Translate

Thursday 2 October 2014

முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து உலக சிந்தனையாளர்கள் என்ன கூறுகிறார்கள்..?








சிலுவைப் போர்கள் நடைபெற்று வந்த நூற்றாண்டுகளில் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு எதிராக எல்லா வகையான அவதூறுகளும் பழிச்சொற்களும் புனையப்பட்டு பரப்பப்பட்டு வந்தன. ஆனால் மத சகிப்புத்தன்மை, கருத்து சுதந்திரம், ஆகியவற்றை தனது தனித் தன்மைகளாகக் கொண்ட நவீனயுகம் பிறந்தது.! அத்துடன் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வையும் பண்புகளையும் விவரிப்பதில் மேலை நாட்டு அறிஞர்களின் அணுகுமுறை பெருமளவிற்கு மாறிவிட்டிருந்தது. இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றி பிற சமய அறிஞர்களின் கருத்துக்கள் இந்த சிறு உரையில் தொகுத்துத் தரப் பட்டுள்ளன. அந்த அறிஞர்களைப் பற்றி மேலே நாம் தெரிவித்த கருத்து நியாயமானதே என்பதை அவை காட்டுகின்றன. ஆனால் மேற்குலகம் முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றிய மாபெரும் உண்மையொன்றைக் கண்டுபிடிக்க இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டியுள்ளது. அது முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் உண்மையான தூதர், மனித குலம் முழுமைக்கும் வழிகாட்டிட வந்த இறைதூதர் என்பதே அந்தப் பேருண்மையாகும்.


உணர்ச்சி கலவாத ஆய்வுநோக்கு, ஆழமான சிந்தனை, ஆகியவற்றை மேற்குலகம் பெற்றிருந்தும் முஹம்மது(ஸல்) அவர்களின் இறை தூதுத்துவ அந்தஸ்தைப் புரிந்துக் கொள்ள ஆய்வுரீதியான, நேர்மையான முயற்சி எதனையும் இதுவரை அது மேற்கொள்ளவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நாணயம், நேர்மை, மற்றும் சாதனைகளுக்காக மேற்கத்திய அறிஞர்கள் அண்ணலாரைப் போற்றிப் புகழ்கின்றார்கள். ஆனால் தாம் சமர்ப்பித்த வாதம்-அழைப்பு இவர்களால் நிராகரிக்கப் பட்டிருக்கிறது. இந்த இடத்தில் தான் அவர்கள் தங்களின் நிலையை மறுபரிசீலனை செய்து வாய்மையான உளப்பூர்வமான ஆய்வை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது.


நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்து தெள்ளத்தெளிவான சில உண்மைகள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அவர்களின் தூதுத்துவம் குறித்து ஆய்வுரீதியான, பாரபட்சமற்ற தர்க்கரீதியான, முடிவை மேற்கொள்ள அவை உதவும். முஹம்மது(ஸல்) அவர்களை, அவர்களுடைய நாற்பதாவது வயது வரை, ஓர் அரசியல் வித்தகராகவோ, போதகராகவோ, பேச்சாளராகவோ, எவரும் அறிந்திருக்க வில்லை. அவர்கள் இயற்பியலுக்கு அப்பாற்பட்ட (ஆன்மீக இறையியல்) விசயங்களைக் குறித்தோ, ஒழுக்கவியல், சட்டம், அரசியல், பொருளாதாரம் அல்லது சமூகவியல் போன்ற துறைகளைக் குறித்தோ, அவற்றின் அடிப்படைக் கொள்கைகள் குறித்தோ விவாதித்துக் கொண்டிருந்ததை அதுவரை எவரும் கண்டதில்லை. அவர்கள் நிச்சயம் மிக உயர்ந்த ஒழுக்கப் பண்புகளும் வசீகரமான பழக்கவழக்கங்களும் உயர்ந்த பண்பாடும் கொண்டவர்களாகவே திகழ்ந்தார்கள். எனினும் வருங்காலத்தில் மாபெரும் புரட்சியாளராய்- மனித வரலாற்றையே மாற்றியமைக்கக் கூடியவராய், அவர்கள் திகழக் கூடும் என்று மற்றவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு அசாதாரணமான விஷயம் எதுவும் அவர்களிடம் தென்படவில்லை. ஆனால் அவர்கள் மகத்தான ஒரு புதிய செய்தியை ஏந்திக் கொண்டு அந்த மலைக் குகையிலிருந்து (ஹிரா மலைக்குகை) வெளியே வந்தபொழுது முற்றிலும் மாற்றப்பட்டுத் தான் இருந்தார்கள்.


மேற்கண்ட உயர்ந்த பண்புகளைக் கொண்ட ஒருவர், தம்மை இறைத்தூதர் என பொய்யாக வாதிட்டு, திடீரென மக்களை ‘ஏமாற்றக் கூடியவராய்’ ஆகமுடியுமா..? இதன் மூலம் தம் சமுதாய மக்களின் கோபத்திற்கும் எதிர்ப்பிற்கும் தம்மை உட்படுத்திக் கொள்ளவும் முன் வருவாரா..? இந்தத் துன்பங்களையெல்லாம் அண்ணலார் அவர்கள் எதற்காக சகித்தார்கள்..? என்கிற கேள்வி ஒருவருடைய உள்ளத்தில் எழலாம். அவர்களுடைய சமுதாய மக்கள் அவர்களைத் தங்கள் அரசராக ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்கள். தமது நாட்டின் செல்வ வளங்களையெல்லாம் அவர்களின் காலடியில் கொண்டுவந்து குவிப்பதாகக் கூறினார்கள். ஆனால் இவற்றுக்குப் பகரமாக அவர்கள் தமது மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்வதை மட்டும் விட்டு விட வேண்டும் என்று கோரினார்கள். ஆனால் அண்ணலார் அவர்கள் அந்த மக்களின் கவர்ச்சிகரமான வெகுமதிகளையெல்லாம் ஏற்க மறுத்து விட்டு தன்னந்தனியாக நின்று தமது சொந்த சமூகத்தார் தமக்கிழைத்த கொடுமைகள், அவமதிப்புகள், தமக்கெதிரான பகிஷ்காரம், மற்றும் தமது உடல் மீதான தாக்குதல்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு, தமது மார்க்கத்தையும் பிரச்சாரம் செய்து கொண்டேயிருந்தார்கள். இஸ்லாம் தான் மனித குலத்திற்கு இறைவனால் வழங்கப் பட்ட ஒரே நெறியாகும்.; இறுதியில் அதுவே வெற்றி பெறுமெனும் நம்பிக்கை அவர்களிடம் ஆழமாகப் பதிந்திருந்தது. அத்துடன் வல்ல இறைவனின் பெருந்துணையும் அவர்களுக்கு இருந்தது. அதனால் தான் தம்மை அழிப்பதற்காகச் செய்யப்பட்ட எல்லா சூழ்ச்சி, சதி திட்டங்களுக்கும், தமக்கு நேரிட்ட எல்லா வெறுப்பு, எதிர்ப்புகளுக்கும் அசைந்து கொடுக்காத கொள்கைக் குன்றாக அவர்கள் நிமிர்ந்து நின்றார்கள். மேலும் அவர்கள் கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் போட்டி சக்தியாக-அவர்களுக்கு எதிரானவர்களாக வருகை தந்திருப்பார்களாயின் இயேசுவின் மீதும் மோசேயின் மீதும் மற்ற இறைத்தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்வது அவசியம் என்று கூறியிருப்பார்களா..? இவ்வாறு மற்ற இறைத்தூதர்கள் மீது நம்பிக்கை கொள்ளாமல் எவரும் முஸ்லிமாக இருக்க முடியாது என்கிற அளவிற்கு அதனை இஸ்லாத்தின் அடிப்படை அம்சமாக வலியுறுத்திருப்பார்களா..?


எழுதப் படிக்க தெரியாதவராகவும் நாற்பதாண்டு காலம் வரை அமைதியான சாதாரணமான ஒரு வாழ்க்கையை நடத்தி வந்தவராகவும் இருந்தும், அவர்கள் தாம் கொண்டுவந்த இறைச் செய்தியை மக்களிடையே பிரச்சாரம் செய்யத் தொடங்கிய போது அரபுலகம் முழுவதும் மதிப்பச்சத்துடனும் வியப்புடனும் அவர்களை ஊன்றி கவனித்தது. அவர்களுடைய வசீகரமான நாவன்மையாலும், உயர் ஆற்றல்களாலும் ஈர்க்கப்பட்டது. அரபுக் கவிஞர்கள், போதகர்கள், சொல்லேருழவர்களின் பெரும் படைகளெல்லாம் ஒன்று சேர்ந்தும் கூட அவர்களுடைய சொற்பொழிவுக்கு நிகரான ஒரு சொற்பொழிவைச் சமர்ப்பிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு அவர்களின் சொல்வன்மை நிகரற்றதாய் இருந்தது. இவையனைத்தும் அவர்களின் தூதுத்துவம் உண்மையானதே என்பதற்கான மறுக்க முடியாத சான்றுகள் அல்லவா..? இறுதியாக அவர்கள் ஆட்சியதிகாரத்தை அடைந்து விட்ட பின்னரும் கூட எளிமையான கடினமான வாழ்க்கையை ஏன் வாழ வேண்டும்.? அவர்கள் மரணமடைந்த போது சொன்ன இறுதி நேரச் சொற்களை சற்று சிந்தித்துப் பாருங்கள். ‘’நபிமார்களுக்கு (சொத்துக்களில்) வாரிசுகள் எவருமில்லை. நாங்கள் விட்டுச் செல்லும் செல்வம் எதுவாயினும் அவை அறப்பணிகளுக்காக செலவிடப்பட வேண்டியவையே..!” 


நபிகள் நாயகம் அவர்களைப் பற்றி நல்லறிஞர் கருத்துக்கள்..! 




“உயர்ந்த குறிக்கோள், குறைவான சிறிய அளவிலான வசதி வாய்ப்புகள், பிரமிக்க வைக்கும் பயன்கள், ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் ஒப்பிட எவருக்குத் தான் துணிச்சல் வரும்.? 


புகழ்மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள்; அவர்கள் செய்ததெல்லாம் இவைத் தாம்.! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்து விட்ட உலகாதயக் கோட்டைகளைத் தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முஹம்மத் அவர்களோ போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள், அரசவம்சங்கள், ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றிக் கொள்ள வில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான உள்ளங்களையும் ஈர்த்தார்கள். வழிபாட்டுத் தளங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துக்களையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும், ஆன்மாக்களையும், ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களைப் பதித்தார்கள். 


வெற்றியின் போது அவர்கள் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத் தன்மை, தாம் ஏற்றுக் கொண்ட கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக் கொண்ட அவரது உயர் நோக்கம், ஆழ்ந்த விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டுமென்ற குறுகிய எண்ணம் கொள்ளாமல் உலகப் பற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவர்களின் முடிவில்லாதத் தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடன் அவர்கள் நடத்தி வந்த மெஞ்ஞான உரையாடல்கள், அவர்களின் மரணம், மரணத்திற்குப் பின்னரும் அவர்கள் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர்கள் ஓர் ஏமாற்றுக்காரர் என்றோ, மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிடவில்லை. மாறாக, சமயக்கொள்கை ஒன்றை நிலைநாட்டிட அவர்களுக்கிருந்த மனோ உறுதியைத் தான் பறை சாற்றுகின்றன.


அவர்களுடைய இந்த சமயக் கொள்கை இரண்டு அடிப்படைகளை கொண்டது. ஒன்று இறைவனின் ஒருமை; மற்றொன்று இறைவனின் ஸ்தூலப் பொருளற்றத் தன்மை; முந்தியது இறைவன் என்றால் என்னவென்று எடுத்துரைக்கின்றது. பிந்தியது இறைவன் என்னவாக இல்லையென்பதை தெரிவிக்கின்றது. ஒன்று தவறான கடவுள்களைத் தனது பலத்தால் தூக்கியெறிகின்றது; மற்றொன்று பிரச்சார துணையுடன் ஒரு புதியக் கருத்தை உருவாக்க விழைகின்றது.


தத்துவப் போதகர், சொற்பொழிவாளர், இறைத்தூதர், சட்டநிபுணர், மாபெரும் போர்வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப் பூர்வமான கொள்கைகள், நம்பிக்கைகளை நிலைநாட்டியவர், மாயைகள், கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கைவழி நாகரீகத்தை உருவாக்கியளித்த மாமேதை, ஒரே ஆன்மீக தலைமையில் இருபது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர் தான் முஹம்மத் அவர்கள்.!”

(Lamartine, Historie de la Turkquie, Paris, 1854, Vol II, pp 276-277) 




[][][]





“அவர் ஒரே நேரத்தில் சீசரும் போப்’பும் ஆவார்; ஆனால் அவர் போப்’பின் பகட்டுகள்,ஆடம்பரங்கள் ஏதுமில்லாத போப் ஆவார். சீசரின் பாதுகாப்புப் படைகள் ஏதுமில்லாத சீசர் ஆவார்.


தயார் நிலையிலுள்ள இராணுவமோ,நிலையான, நிர்ணயமான வருமானமோ இல்லாமல் (மக்களின் உள்ளங்களையும் பெரும் நிலப்பரப்பையும்) வெறும் இறைவனின் இசைவாணையை, தெய்வீக அனுமதியை மட்டுமே துணையாகக் கொண்டு ஆட்சி புரிந்ததாகக் கூறிக்கொள்ளும் உரிமை, மனித வரலாற்றில் எவராவது ஒருவருக்கு இருக்குமானால், அவர் முகம்மது நபி அவர்களே ஆவார்; ஏனெனில் ஆட்சியதிகாரம் செலுத்திடத் தேவையான கருவிகள், துணைச் சாதனங்கள் ஏதுமில்லாமலேயே (ஆன்மீக மற்றும் உலக) அதிகாரங்கள் அனைத்தையும் அவர் பெற்றிருந்தார்..!” 

(By Bosworth Smith, Mohammad and Mohammadanism, London 1874, Page # 92)




[][][]







‘’உலகின் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக முஹம்மதை நான் தெரிவு செய்தது, சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். ஆனால் சமயஞ்சார்ந்த மற்றும் சமயச் சார்பற்ற வட்டத்தில் உலகின் மாபெரும் வெற்றியை பெற்றவர், மனித சரித்திரத்தில் முஹம்மது அவர்கள் ஒருவரே..!’’

(M.H.Hart, The 100 ! A Ranging of the most influential persons in History, New York, 1978, PP.33)





[][][]






“தாம் கொண்ட கொள்கைகளுக்காக, நம்பிக்கைகளுக்காக எந்தவித சித்ரவதைகளையும், கொடுமைகளையும் சகித்துக் கொண்டு, எத்தகைய தியாகங்களுக்கும் தயாரான முஹம்மது அவர்களின் நிலை, அண்ணலார் அவர்களை தலைவராக கருதி பின்தொடர்ந்த அவர்களின் தோழர்களுடைய உயர்ந்த ஒழுக்கப்பண்புகளும், அவர்கள் இறுதியில் நிகழ்த்திய சாதனையின் மகத்துவமும், முஹம்மது அவர்களின் அடிப்படையான நேர்மையை, நம்பகத் தன்மையை நன்கு உலகிற்கு எடுத்துரைக்கின்றன. முஹம்மது அவர்களை ஒரு ஏமாற்றுக்காரராகவோ மோசடிக்காரராகவோ கருதுவது பல கேள்விகளையும் முரண்பாடுகளையும் தான் எழுப்புகிறதே தவிர, பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடியதாக இல்லை. மேலும் உலக வரலாற்றின் மகத்தான மனிதர்களில் முஹம்மதுவைப் போல மேற்குலகில் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் வேறெவருமில்லை.!“

(W. Montgomery, Mohammed at Mecca, Oxford 1932, pp 52.)



[][][]







‘’தமக்கு முன்னால் வாழ்ந்த பெரும் இறைத்தூதர்கள் அனைவரையும் போலவே முஹம்மதும் தமது இயலாமையை உணர்ந்து, இறைச்செய்தியை ஏந்திச் சென்று மக்களிடையே எடுத்துரைப்பவராகப் பணியாற்றிட முதலில் தயங்கினார். ஆனால் வானவர், ’’ஓதுவீராக..!’’ என்று கட்டளையிட்டார். நாம் அறிந்தவரை முஹம்மது எழுதவோ, படிக்கவோ இயலாதவராகவே இருந்தார். பூமியின் ஒரு பெரும் பகுதியில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்த இருந்த இறை உதிப்பான, ’’பேரண்டத்தின் இறைவன் ஒருவனே..!’’ என்கிற சொற்களை அவர் அப்படியே எடுத்துக் கூறினார். 


எல்லா விசயங்களிலும் முஹம்மது அவர்கள் மிகவும் செயல்பூர்வமானவராய் – நடைமுறைப் படுத்திட உகந்த முறையில் செயல்படக் கூடியவராய் திகழ்ந்தார். அவர்களின் அன்பு மகனார் இப்ராஹீம் மரணமடைந்த பொழுது கிரகணம் ஒன்று நிகழ்ந்தது. உடனே இப்ராஹிமின் மரணத்திற்காக, ’இறைவனே தனிப்பட்ட முறையில் துக்கம் தெரிவிக்கிறான்.!’ என்னும் வதந்திகள் எழுந்தன. ஆனால் முஹம்மதோ, ‘’கிரகணம் பிடிப்பது ஓர் இயற்கை நிகழ்வாகும்; இத்தகைய விசயங்களை ஒரு மனிதரின் மரணத்துடனோ பிறப்புடனோ தொடர்புப் படுத்திப் பார்ப்பது மூட நம்பிக்கை.!” என்று அறிவித்தார். 


முஹம்மதின் மரணத்தின்போது கூட அவரைக் கடவுளாக்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப் பட்டது. ஆனால் அவருக்குப்பின் அவரது நிர்வாக வாரிசாக வரவிருந்த அபூபக்கர் சித்திக் அவர்கள் சமய வரலாற்றிலேயே தலைசிறந்த சொற்பொழிவு ஒன்றின் வாயிலாக இந்த மனவியாதியை முளையிலேயே கிள்ளியெறிந்து விட்டார். அந்தச் சொற்பொழிவின் முக்கிய பகுதி இது; “உங்களில் எவரேனும் இதுவரை முஹம்மது (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருப்பாராயின் அவர்கள், ‘முஹம்மது (ஸல்) இறந்துவிட்டார்கள்’ என்பதைத் தெளிவாக தெரிந்துக் கொள்ளுங்கள்.! நீங்கள் இறைவனைத் தான் வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்றால் அவன் என்றும் வாழ்பவன்; நிலைத்தவன் என்பதை அழுத்தமாக அறிந்துக் கொள்ளுங்கள்.!”

(James A Michener, ‘Islam; The Misunderstood Religion’ in The Reader’s digest (American Edition) in May, 1955, pp 68-70) 



[][][]






“அவர் இந்த மார்க்கத்தை பிரச்சாரம் செய்தது வியப்புக்குரியதல்ல; மாறாக அது என்றும் நீடித்து நிலைத்து நிற்கும் பாங்கு தான் வியப்புக்குரியதாகும். மக்கா நகரிலும், மதீனா நகரிலும் அவர் வகுத்தளித்த இஸ்லாமிய மார்க்கத்தின் அசல் வடிவம் தூய்மை கெடாமல், மாற்றப்படாமல், திரிக்கப்படாமல், பன்னிரண்டு நூற்றாண்டுகளில் நடந்தேறிய புரட்சிகள் பலவற்றிற்குப் பின்னரும் இன்றுவரை இந்திய, ஆப்பிரிக்க, துருக்கியப் பகுதிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றது. மற்ற சமயங்களைக் குறித்து, கற்பனை மற்றும் யூகத்தின் அடிப்படையிலான கருத்தோட்டங்களிலிருந்து முகம்மதியர்கள் ஒதுங்கியே நின்றனர். அவற்றை அடியோடு கிள்ளியெறிந்தும் விட்டனர்.

‘நான் ஒரே இறைவனின் மீது நம்பிக்கை கொள்கிறேன்; முஹம்மது அவர்கள் இறைவனின் திருத்தூதர் ஆவார்கள்..!’ என்பது தான் இஸ்லாத்தின் முன்மாதிரியான மாறுபாடற்ற ஒரேவிதமான பறைசாற்றலாகும். ஒருபுறம், கடவுள் பற்றிய அறிவார்ந்த கருத்தோட்டத்தின் உயர் மதிப்பு, கண்ணுக்குப் புலப்படும் உயிரினங்கள், சிலைகள் மற்றும் பொருள்களின் அளவுக்கு தாழ்த்தி மதிப்பிடாமை. இறைத்தூதருக்கு அளிக்கப் பட்ட உயர்மதிப்புகள். அவர்களும் ஒரு மனிதர்தாம் என்கிற அந்தஸ்தை தாண்டி (கடவுள் என்கிற அளவுக்கு) உயர்த்தி விடாமை, ஆகியன அண்ணலார் அவர்கள் அளித்துவிட்டுச் சென்ற சிரஞ்சீவியான கட்டளைகள் ஆகும். அவற்றை பின்பற்றுவோர் காட்டும் நன்றியுணர்வால் பகுத்தறிவு மற்றும் சமயத்தின் எல்லைகளுக்குள் முஸ்லிம்களை (மார்க்கத்தில் வரம்பு மீறாமல்) கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன..!”

(Edward Gibbon and Simon Ocklay, History of the Saracen Empire, London, 1870, pp 54.)


[][][]





“மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச் சிறந்த வாழ்க்கையைப் பற்றி அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்டபோது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன் எப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மைப் பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்துக் கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக்காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன.எல்லாத் தடைகளையும் வெற்றிக் கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தாம் காரணமே தவிர வாள்பலம் அல்ல.!”

(YOUNG INDIA, quoted in The Light, Lahore, for 16th September 1924, MAHATMA GANDHI.)



[][][]







‘’அனைத்துலக சகோதரத்துவம், மனித இன சமத்துவம் முஹம்மது அவர்கள் பறைசாற்றிய கொள்கைகள், மனித சமுதாயத்தின் சமூக முன்னேற்றத்திற்கு மாபெரும் சேவைகளை ஆற்றியிருப்பதை எடுத்துரைக்கின்றன. பெரும் சமயநெறிகள் அனைத்தும் இதே கொள்கையை போதித்திருக்கின்றன. ஆனால் இஸ்லாத்தின் தூதர் இந்தக் கொள்கையை நடைமுறை வாழ்வில் செயல்படுத்திக் காட்டினார்.அதன் மதிப்பு முழுமையாக உணரப்பட வேண்டும். அதன் சாதனை ஒப்புக் கொள்ளப் படவேண்டும். உலக மக்களின் மனசாட்சி விழித்தெழுந்து விட்டால் இனமாச்சரியங்கள் மறைந்து விடும்.; மனித இன சகோதரத்துவக் கொள்கை நடைமுறைக்கு வந்து விடும்..!”

(Prof. Ramakrishna Rao, Muhammad the Prophet of Islam, pp 7 )



[][][]








“ அரேபியாவின் இந்த தூதருடைய வாழ்க்கையையும், ஒழுக்கப் பண்புகளையும் தூய நடத்தையையும் படிப்பவர்கள் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைதூதர்களில் ஒருவரான இறுதித்தூதரைக் குறித்து உயர்வான எண்ணமே ஏற்படும். எனது இந்த நூலில் நான் பலருக்கும் தெரிந்த விசயங்களையே சொல்கிறேனென்றாலும், நானே அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை திரும்பத் திரும்பப் படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் மிக்க அந்த அரபு போதகரின் மீது புதிய ஒரு மதிப்பும் புதிய ஒரு மரியாதை உணர்வும் ஏற்படுவதை நான் உணர்கிறேன்..!”

(Annie Besant, The Life and Teachings of muhammed, 1932, pp 4 )

http://en.wikipedia.org/wiki/Annie_Besant


[][][]


இறைவன் அண்ணலார் மீது சாந்தி மழை பொழிவானாக..!

(நன்றியுடன்.. World Assembly of Muslim Youth (WAMY), RIYADH. K.S.A. பரப்புரையின் மொழியாக்கம்.) 



[][][]

No comments:

Post a Comment