தேசியப் படையை நிறுவி போர் தொடுக்கும் முன்பு பேரரசர் பகதூர் ஷாவின் மண்ணறைக்கு சென்று பிரார்த்தித்து ஆசி பெற்ற பின்பே நடத்தினார்.

“இத்தேசத்திற்காக பெரும் தியாகம் புரிந்த இம்மானிதரை இன்று இத்தேசம் மறந்தது இத்தேசத்தின் துரதிஷ்டமே. இவரது வரலாற்றை குறித்து ஆய்வு செய்த வில்லியம் டேல்ரிம்பிள் அவர்கள் இது குறித்து கூறுகையில்

“1857ம் ஆண்டு சிப்பாய் புரட்சி மற்றும் பேரரசர் பகதூர் ஷா குறித்த ஆவணங்கள் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. நான் சென்று தூசி தட்டி அதனை எடுத்துப் படிக்கும் வரை இத்தேசத்தின் ஒரு வரலாற்று ஆய்வாளர் கூட அதனைப் படித்து மக்களிடம் சமர்ப்பிக்காதது துரதிஷ்டமே”

சுதந்திரத்திற்கு பின் இவரது வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டது. இத்தேசத்திற்காக முஸ்லிம்கள் சிந்திய இரத்தங்களும், இழந்த இழப்புகளும் இமயத்தையும் விஞ்சியவை.

ஆனால் முஸ்லிம்களின் தியாகத்தின் பயனை இன்று பிறர் அனுபவிக்கின்றனர்.

இளைய தலைமுறை தன் வரலாற்றிலிருந்து தன்னை எழுச்சிப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று தேசம் ஏகாதிபத்திய சுரண்டல், ஊழல், ஜாதி மற்றும் மதவாதத்தால் அடிமைப்பட்டுள்ளது.

அதன் அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்து உண்மையான சுதந்திரக் காற்றை அனைவரும் ஜாதி, மத பேதமின்றி சுவாசிக்கச் செய்ய வேண்டிய கடமை இன்றைய இளைய தலைமுறையினருக்கு உண்டு.

இவன்

இப்னு முஹம்மது

குறிப்பு :

இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள எல்லா வரலாற்று நிகழ்வுகளும் ஆதாரப்பூர்வமானவை.

குறிப்புதவி நூல்கள் :

The Last mughal by william darlymple
Pritchett/Nets of Awareness.
Trial Evidences
NAM, Wilsan Letters
The Hindu , May 26, 2012
DVA 31 May 1857.



[][][]

No comments:

Post a Comment